மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 30 அக் 2020

இன்னொரு பொள்ளாச்சி: என்ன நடந்தது பெரம்பலூரில்?

இன்னொரு பொள்ளாச்சி: என்ன நடந்தது பெரம்பலூரில்?

பத்துக்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிவிட்டு, தற்போது தலைமறைவாக இருக்கும் பெரம்பலூரைச் சேர்ந்த வேல்முருகன் என்ற இளைஞரைத் தேடிவருகின்றனர். அவரைத் தேடுவது போலீஸ், பத்திரிகைகள், கூலிப்படைகள், அரசியல்வாதிகள் என இந்த சமூகத்தின் அத்தனை காரணிகளும்தான். அப்படி என்ன நடந்தது பெரம்பலூரில்?

தேம்பி அழுது, மன்றாடும் பெண்ணின் வீடியோ மீடியாக்களின் வாட்ஸ் அப்புக்கு வருவதற்கு முன்பு பொள்ளாச்சி எப்படிப்பட்ட அமைதி நிலையில் இருந்ததோ, அதுபோலவே தற்போது பெரம்பலூரும் ஓர் அமைதிக்குள் குமைந்துகொண்டிருக்கிறது. பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் குற்றங்களுக்குச் சற்றும் சளைக்காத விதத்தில் பெரம்பலூரின் பல ஹோட்டல்களில் அத்தனை சம்பவங்களையும் நடத்திவிட்டு வீட்டில் உட்கார்ந்துகொண்டிருக்கின்றனர் குற்றவாளிகள். திருடனுக்கு இருள் பாதுகாப்பு என்பதுபோல, குற்றவாளிக்குத் தற்போதைய அமைதி பாதுகாப்பாக இருந்து வருகிறது. கொஞ்சம் அசைந்தாலும் சிக்கிக்கொள்வோம் எனத் தெரிந்ததால், தன்னைச் சுற்றி நடைபெறும் சம்பவங்களின் விளைவுகளை அறியாமல் அந்த 25 வயது இளைஞன் எங்கேயோ இருக்கிறார். இந்த அமைதிக்கு முன்பு வீசிச்சென்ற புயலில் சிக்கிய பெண்களுக்கு என்ன ஆனது?

“பொள்ளாச்சியைப் போல பெரம்பலூரில்..” என்ற அர்த்தத்துக்குக் கொஞ்சமும் குறையாமல், வேலை வாங்கித் தருகிறேன்; சிபாரிசு கடிதம் வாங்கித் தருகிறேன்; என்ன உதவியென்றாலும் செய்து தருகிறேன் என்று பத்துக்கும் மேற்பட்ட பெண்களைத் தன்னைத் தேடி வரவழைத்த வேல்முருகனின் வயது 25.

குறிப்பிட்ட அரசு சார்ந்த வேலைக்கு, நேர்காணல் நடைபெறுவதாகக் கூறி ஹோட்டல் ரூமுக்கும் வரவழைப்பது அந்த நபரின் வேலை. தன் இடத்துக்கு வந்ததும், தனியாக அறை எடுத்துக்கொடுத்து, இப்படி இருந்தால் முதலாளி வேலை தரமாட்டார் என்று சொல்லி குளிக்க வைப்பதும், உடை மாற்ற வைப்பதும் என சில வேலைகளைச் சொல்லி அவர்களை வீடியோ எடுப்பதும், அந்த வீடியோக்களை வைத்து மிரட்டி தனது இச்சைக்குப் பயன்படுத்துவதும் அந்த நபருக்கு முழு நேர வேலை அல்ல.

ஒரு ஸ்டூடியோவின் கேமராமேனாகப் பணிபுரிந்துவந்த அந்த நபர் பெரம்பலூரில் உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளையும் படம்பிடிக்கும் கேமராமேன். அப்படி அவர் வீடியோ எடுக்கச் சென்றபோது எம்.எல்.ஏ ஒருவர் பழக்கமானதால், அவரது பெயரைச் சொல்லி தான் வேலைக்காகச் சென்ற இடத்திலெல்லாம் பல பெண்களுடன் தொடர்பு ஏற்படுத்தியிருக்கிறார். இவரது பேச்சினால் மயங்கியவர்கள், தங்களுக்கும் சில வேலைகள் நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்றபோது அந்த நபர் சொன்ன விலை அவர்களது உடல். அதற்கு சம்மதிக்காதவர்களைத் தனிமையில் இருந்தபோது எடுத்த வீடியோக்களைக் காட்டி மிரட்டியிருக்கிறார்.

தங்களது அறியாமையால் இப்படி வந்து சிக்கிக்கொண்டோமே என்ற பதற்றத்தில், வீட்டிலும் இதை நம்ப மாட்டார்கள் என்ற ஏமாற்றத்திலும் அந்த நபரின் கட்டளைகளை சில பெண்கள் பின்பற்றியிருக்கின்றனர். அப்படி மிரட்டலுக்கு இணங்கிய ஏற்கெனவே, அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றும் அரசுடன் தொடர்புடையவர்களுக்குத் தேவையானவற்றை செய்கிறேன் என்றும், பள்ளி நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது பழக்கம் ஏற்பட்ட ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு பெற்றுத் தருவதாகவும் கூறி தன் வலையில் சிக்க வைத்திருக்கிறார். இவற்றையெல்லாம் வெளியே கொண்டுவந்தவர் வழக்கறிஞர் அருள்.

நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளராக இருந்தாலும், வழக்கறிஞராக மட்டுமே இந்த வழக்கைத் தொடங்கினார். வேல்முருகனால் பாதிக்கப்பட்ட பெண், போலீஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய உறவினரிடம் நடந்ததைச் சொல்லி அழுததால், பெரம்பலூர் எஸ்பி அலுவலகத்தில் முறையிட்டிருக்கின்றனர். வேல்முருகனை வரவழைத்து அவரது மொபைலில் இருந்த வீடியோக்கள் அனைத்தையும் அழித்ததுடன், அவரையும் அனுப்பி வைத்திருக்கிறது போலீஸ் தரப்பு. இனி அவர் மிரட்ட மாட்டார் என்ற உறுதியை மட்டுமே அவர்களால் கொடுக்க முடிந்தது. இந்த விஷயங்களையெல்லாம் அறிந்த வழக்கறிஞர் அருளுக்கு, வேல்முருகனுக்குப் பின்னே பெரம்பலூரைச் சுற்றி பல முக்கிய புள்ளிகள் இருப்பதாகத் தகவல் கிடைத்ததால், இதை அவர் கையிலெடுத்தார். ஆளுங்கட்சியினரின் தொடர்பு இருப்பதாக அவர் வெளியிட்ட தகவலால், பெரம்பலூர் மீடியாக்களின் கண்காணிப்பு வளையத்துக்குள் வந்தது. பல மீடியா அழைப்புகள் தொடர்ந்து வந்ததால், அருள் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் அவர்களைச் சந்தித்து பல கேள்விகளுக்கும் பதில் கூறினார். அதில், ‘போலீஸ் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், சிபிசிஐடி விசாரணை கேட்டு நீதிமன்றத்துக்குச் செல்வேன் என்றும், வேல்முருகன் மற்றும் அவரது பிரபல நண்பர்களால் பாதிக்கப்பட்ட பெண்களை அழைத்து வந்து பேசவைப்பேன்’ என்றும் கூறியது முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

இதுவரையிலும் அவரது ஆக்‌ஷனுக்கு எந்த ரியாக்‌ஷனும் இல்லாமல் இருந்த நிலையில், வழக்கறிஞர் அருள், பெரம்பலூர் குன்னம் பகுதியில் காரில் வந்தபோது போலீஸாரால் கைது செய்யப்பட்டார். யார் கொடுத்த புகாரில், அவர் மீது போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்தனர் என்ற தகவல்களை தெரிவிக்க மறுத்தனர். பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் முகத்தை மறைத்து, பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளிக்க அவர் ஏற்பாடு செய்திருந்ததாகவும், இதையறிந்த போலீஸார் முன்னெச்சரிக்கையாக அவரை கைது செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடைபெற்றிருக்கும் வழக்கறிஞர் அருளின் கைது இந்த வழக்கில் பல கேள்விகளை உருவாக்கியிருக்கிறது.

இவ்வளவு பிரச்சினைகளுக்கும் காரணமான வேல்முருகன் இப்போது எங்கே?

எஸ்பி அலுவலகத்தில் அழிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் வீடியோ, வேறு யாரிடமும் இருக்கிறதா?

வன்கொடுமை சட்டம் ஏன்?

அருளுக்குப் பின்னால் பாதிக்கப்பட்ட பெண்கள் இருந்தால் அவர்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா?

பாலியல் சர்ச்சைகளால் ஏற்படும் சமூக சமநிலையற்ற சூழலை அரசாங்கம் எப்படி சரிசெய்யப் போகிறது?

வியாழன், 2 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon