மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 19 பிப் 2020

ஐந்தாம் கட்ட தேர்தல்: 126 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்!

ஐந்தாம் கட்ட தேர்தல்: 126 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்!

ஏழு கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் போட்டியிடும் 126 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன.

17ஆவது மக்களவையைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடந்து வருகிறது. ஏப்ரல் 29ஆம் தேதியோடு நான்கு கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், மே 6ஆம் தேதி ஐந்தாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. பிகார், ஜார்கண்ட், ஜம்மு & காஷ்மீர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த ஐந்தாம் கட்ட தேர்தலில் 674 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 668 வேட்பாளர்களின் வேட்பு மனுவை ஜனநாயக சீர்திருத்த சங்கம் ஆய்வு செய்துள்ளது.

இந்த ஆய்வின்படி போட்டியிடும் வேட்பாளர்களில் 28 விழுக்காட்டினர் கோடீஸ்வரர்கள் என்பது அவர்கள் வேட்பு மனுவில் தாக்கல் செய்துள்ள சொத்து விவரங்களின்படி தெரிய வந்துள்ளது. ஒட்டுமொத்தமாக ஐந்தாம் கட்ட தேர்தலில் போட்டியிடும் 184 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள். அதிகபட்சமாக சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த, லக்னோ தொகுதியில் போட்டியிடும் பூனம் சத்ருகன் சின்ஹா ரூ.193 கோடி சொத்துகள் இருப்பதாகத் தாக்கல் செய்துள்ளார். பிரகதிஷில் சமாஜ்வாதி கட்சியின் சார்பில் போட்டியிடும் லோஹியா தொகுதி வேட்பாளர் விஜய்குமார் மிஸ்ரா ரூ.177 கோடி சொத்துகள் இருப்பதாகத் தாக்கல் செய்துள்ளார். பாஜக சார்பில் ஹசாரிபாக் தொகுதியில் போட்டியிடும் ஜெயந்த் சின்ஹா ரூ.77 கோடி சொத்துகள் இருப்பதாகத் தாக்கல் செய்துள்ளார்.

நான்காம் கட்ட தேர்தலில் போட்டியிட்ட கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் இது குறைவாகும். ஐந்தாம் கட்ட தேர்தலில் போட்டியிட்ட 33 விழுக்காட்டினர் கோடீஸ்வரர்களாக இருந்தனர். கட்சி வாரியாகப் பார்த்தால் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஐந்தாம் கட்ட தேர்தலில் போட்டியிடும் 48 பேரில் 38 பேர் (79%) கோடீஸ்வரர்கள். காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் 45 பேரில் 32 பேரும் (71%), பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் போட்டியிடும் 33 பேரில் 17 பேரும் (52%), சமாஜ்வாதி கட்சியின் சார்பில் போட்டியிடும் 9 பேரில் 8 பேரும் (89%), 252 சுயேச்சை வேட்பாளர்களில் 31 பேரும் (12%) ஒரு கோடிக்கும் அதிகமாக சொத்து வைத்திருப்பதாக வேட்பு மனுவில் தாக்கல் செய்துள்ளனர். மூன்று பேர் சொத்துகளே இல்லை என்று தாக்கல் செய்துள்ளனர். ஒட்டுமொத்த வேட்பாளர்களில் ஆறு பேர் தாக்கல் செய்துள்ள சொத்து விவரங்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை என்றும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் தெரிவித்துள்ளது.

ஐந்தாம் கட்ட தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை 12 விழுக்காடாக (79) உள்ளது. இது முந்தைய நான்கு கட்ட தேர்தலில் போட்டியிட்ட பெண் வேட்பாளர்களை விட கூடுதல் விழுக்காடாகும். முதல் கட்ட தேர்தலில் 7 விழுக்காடு (89) பெண்களும், இரண்டாம் கட்ட தேர்தலில் 8 விழுக்காடு (120) பெண்களும், மூன்றாம் கட்ட தேர்தலில் 9 விழுக்காடு (143) பெண்களும், நான்காம் கட்ட தேர்தலில் 10 விழுக்காடு (96) பெண்களும் போட்டியிட்டிருந்தனர்.

அதேபோல ஐந்தாம் கட்ட தேர்தலில் போட்டியிடும் 126 வேட்பாளர்கள் (19%) மீது குற்ற வழக்குகள் உள்ளன. 95 வேட்பாளர்கள் (14%) மீது தீவிர குற்ற வழக்குகள் உள்ளன. 6 பேர் தண்டனை பெற்றுள்ளனர். இவர்களில் 21 பேர் மீது கொலைமுயற்சி வழக்குகளும், 5 வேட்பாளர்கள் மீது ஆள்கடத்தல் வழக்குகளும் உள்ளன. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான வழக்குகள் 9 பேர் மீது உள்ளது. வெறுப்புப் பேச்சுகள் சார்ந்த வழக்குகள் 5 பேர் மீது உள்ளது. பாஜக வேட்பாளர்களில் 22 பேர் (46%) மீதும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 14 பேர் (31%) மீதும், பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் 9 பேர் (27%) மீதும், சமாஜ்வாதி வேட்பாளர்கள் 7 பேர் (78%) மீதும், சுயேச்சை வேட்பாளர்கள் 26 (10%) மீதும் குற்ற வழக்குகள் உள்ளன.

வியாழன், 2 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon