மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 19 பிப் 2020

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்: வரலாறு!

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்:  வரலாறு!

சபாநாயகர் தனபாலுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவதற்கான முன்மொழிவைத் திமுக நேற்று சட்டப்பேரவைச் செயலாளரிடம் அளித்திருக்கிறது. 3 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்குவதற்கு முன்னோட்டமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருகிறோம் என்று திமுக விளக்கம் அளித்துள்ளது.

சபாநாயகருக்கு எதிராக திமுக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவது இது முதல்முறையல்ல. ஏற்கனவே 1972ஆம் ஆண்டு திமுக-அதிமுக பிளவின்போது எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக செயல்பட்ட சபாநாயகர் மதியழகனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து அதனை நிறைவேற்றியும் உள்ளது திமுக.

1972ஆம் ஆண்டு திமுகவில் எம்ஜிஆர் கலகக் குரலை எழுப்பிய காலம். அப்போது சபாநாயகராக இருந்த மதியழகன் எம்.ஜிஆர். ஆதரவாளராக மாறியிருந்தார்.1972 நவம்பர் 13இல் சட்டசபை கூடிய போது கருணாநிதி அமைச்சரவை மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டதாக எம்ஜிஆர் குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த கருணாநிதி நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கொள்ள தயார் என பதிலடி கொடுத்தார். அப்போது சபாநாயகர் இருக்கையில் இருந்த மதியழகனோ, அவையில் எம்ஜிஆருக்கு சாதகமாக செயல்பட்டு அவையை ஒத்திவைத்தார்.

இதையடுத்து சபாநாயகர் மதியழகனுக்கு எதிராக திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தன. 1972 டிசம்பர் 2ஆம் தேதி மீண்டும் கூடிய சட்டசபையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவதாக திமுக அறிவித்தது. அரசியல் சாசனத்தின் 181ஆவது பிரிவின் படி சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் வரும் போது சபாநாயகர் சபைக்கு தலைமை தாங்கக் கூடாது என அவை முன்னவர் நாவலர் நெடுஞ்செழியன் வலியுறுத்தினார். ஆனால் மதியழகன் இதை நிராகரித்தார். சபாநாயகர் நாற்காலியில் இருந்தபடியே திமுக அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெறும் என்றார் மதியழகன்.

திமுக அரசோ துணை சபாநாயகர் விருதுநகர் சீனிவாசனை மற்றொரு நாற்காலியில் அமரவைத்து தற்காலிக சபாநாயகராக்கி சபையை நடத்தியது. அதில் 176 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன், சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தம் மீது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை சபாநாயகர் தனபால் எவ்வாறு அணுகவுள்ளார் என்பதே அரசியல் வட்டாரத்தில் தற்போது எழுந்துள்ள எதிர்பார்ப்பு.

செவ்வாய், 30 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon