மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 ஆக 2020

விண்ணில் ஏவப்படும் சந்திரயான் - 2: இஸ்ரோ அறிவிப்பு!

விண்ணில் ஏவப்படும் சந்திரயான் - 2: இஸ்ரோ அறிவிப்பு!

சந்திரயான் - 2 செயற்கைக்கோள் எப்போது விண்ணில் ஏவப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) நிலவை ஆய்வு செய்யும் விதமாக 2008ஆம் ஆண்டில் சந்திரயான் செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. ரூ.386 கோடி செலவில் ஏவப்பட்ட இந்த செயற்கைக்கோள் நிலவில் நீர் வழித்தடங்கள் இருப்பதை உலகுக்கு வெளிக்காட்டியது. மிகக் குறைந்த செலவில் நிலவுக்கு அனுப்பப்பட்ட இந்த செயற்கைக்கோள் உலக நாடுகளையே இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்தது. இருப்பினும் சந்திரயான் - 1 நிலவைச் சுற்றி மட்டுமே வந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டதால், நிலவுக்குள் இறங்கி ஆய்வு செய்யும் விதமாக சந்திரயான் - 2 செயற்கைக்கோளை நிலவுக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டது.

2017ஆம் ஆண்டே சந்திரயான் - 2 விண்ணில் ஏவப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து தாமதமாகி வருகிறது. இந்த நிலையில் வரும் ஜூலை 9 முதல் 16 வரையிலான காலத்துக்குள் சந்திரயான் - 2 விண்ணில் ஏவப்படும் என்று நேற்று (மே 1) இஸ்ரோ அறிவித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரோ நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள பத்திரிகை அறிவிப்பில், “சந்திரயான் - 2 விண்கலத்தைத் தயாரிக்கும் பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சந்திரயான் - 2 விண்கலமானது ஆர்பிட்டர், லேண்டர் (விக்ரம்), ரோவர் (பிரக்யான்) ஆகிய மூன்று தொகுதிகளைக் கொண்டது.

எல்லா தொகுதிகளுக்குமான முழுப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. ஜூலை 9 முதல் 16 வரையிலான காலத்தில் சந்திரயான் - 2 விண்ணில் ஏவப்படும். செப்டம்பர் 6ஆம் தேதி நிலவுக்குச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும் சந்திரயான் - 2 செயற்கைக்கோளை விண்ணில் ஏவும் பணிகள் இன்னும் முழுமையடைவில்லை என்று தகவல்கள் கிடைத்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 2 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon