மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 19 பிப் 2020

தலைமைச் செயலாளர் மீது உச்ச நீதிமன்றத்தில் புகார்!

தலைமைச் செயலாளர் மீது உச்ச நீதிமன்றத்தில் புகார்!

தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்த வழக்கறிஞர் பாலகிருஷ்ணன், இது தொடர்பாகத் தமிழக தலைமைச்செயலாளர் மீது புகார் தெரிவித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் நடந்த காவல் துறை அத்துமீறல் குறித்து வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக இந்திய குடியரசுத் தலைவர் சார்பில் தமிழக தலைமைச் செயலாளருக்கு நிறைவேற்றுதல் உத்தரவு அளிக்கப்பட்டது. தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து வழக்கறிஞருக்குத் தெரிவிக்க வேண்டுமெனவும், அதன் நகலை குடியரசுத் தலைவர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டுமெனவும், இது தொடர்பாக வழக்கறிஞர் தமிழக தலைமைச் செயலாளருடன் விவாதிக்கலாம் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் பிறகு அம்பாசமுத்திரத்தில் நிலப் பிரச்சினை தொடர்பாக இரண்டு கொலைகள் நடந்துள்ளன எனவும், இந்த விவகாரத்தை மேற்கொண்டு வெளிக்கொண்டு வந்துவிடக் கூடாது என்ற காரணத்துக்காகத் தனக்கும் குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன என்றும் பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 30) இது தொடர்பாக அவர் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வில் தனக்கு அடைக்கலம் வேண்டுமென்று கோரினார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பாலகிருஷ்ணன், பாதுகாப்பு கோரித் தமிழக தலைமைச் செயலாளருக்கு அடுத்தடுத்து மனுக்கள் அளித்தும் பலனில்லை என்று தெரிவித்தார்.

மதுரையைச் சேர்ந்த கண் மருத்துவமனை நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் அந்த கிராமத்தில் செய்த அக்கிரமங்கள் குறித்து புகார் தெரிவித்ததாகக் கூறினார். “இதன் காரணமாக எனக்கும் என் குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இது பற்றி தமிழக தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு மனுக்கள் அளித்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.

இன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வில், என்னால் இந்த வயதில் ஓட முடியாது என்று கூறினேன். எனக்கும் குடும்பத்தினருக்கும் அடைக்கலம் வேண்டும் என்று கோரினேன். அரசியலைமைப்புச் சட்டத்தில் மக்களைப் பாதுகாக்கும் கடமையுடையவர்கள் கொலைகாரர்களுடன் கைகோர்த்து இருக்கின்றனர். எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு தமிழக தலைமைச் செயலாளரே பொறுப்பு” என்று அவர் குற்றம்சாட்டினார்.

புதன், 1 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon