மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 26 மே 2020

ஸ்டிக்கர் வீடுகள்: இடைத்தேர்தலில் அதிமுகவின் அசத்தல் கரன்சி வியூகம்!

ஸ்டிக்கர்  வீடுகள்:  இடைத்தேர்தலில் அதிமுகவின் அசத்தல்  கரன்சி வியூகம்!

ஒவ்வோர் இடைத்தேர்தலுக்கும் பணப்பட்டுவாடா செய்யும் முறைகளில் புதுப்புது உத்திகளை கண்டுபிடித்து நடைமுறைப்படுத்தி வருவதில் நமது கழகங்களை முந்த உலகத்தில் யாரும் கிடையாது.

அந்த வகையில் சூலூர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதா என்பதைக் கண்டுபிடிக்க ஸ்டிக்கர் என்ற ஆயுதத்தைக் கையிலெடுத்துள்ளது அதிமுக. கடந்த மக்களவை, சட்டமன்ற மினி தேர்தலில் வாக்காளர்களுக்குக் கொடுத்த பணத்தை நிர்வாகிகள் பலர் ஆட்டைய போட்டுவிட்டதாக எடப்பாடிக்குப் புகார் போனது.

இதுபற்றி தீவிரமாக யோசித்த எடப்பாடி இதுபோல வருகிற இடைத்தேர்தலில் நடக்கக் கூடாது என்று கண்டிப்பாக உத்தரவிட்டிருக்கிறார். எனவே சூலூர் தொகுதியில் பண விநியோகத்தை முறைப்படுத்துவதற்கான ஒரு வியூகத்தை வகுக்குமாறு அமைச்சர் வேலுமணி தனது ஆதரவாளர்களிடம் கேட்டுக் கொண்டார்.

அதன்படி தயாரானதுதான் இந்த ஸ்டிக்கர் வியூகம். அதாவது 5 பேர் கொண்ட ஒவ்வொரு பணப்பட்டுவாடா குழுவுக்கும் அதிகபட்சம் 25 வீடுகள்தான் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இந்த 5 பேரில் இருவர் அதே தெருவைச் சேர்ந்த ஆண், பெண் இருப்பர். மீதி மூவர் வெளியூர் கட்சிக்காரர்கள். ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு 40 பக்க நோட்டு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் தினமும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு நேரடியாகப் போய் குடும்பத்தினரைப் பார்த்துவிட்டு, நோட்டில் பதிவு செய்துகொள்ள வேண்டும். சில நாட்கள் பழக்கத்திலேயே யார் அதிமுக, யார் திமுக, யார் அமமுக, யார் எந்தக் கட்சியும் சாராதவர்கள் என்ற ஒரு ஸ்கெட்ச் கிடைத்துவிடும்.

இதையடுத்து அந்த வீடுகளில் மறுக்காத அத்தனை பேருக்கும் முதல் கட்டமாக 2 ஆயிரம் ரூபாய் நேற்று விநியோகிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் பணம் கொடுத்து முடித்தபின், சில்வர் டப்பாக்களில் விலை எழுதி ஒட்டப்பட்டிருக்குமே அதுபோல மிகச் சிறிய ஒரு ஸ்டிக்கரை வீட்டுச் சுவரின் ஒரு ஓரமாக வெளிப்பக்கமாக ஒட்டிவிடுகிறார்கள். அந்த ஸ்டிக்கரில் 25 வீடுகளில் அது எத்தனையாவது வீடு என்றும், அங்கே எத்தனை ஓட்டுகளுக்கு பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் குறிக்கப்பட்டிருக்கிறது.

உதாரணமாக 13/3 என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தால் அது 25 வீடுகளில் 13 வது வீடு என்றும் அங்கே 3 ஓட்டுகளுக்கு பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் அர்த்தம். இதை அப்படியே தங்கள் கையோடு கொண்டுபோகும் பதிவேட்டிலும் குறித்துக் கொள்கிறார்கள் அதிமுக பணப்பட்டுவாடா குழுவினர்.

எப்படிங்ணா போயிட்டிருக்கு என்று சூலூர் அரசியல் நண்பர்களிடம் விசாரித்தோம்.

“முதல் தவணையாக இப்போது சூலூர், காங்கேயம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரண்டாயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கிறது. இன்னும் இரு தவணைகள் இருக்கிறது என்றும் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள் கட்சியினர். தலைமை கொடுக்கச் சொன்னது 2 ஆயிரம்தான். ஆனால் இது அமைச்சர் வேலுமணியின் இமேஜ் பிரச்னை ஆச்சே. அதனால அமைச்சரும் தனியாக தாராளமாக இறக்கிவிட முடிவு செய்திருக்கிறார். அதேநேரம் கொடுக்கும் பணம் கரெக்ட்டாக போய் சேர்ந்து வெற்றிக்கு உதவ வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கிறார்.

அதனால், தொகுதி முழுமைக்குமாக 50 பேர் கொண்ட ஒரு டீம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டீம் பண விநியோகம் செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வந்த நோட்டில் இருக்கும் குறிப்புகளையும், அந்தந்த வீடுகளின் வாசலில் ஒட்டப்பட்டிருக்கிற ஸ்டிக்கர்களையும் ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். இரண்டாம் கட்ட விநியோகத்தின் போது வேறு ஒரு ஸ்டிக்கர் ஒட்டப்படும்” என்கிறார்கள்.

மக்கள் அந்த ஸ்டிக்கரை கிழித்துப் போட்டுவிட்டால் என்ன செய்வீர்கள் என்று நாம் ஒரு அதிமுக நிர்வாகியிடம் கேட்க, ‘’பெரும்பாலும் நாங்க ஸ்டிக்கர் ஒட்றதே வீட்டுகாரங்களுக்கு தெரியாது. 5 பேரா போவோம், பேசிக்கிட்டிருக்கும்போதே ஒருத்தர் வாசலுக்கு வந்து வீட்ல நிலைப்படியிலயோ கதவு மேலயோ ஸ்டிக்கரை ஒட்டிருவாரு. இப்ப உங்களுக்குத் தெரிஞ்சுபோச்சா... இனி உலகத்துக்கே தெரிஞ்சுடும்ங்களே?” என்று சிரித்தார்.

அடப்பாவிகளா... இந்த மூளையை வேறு நல்ல திட்டங்களுக்கு செலவழித்தால் நாடு எப்போதோ முன்னேறியிருக்குமே?

புதன், 1 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon