மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

எனக்கு நோட்டீஸ் அனுப்பினால்: கருணாஸ் சஸ்பென்ஸ்!

எனக்கு நோட்டீஸ் அனுப்பினால்: கருணாஸ் சஸ்பென்ஸ்!

சபாநாயகர் தனக்கு நோட்டீஸ் அனுப்பாததன் காரணம் தெரியவில்லை என திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூன்று எம்.எல்.ஏ.க்களும் அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி கொறடா அளித்த பரிந்துரையின் பேரில் மூவரிடமும் விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால், தினகரனுக்கு ஆதரவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் அளித்த கருணாஸ், திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த தமிமுன் அன்சாரி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்படவில்லை.

இதுதொடர்பாக புதுக்கோட்டையில் நேற்று (மே 1) செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், “தொடர்ந்து தகுதி நீக்க நடவடிக்கைகள் நடந்துவருகிறது. இதற்கான காரணம் என்னவென்று பார்த்தால் முழுக்க முழுக்க அரசியல்தான். ஆனால், தேர்தல் முடிவுகள் வரும் முன்பே இதுபோன்ற ஒரு பரிந்துரையை கொறடா அளித்திருக்கிறார் எனும்போது, அவர்களுக்கு ஏதோ அச்சம் இருப்பதாகவே தோன்றுகிறது. கொறடா சொல்கிறார், மூவரும் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டிருக்கிறார்கள் என்று. ஆனால், தாங்கள் அதிமுகவுக்கு ஆதரவாக இருப்பதாக மூவரும் தெரிவித்திருக்கிறார்கள். எனவே கொறடாவின் புகாரே நேர்மாறாக உள்ளது” என்று விமர்சித்தார்.

இடைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும்பட்சத்தில் என்னுடைய வாக்கு யாருக்கு என்பதை அந்த நேரத்தில் முடிவு செய்வேன். அது உங்களுக்கே வெளிப்படையாகத் தெரிந்துவிடும் என்று குறிப்பிட்ட கருணாஸ், “எனக்கு ஏன் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பவில்லை என்று தெரியவில்லை. அதை அவரிடம்தான் கேட்க வேண்டும். எனக்கு நோட்டீஸ் அனுப்பினால் அடுத்து என்ன செய்வேன் என்று உங்களுக்கு தெரியும் அல்லவா?” என்றும் தெரிவித்தார்.

வரும் தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் குறைந்தால் அதற்குக் காரணம் அவர்கள் வைத்த கூட்டணியாகத்தான் இருக்கும் என்றும், இந்தத் தேர்தலில் மத்திய மாநில அரசுகளின் கைப்பாவையாகவே தேர்தல் ஆணையம் செயல்பட்டிருப்பதாகவும் கருணாஸ் குற்றம்சாட்டினார்.

வியாழன், 2 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon