மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 25 அக் 2020

நாமே வகுத்துக்கொள்ள வேண்டிய எல்லைகள்!

நாமே வகுத்துக்கொள்ள வேண்டிய எல்லைகள்!

சமூக வலைதளங்களும் நாமும் - 4: நவீனா

ஒரு தனிநபர் ஒவ்வொரு நாளும் சராசரியாக மூன்று முதல் நான்கு மணி நேரம் திரைகளுக்கு முன்பாகச் செலவிடுவதாகப் புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன. ஒவ்வொரு நாளும் ஒரு தனிநபரின் இரண்டு மணி நேரமாவது சமூக வலைதளங்களில் செலவிடப்படுவதாகக் கூறப்படுகிறது. இதைக் கணக்கிட்டுப் பார்க்கையில், வாழ்நாளின் கணிசமான பகுதி சமூக வலைதளங்களில் செலவிடப்படுவது புலப்படுகிறது.

இயல்பாகவே எவரும் தன்னுடைய நேரத்தை விரயம் செய்ய விரும்ப மாட்டார்கள். ஆனால், நேரம் குறித்து மிகுந்த கவனம் உள்ளவர்கள்கூட, சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும்போது மட்டும் காலம் விரயமாவதை உணராமல் தொடர்ந்து அதில் புழங்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். ‘இப்பத்தான் இன்ஸ்டாகிராம திறந்தேன், அதுக்குள்ள ஒரு மணி நேரம் ஆயிடுச்சு, நேரம் போனது தெரியலையே’ என்று எந்த ஒரு சமூக வலைதளத்தைப் பயன்படுத்தும்போதும் நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும்படி அவ்வப்போது அமைந்துவிடுகிறது. சமூக வலைதளங்கள் 'ஸ்டாப்பிங் க்யூஸ்' அதாவது 'நிறுத்தல் சமிக்ஞைகள்' இல்லாமல் வடிவமைக்கப்பட்டிருப்பதே இத்தகைய நிலைக்குக் காரணமாகும்.

ஸ்டாப்பிங் க்யூஸ் என்பது என்ன?

இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மனிதர்களிடம் பெரும்பாலும் வாசிப்பு, இசை, நடனம், ஓவியம், விளையாட்டு என இன்னும் பலதரப்பட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்தன (அவை இன்னும் இருக்கத்தான் செய்கின்றன). அவற்றில் பெரும்பாலானவை மிகவும் ஆரோக்கியமானவையாகவும் மனதுக்கு உற்சாகமூட்டி அவர்கள் ஈடுபடும் வேலைகளைத் திறம்பட நிறைவேற்றத் தேவையான நேர்மறை எண்ணங்களைத் தூண்டுபவையாகவும் இருந்தன. அப்போதும் அவர்களிடம் தொலைக்காட்சி எனும் திரை இருந்தது. இருப்பினும், அது அவர்களுடைய மற்ற ஆரோக்கியமான பொழுதுபோக்குகளையும், அதற்காக அவர்கள் ஒதுக்க வேண்டிய நேரத்தையும் இன்றைய அளவுக்குப் பாதிக்கவில்லை. ஆனால், இன்று கைபேசித் திரைகளுக்கும், கணினித் திரைகளுக்கும் முன்பாகச் செலவிடப்படும் நேரமோ பெரும்பாலும், ஆரோக்கியமான மற்ற பொழுதுபோக்குக்காகவும், குடும்பத்துக்காகவும் செலவிடப்பட வேண்டியதாகும். சமூக வலைதளங்களின் எழுச்சி பல பாரம்பரியப் பொழுதுபோக்குகளை ஏறக்குறைய அழித்துவிட்டதாகத்தான் தோன்றுகிறது. ஆனால், அதை நாம் உணர்வதற்கான சிறு இடைவெளியைக்கூடச் சமூக வலைதளங்கள் நமக்குத் தரத் தயாராக இல்லை.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வானொலி நிகழ்ச்சிகள், நாளிதழ்கள், புத்தகங்கள் என்பன போன்ற பல பொழுதுபோக்கு அம்சங்கள் நிறுத்தல் சமிக்ஞைகளோடுதான் வருகின்றன. அதாவது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்க்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட அரை மணி நேரமோ அல்லது ஒரு மணி நேரமோ முடிந்தவுடன் அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு அதன் தொடர்ச்சி அடுத்த வாரம் ஒளிபரப்பப்படும் என அறிவுறுத்தப்படும். அதைப் பார்க்கும்போது மற்ற வேலைகளைப் பார்க்கலாம் என்பது நினைவுபடுத்தப்படுகிறது என்றும் நாம் எடுத்துக்கொள்ளலாம். நாமும் தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு மற்ற வேலைகளைத் தொடர ஆரம்பித்துவிடுவோம். ஒரு நாளிதழையோ அல்லது புத்தகத்தையோ வாசிக்கும்போதுகூட அதன் கடைசிப் பக்கத்தை அடைந்ததும் இதே போன்ற உணர்வுதான் ஏற்படும்.

முடிவின்றித் தொடரும் வலை வீச்சு

ஆனால், சமூக வலைதளங்களில் நிறுத்தல் சமிக்ஞைகள் இருப்பதில்லை. ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டகிராம் என அனைத்து சமூக வலைதளங்களும் முடிவற்றவை. அதாவது ஃபேஸ்புக்கில் ஒருவர் தனது டைம்லைனை ஸ்க்ரோல் (scroll) செய்யும்போது அது முடிவின்றி மேலே நகர்ந்துகொண்டே இருக்கிறது. அதில் தோன்றும் பதிவுகளுக்கு எல்லை என்பதே கிடையாது. அது தரையற்ற கடலின் ஆழத்தைப் போலப் போய்க்கொண்டே இருக்கக்கூடியது. இங்கு சமூக வலைதளங்களுக்குள்ளாக இருக்கும் முக்கியமானதோர் ஒற்றுமையாகவும் நிறுத்தல் சமிக்ஞைகளை எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. இதற்குக் காரணம், எந்தவொரு சமூக வலைதளமாக இருந்தாலும் அதைப் பயன்படுத்துவோர் அதில் செலவிடும் நேரம்தான் அதன் முதலீடு. எவ்வளவு அதிகமாக நேரத்தை ஒருவர் ஒரு சமூக வலைதளத்தில் செலவிடுகிறாரோ, அவ்வளவு அதிகமாக வருமானத்தை அந்தச் சமூக வலைதளம் ஈட்ட முடியும். எனவே, எந்த ஒரு சமூக வலைதளத்தையும் உருவாக்கியவர்கள் அதன் அடிப்படை மூலதனமான பயனாளி ஒருவர், தனது நேரத்தை அவர் விரயம் செய்வதை உணராத வகையில்தான் உருவாக்கியிருக்கின்றனர். இது நாம் சமூக வலைதளங்களில் செலவிடும் நேரத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படாமல் வைத்திருப்பதோடு, நாம் அடுத்து செய்ய வேண்டிய வேலைகளை நினைவூட்டுவதையும் தடுக்கிறது. மற்றொருவர் பொருளீட்டுவதற்காக நமது நேரம் உறிஞ்சப்படுவதோடு அல்லாமல், அதை நாம் முற்றிலும் உணர்ந்துவிடாத வண்ணம் ஒரு மாயைக்குள்ளும் அது நம்மைச் சிக்க வைத்துவிடுகிறது.

மேட்ரிட் (Madrid) நகரில் ஒரு தாய் தனது ஆறு மாதக் குழந்தையைக் குளியல் தொட்டியில் கிடத்திக் குளிப்பாட்டுவதற்காகத் தண்ணீர்க் குழாயைத் திறந்துவிடுகிறார். அந்த நேரத்தில் கைபேசி சத்தம் எழுப்புகிறது. ஃபேஸ்புக் நோட்டிபிகேஷன் பார்க்கும் ஆர்வ மிகுதியில், தனது கைபேசியை எடுத்து, பார்த்த மாத்திரத்தில் திரும்பி வந்துவிடலாம் என அடுத்த அறைக்கு விரைகிறார். தனது டைம்லைனில் புதிய பதிவுகளைப் பார்த்ததும் அவற்றை ஸ்க்ரோல் செய்ய ஆரம்பித்த அவர் நேரம் போவது தெரியாமல் அதில் மூழ்கிவிடுகிறார். குழந்தையைப் பற்றிய நினைவு சிறிதும் அவருக்கு வரவில்லை. அவர் ஃபேஸ்புக்கில் மூழ்கியிருந்தபோது, குழந்தை தண்ணீருக்குள் மூழ்கி மூச்சுத் திணறி இறந்துவிடுகிறது. நீண்ட நேரத்துக்குப் பின்பு இதனைத் தெரிந்துகொண்ட தாய் கதறி அழுகிறார்.

சமூக வலைதளங்கள் எல்லையற்று நீண்டுகொண்டே செல்வதால், அவற்றுக்கான எல்லையை நம் தேவைக்கேற்ப நாமே தீர்மானித்துக்கொள்வது இதுபோன்ற பல ஆபத்துகளிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள உதவும்.

ஸ்டீவ் ஜாப்ஸின் குழந்தைகளும் ஆப்பிள் ஐபாடும்!

வியாழன், 2 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon