மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 26 மே 2020

மாதிரி வாக்குப்பதிவில் மெகா மோசடி! - தேர்தல் ஆணையத்தின் மீது அடுத்த புகார்!

மாதிரி வாக்குப்பதிவில்  மெகா மோசடி! - தேர்தல் ஆணையத்தின் மீது அடுத்த புகார்!

எப்போதும் இல்லாத அளவுக்கு, தற்போது தேர்தல் ஆணையம் மீது பகிரங்கமான குற்றச்சாட்டுகளை அரசியல் கட்சிகள் முன்வைத்து வருகின்றன. இப்போது கடலூரில் எழுந்துள்ள புகார் தமிழகத்தையே அதிரவைக்கும் ரகம்.

ஓட்டு மெஷின்களைச் சரிபார்த்து வைப்பது, வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு நல்ல பயிற்சி கொடுப்பது, நூறு சதவிகிதம் வாக்குகளைக் கொண்டுவந்து சேர்ப்பதற்கான முயற்சிகள் எடுப்பது ஆகியவைதான் தேர்தல் கமிஷனின் அடிப்படை வேலைகள். ஆனால், அவற்றை விட்டுவிட்டு எதிர்க்கட்சிகளை நோக்கி ரெய்டு, ரெய்டு என்று சுற்றிவந்ததை வெளிப்படையாக விமர்சனம் செய்கிறார்கள் அனைத்துக் கட்சியினரும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 40 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகள் இடைத் தேர்தலில் வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்வதற்கு முன்பு மெஷின் நல்ல கண்டிஷனில் இருக்கிறதா, குறிப்பிட்ட பட்டனை அழுத்தினால் அந்த பட்டனுக்குரிய சின்னத்துக்குத்தான் வாக்கு, பதிவாகிறதா என்று பரிசோதிக்க மாதிரி வாக்குகள் போடுவார்கள். இந்த மாதிரி வாக்குகள் வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சுமார் 30 முதல் 50 வரையில் பதிவு செய்யப்படும்.

பரிசோதனைகள் முடிந்ததும் போடப்பட்ட மாதிரி வாக்குகளை அழித்துவிட்டுதான் வாக்காளர்களை வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும். இல்லை என்றால் போடப்பட்ட மாதிரி வாக்குகளும் கணக்கில் வந்து சேர்ந்துவிடும். இப்போது இதுதான் பெரும் பிரச்சினையாகியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் பல வாக்குச் சாவடிகளில், தேர்தல் தொடங்குவதற்கு முன் செய்யப்பட்ட மாதிரி வாக்குப்பதிவுகளை அழிக்காமல் விட்டுவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடலூர் மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டு மெஷின் பெட்டிகளைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் வைத்தார்கள். மறுநாள் 19ஆம் தேதி சீல் வைக்க முகவர்களை அழைத்தார்கள் தேர்தல் அதிகாரிகள். பல முகவர்களும் 10:30 - 12:00 ராகுகாலம் என்பதால் 10 மணிக்குள் வருகிறோம் அல்லது 12 மணிக்கு மேல் வருகிறோம் என்றார்கள். அதன்படியே 12 மணிக்கு மேல் வந்தார்கள்.

மெஷின்களை முகவர்கள் முன்னிலையில் பரிசோதனைகள் செய்து சீல் வைக்க முயன்றபோது, சில மெஷின்களில் வாக்குகள் அதிகமாகப் பதிவாகியுள்ளது தெரியவந்தது. அப்புறம்தான் பல மெஷின்களில் தேர்தல் நாளன்று காலை 7 மணிக்கு முன்னதாகப் பதிவு செய்த மாதிரி வாக்குகளை அழிக்கவில்லை என்றும் தெரியவந்தது.

மாவட்டத் தேர்தல் அதிகாரியும் கடலூர் மாவட்ட ஆட்சியருமான அன்புச்செல்வன், சப்-கலெக்டர் சரயூ ஐஏஎஸ், பொது பார்வையாளர் கணேஷ்பாபு ராவ் பி.பாட்டீல் ஐஏஎஸ், தாசில்தாரர், மற்ற அதிகாரிகள், அனைத்துக் கட்சி முகவர்கள் இருந்தார்கள்.

மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வத்திடம், பொது பார்வையாளர் கணேஷ்பாபு ராவ் பாட்டீல், “மாதிரி வாக்குகளை கிளியர் செய்யாமல் வாக்குப் பதிவு செய்ததை எப்படி சரிசெய்ய போறீங்க?” என்று காட்டமாகக் கேட்டார். உடனே அருகிலிருந்த பாமக துணைப் பொதுச்செயலாளர் பழ.தாமரைக்கண்ணன், “என்ன நடக்குது இங்கே? இது அநியாயம்” என்று சத்தம் போட, அவரை அமைதிப்படுத்தினார் அன்புச்செல்வன்.

மற்றவர்களும் கூச்சல்போட, உடனே பொது பார்வையாளரிடம் மாவட்டத் தேர்தல் அதிகாரி அன்புச்செல்வன் பேசி சமாதானம் செய்த பிறகு, அனைத்து முகவர்களிடமும் பேசினார். கவுன்ட்டிங் அன்று சந்தேகமான பூத்களில் பதிவான வாக்குகளையும் அதில் விழுந்துள்ள பேலட் ஷீட்களையும் சரிபார்த்து நேர்மையாகச் செய்கிறோம் என்று சமாதானம் செய்து ஒரு வழியாக அனுப்பிவைத்து விட்டார் மாவட்டத் தேர்தல் அதிகாரி.

உள்ளே இருந்த நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன் நம்மிடம் இந்த விவகாரம் பற்றிப் பேசினார்.

“இரண்டு மூன்று பூத்களில்தான் மாதிரி ஓட்டுகள் பதிவு செய்ததை கிளியர் செய்யாமல் வாக்குப்பதிவு நடந்து விட்டது என்றும் வாக்கு எண்ணும்போது அதை மைனஸ் செய்கிறேன் என்றும் உத்தரவாதம் கொடுத்துள்ளார் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன். அவர் சொல்வது எப்படி சரியாக இருக்கும்? இங்கே கடலூரில் தெரிந்துவிட்டது. தெரியாமல் தமிழகம் முழுவதும் நடந்திருந்தால் யார் பொறுப்பு? இங்கே இவ்வளவு பேர் இருந்தபோதே இவ்வளவு மோசடி நடந்திருக்கிறது. இதே நிலைதான் தமிழகம் முழுவதும் ஏற்பட்டிருக்கும். உண்மையிலேயே மாதிரி வாக்குப்பதிவு செய்து கிளியர் செய்திருந்தால் பண்ருட்டி பூத்தில் அமமுக வேட்பாளர் பரிசு பெட்டி சின்னம் பொத்தான் வேலை செய்யவில்லை என்று கண்டுபிடித்திருக்கலாமே... அப்படி என்றால் மாதிரி ஓட்டு என்ற பெயரில் குறிப்பிட்ட ஒரே சின்னத்துக்கே ஏன் வாக்களித்திருக்க மாட்டார்கள்?” என்று கேள்வி எழுப்பினர்.

மாதிரி வாக்குப்பதிவு பற்றி தேர்தல் அதிகாரிகள் சிலரிடம் பேசினோம்.

“ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் வி.வி பேடு (pad), பேலட் பேடு, கண்ட்ரோல் பேடு மூன்று கொடுப்பார்கள். பேலட் பேடிலிருந்து வி.வி பேடுக்கு இணைப்பு கொடுப்போம். அதிலிருந்து கண்ட்ரோல் பேடுக்கு இணைப்பு கொடுப்போம். பேலட் பேடில் உள்ள சின்னத்துக்கு நேராக உள்ள பொத்தானை அழுத்தினால் எந்தச் சின்னத்துக்கு வாக்களித்தோமோ அந்தச் சின்னம் வி.வி பேடில் 7 விநாடிகள் நிற்கும்.

பொதுவாக மாதிரி வாக்குப்பதிவில் ஒரு தொகுதியில் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்றால் நோட்டா ஒன்று சேர்த்து 16 பட்டன் செட் பண்ணுவோம். அனைத்துக்கட்சி முகவர்கள் முன்னால் ஒவ்வொருவரும் மூன்று ஓட்டுப் போடச் சொல்லுவோம். அதுபோல் 16 பொத்தானிலும் 48 ஓட்டுப் போடுவார்கள். கூடுதலாக இரண்டு ஓட்டை நோட்டாவுக்கு போட்டு 50 ஓட்டாக முடித்துவிடுவோம். அதன் பிறகு டோட்டல் பட்டன் அழுத்த வேண்டும். அடுத்தது ரிசல்ட் பட்டனை அழுத்த வேண்டும். அதில் போடப்பட்ட வாக்குகள் சரியாகவிருந்தால் கிளியர் பட்டனை அழுத்திவிட்டு வாக்காளப் பெருமக்களை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்” என்று விளக்கியவர்கள் தொடர்ந்தனர்.

“வாக்குச்சாவடிகளில் உள்ள தலைமை அதிகாரி இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை ரிப்போர்ட் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும். மாதிரி வாக்கு போட்டதை க்ளியர் செய்தபிறகு, வாக்கு, பதிவாவதைக் கணக்கு பார்ப்பார்கள். பார்த்திருந்தால் இதை உடனடியாகக் கண்டுபிடித்திருக்க முடியும். அப்படியில்லாமல் க்ளியர் செய்யாமல் விட்டிருந்தால் ஏதோ சம்திங் ராங்” என்று விளக்கி முடித்தார்.

இவ்வளவு பெரிய குற்றச்சாட்டுக்கு விடை தெரிந்துகொள்ள கடலூர் மாவட்ட ஆட்சியரும் மாவட்டத் தேர்தல் அதிகாரியுமான அன்புச்செல்வனை நேரடியாகச் சந்திக்க முயற்சி செய்தோம். அவர் பிசியாகவே இருந்தார். அதன்பின் அலைபேசியில் பலத்த முயற்சிக்குப் பின் நம்முடன் தொடர்புக்கு வந்தார் மாவட்டத் தேர்தல் அதிகாரியான அன்புச்செல்வன். அவரிடம் இந்த மாதிரி வாக்குப்பதிவு சர்ச்சையைப் பற்றிக் கேட்டதுமே, “என்ன... என்னை விடாம தொந்தரவு பண்றீங்க? அதெல்லாம் ஒன்றும் இல்லை. எல்லாம் சரியாகத்தான் நடந்துள்ளது” என்று லைனைத் துண்டித்தார் பொறுப்புள்ள மாவட்டத் தேர்தல் அதிகாரி அன்புச்செல்வன்.

தர்மபுரி தொகுதியில் 1,787 பூத்கள் உள்ளன. கடலூர் தொகுதியில் 1,499 பூத்கள் உள்ளன. சராசரியாக ஒரு மக்களவைத் தொகுதிக்கு 1,500 பூத்கள் உள்ளன. இதில் குறிப்பிட்ட 1,000 பூத்களில் மட்டும் சராசரி 30 மாதிரி ஓட்டுகள் விழுந்திருந்து அவை நீக்கப்படாமல் விடப்பட்டிருந்தால்கூட தொகுதிக்கு 30,000 வாக்குகள் குவிந்து வெற்றிவாய்ப்புகளைத் தீர்மானிக்கும் என்கிறார்கள் தேர்தல் பணியிலிருந்த அதிகாரிகள். இது தேர்தல் முடிவில் செயற்கையாக மாற்றத்தைத் திணிப்பது போலவே கருதப்படும்.

கடலூரில் பாமக வெற்றி பெற்றால் பிரச்சினையில்லை. ஒருவேளை தோல்வியடைந்தால் தேர்தல் அதிகாரிகளுக்கு எதிராக மாவட்டம் ஸ்தம்பிக்கும் அளவில் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகச் சொல்கிறார்கள் பாமக பிரமுகர்கள்.

எத்தனை குற்றச்சாட்டுகள், புகார்கள் வந்தாலும் தட்டிவிட்டுப் போய்க்கொண்டே இருக்கிற இப்போதைய தேர்தல் ஆணையம் உண்மையிலேயே வேறு மாதிரிதான்.

எம்.பி. காசி

புதன், 1 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon