மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 19 நவ 2019

தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு: தனி அலுவலர் பதில்!

தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு: தனி அலுவலர் பதில்!

விஷால் தலைமையில் இன்று தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற வழிவகையில்லை என்று சங்கத்தின் தனி அலுவலர் என்.சேகர் நேற்று மாலை(ஏப்ரல் 30) தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளாக இருந்த விஷால் உள்ளிட்டோர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், வைப்பு நிதி 7 கோடி ரூபாயை முறைகேடு செய்துவிட்டதாகவும் புகார் எழுந்தது. சங்கத்திற்கு ஏற்கெனவே அலுவலகம் இருந்த நிலையில் தி.நகரில் விஷால் தரப்பு புதிய அலுவலகம் தொடங்கியதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அலுவலகத்துக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்திய அதிருப்தி உறுப்பினர்கள், முதலமைச்சரை சந்தித்தும் முறையிட்டனர். இதன்விளைவாக ஏப்ரல் 27ஆம் தேதி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகத்தை தமிழக அரசு கையிலெடுத்தது. தமிழக அரசு சார்பில் மாவட்ட பதிவாளர் என்.சேகர் நியமிக்கப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சங்கத்தில் பிளவு ஏற்படுத்தவே தமிழக அரசு தனி அதிகாரியாக என்.சேகரை நியமித்துள்ளது. எனவே, அவரது நியமனத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று விஷால் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த புகார் மனுவை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், வரும் மே 7ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு தமிழக அரசுக்கு நேற்று(ஏப்ரல் 30) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், விஷால், தலைமையில் இன்று(மே 1) தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய அலுவலர் என்.சேகர், சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற வழிவகையில்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 30 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon