மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 அக் 2019

மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு!

மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு!

ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐநா அறிவித்துள்ளது. இது இந்தியாவுக்குக் கிடைத்த முக்கிய தூதரக ரீதியான வெற்றியாகக் கருதப்படுகிறது. தொடர் முட்டுக்கட்டைகளுக்குப் பிறகு சீனா ஒப்புதல் அளித்துள்ளதால் அவர் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சையது அக்பருதின் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 14ஆம் தேதியன்று புல்வாமாவில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய குண்டுவெடிப்பில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. இதையடுத்து இந்திய விமானப் படையின் விமானங்கள் பாகிஸ்தானில் பாலகோட் பகுதியிலுள்ள ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் பெரிய முகாமை குண்டு வீசித் தாக்கின.

மசூத் அசாருக்குத் தற்போது வயது 50. பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் பகவல்பூரில் பிறந்த இவர் 2000ஆம் ஆண்டில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைத் தொடங்கினார். 2001ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தாக்குதல், ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதல், பதன்கோட் தாக்குதல், அண்மையில் நடைபெற்ற புல்வாமா தாக்குதல் ஆகியவற்றுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்கொலை படையினரை உருவாக்குவதில் வல்லவர் என்ற பெயர் மசூத் அசாருக்கு உண்டு.

பிப்ரவரி மாதத்தில், ஐநா பாதுகாப்புக் குழுவில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதற்கு சீனா முட்டுக்கட்டை போட்டது. இதுவரையில் இவ்விவகாரத்தில் நான்கு முறை சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது. சீனாவின் செயல் ஏமாற்றமளிப்பதாக இந்திய தரப்பு தெரிவித்தது. சீனாவின் செயலுக்கு ஐநா பாதுகாப்புக் குழு உறுப்பு நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன. மசூத் அசாரை பயங்கரவாதியாக அறிவிப்பதற்கு சீனா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டால் ஐநா பாதுகாப்புக் குழு உறுப்பு நாடுகள் மாற்று வழிகளைப் பரிசீலிக்க வேண்டும் என்று அமெரிக்கா பரிந்துரைத்தது.

இதையடுத்து மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதற்கு அமெரிக்கா உட்பட முக்கிய உறுப்பு நாடுகள் ஐநா பாதுகாப்புக் குழுவில் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவர திட்டமிட்டன. எனினும், ஐநாவின் 1267 தடைக் குழுவின் கீழ் மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டால் அவர் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய தடை விதிக்கப்படுவதோடு அவரது சொத்துகளும் முடக்கப்படும். மேலும், தீர்மானத்தையும் முடக்கும் அதிகாரம் சீனாவுக்கு இருந்தது.

இதே போக்கை சீனா தொடர்ந்தால் பாதுகாப்புக் குழுவில் வேறு நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என அமெரிக்கத் தரப்பும் தொடர்ந்து எச்சரித்து வந்தது. ஐநா பாதுகாப்புக் குழுவில் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதற்கு பிரான்ஸ் முன்மொழிந்தது. இதற்கு ஐநா பாதுகாப்புக் குழுவில் 13 நாடுகள் ஆதரவளித்தன. அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நிரந்தர உறுப்பினர்களும், 10 நிரந்தரமில்லா உறுப்பினர்களும், உறுப்பினரல்லாத நாடுகளும் பிரான்ஸின் முன்மொழிதலுக்கு ஆதரவளித்தன. எனினும், நிரந்தர உறுப்பினராக இருக்கும் சீனா இந்த முன்மொழிதலுக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டது.

பின்னர் பிரான்ஸ் நாட்டில் மசூத் அசாருக்கு இருந்த சொத்துகளை அந்நாட்டு அரசு முடக்கியது. இதுதொடர்பாக பிரான்ஸ் வெளியிட்ட அறிக்கையில் “பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுடன் எப்போதும் பிரான்ஸ் துணை நின்றுள்ளது. இனியும் துணை நிற்கும்” என்று தெரிவிக்கப்பட்டது.

இது ஒருபுறமிருக்க, பாலகோட் தாக்குதலுக்குப் பிறகு மசூத் அசார் உடல்நலம் குன்றியதால் இறந்துவிட்டதாக சில செய்திகள் வெளியாகின. எனினும், தான் உயிருடன் இருப்பதாக மசூத் அசார் விளக்கமளித்தார். ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் அதிகாரபூர்வ இதழான அல் கலாமில் மசூத் அசார் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். தனது உடல்நலம் பற்றி வெளியான அனைத்து வதந்திகளையும் மசூத் அசார் மறுத்திருந்தார். மேலும், புல்வாமா தாக்குதல் ஒரு சிறந்த பணி என்று மசூத் அசார் புகழாரம் சூட்டியிருந்தார்.

இந்தியாவின் தரப்பிலும் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பது தொடர்பாக சீனாவிடம் தொடர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தியாவின் வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலே அவ்வப்போது சீனாவுக்கு அரசு பயணம் மேற்கொண்டு இவ்விவகாரம் தொடர்பாக சீன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார்.

அண்மையில் சீன பிரதமர் ஜி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் (ஏப்ரல் 30) சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் பேச்சாளர் கெங்க் சுவாங் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் விவகாரத்தில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவ்விவகாரம் முறையாகத் தீர்க்கப்படும் என்பதை மட்டுமே என்னால் கூற முடியும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், மசூத் அசார் விவகாரத்தில் சீனா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு அவரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் மசூத் அசாரின் சொத்துகள் முடக்கப்படுவதோடு, அவர் வெளிநாடுகளுக்குப் பயணிக்கவும் தடை விதிக்கப்படும். இது தூதரக ரீதியாக இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. மக்களவைத் தேர்தலில் இன்னும் மூன்று கட்ட வாக்குப்பதிவுகள் மீதம் இருப்பதால், தேர்தல் பிரச்சாரங்களில் மசூத் அசார் விவகாரத்தை பாஜக கையிலெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதன், 1 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon