மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 26 மே 2020

நாடு முழுவதும் ரூ. 3278.22 கோடி பறிமுதல்!

நாடு முழுவதும் ரூ. 3278.22 கோடி பறிமுதல்!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் தற்போது வரை 3278.22 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம், தங்க வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. நான்கு கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன. தேர்தலை ஓட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் யாரும் ரொக்கம் பணம், வெள்ளி தங்க நகை உள்ளிட்ட பொருட்கள் எடுத்துச் செல்லக்கூடாது என்று தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்திருந்தது.

இதற்கிடையே பறக்கும் படையினர், பணப்பட்டுவாடாவைத் தவிர்க்க விமான, ரயில் நிலையங்கள், சுங்கச் சாவடிகள் உட்பட பல்வேறு இடங்களில் வாகன சோதனைகள் நடத்தினர். இதில், ஏப்ரல் 30ஆம் தேதி வரை நாடு முழுவதும் 3278.22 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம், தங்க வெள்ளி நகை உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதில், ரூ.787.18 கோடி பணம், ரூ.249.82 கோடி மதிப்பிலான மதுபானங்கள், ரூ.1215.5 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள், ரூ.972.378 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள், ரூ.53.33 கோடி மதிப்பிலான இதர பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நிறைவடைந்தது. மே 19ஆம் தேதி 4 தொகுதிகளுக்குச் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் 936.69 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டதில் தமிழகத்தில் தான் அதிகளவிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

புதன், 1 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon