மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 ஆக 2020

கனிமொழி தூத்துக்குடியை விட்டுப் போகமாட்டார்- ஸ்டாலின்

கனிமொழி தூத்துக்குடியை விட்டுப் போகமாட்டார்- ஸ்டாலின்

தூத்துக்குடி எம்பி தேர்தலில் கனிமொழி ஜெயித்துவிட்டார் என்றும், அவர் தூத்துக்குடியை விட்டு எங்கேயும் போகமாட்டார் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (மே 2) ஓட்டப்பிடாரத்தில் கூறியிருக்கிறார்.

இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (மே 2) ஓட்டப்பிடாரத்தில் விவசாயிகள், குடியிருப்போர் சங்கத்தினர், உப்பளத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரையும் ஒருசேர சந்தித்தார். இந்நிகழ்ச்சியில் எம்.பி. வேட்பாளர் கனிமொழி, தொகுதிப் பொறுப்பாளர் கே.என்.நேரு, மாவட்டச் செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இவர்களோடு சட்டமன்ற திமுக வேட்பாளர் சண்முகய்யாவும் மேடையில் இருந்தார்.

நிகழ்ச்சியில் ஒவ்வொரு சங்கத்தின் சார்பிலும் சிலர் தங்களது பிரச்சினைகளையும் கோரிக்கைகளையும் மேடையிலேறி பேசினார்கள். அவர்கள் பேசி முடித்த பின் ஸ்டாலின் பேசினார்.

“உப்பளத் தொழிலுக்கான சட்டங்கள் பல இருந்தாலும் அவை முறையாக நிறைவேற்றப்படவில்லை. உப்பளத் தொழிலைக் காப்பாற்ற கடந்த தேர்தலில் ஆட்சியாளர்களால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னும் காப்பாற்றப்படவில்லை.

ஸ்பிக் நகர் வியாபாரிகள் சங்கத்தினர் பேசுகையில், ‘மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட காரணத்தால் வரிமட்டுமே அதிகமாகியிருக்கிறது. வேறு எந்த சலுகையும் இல்லை என்று குறிப்பிட்டார்கள். அத்திமரப்பட்டு விவசாயிகள், கேஸ் விலை கேபிள் டிவி விலை உயர்வு, ஜிஎஸ்டி, பேருந்து வசதி இல்லை என்றெல்லாம்சொன்னார்கள். குடிதண்ணீர் பிரச்னை பற்றியும் எடுத்துரைத்தீர்கள்” முதலில் பிரச்சினைகளைத் தொகுத்துப் பேசிய ஸ்டாலின் தொடர்ந்தார்.

“ திமுகவைப் பொறுத்தவரை இன்றைக்கு தேர்தலுக்காக உங்களை சந்திக்க வந்திருந்தாலும் தேர்தல் இல்லாத நேரங்களில் கூட உங்களை சந்திக்க வருகிறவர்கள் திமுகவினர்தான். தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக ஆட்சியில் திமுக இல்லை. ஆனபோதும் மக்கள் பணியில் இருந்து விலகிவிடாமல் தொடர்ந்து முழுமையாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.

சட்டமன்ற பொதுத் தேர்தல் வந்த நேரத்தில் நமக்குநாமே என்ற பயணத்தை வகுத்து தமிழகம் முழுக்க சென்று மக்களை சந்தித்தேன். எல்லா தரப்பு மக்களையும் நேரடியாக சந்தித்தேன். இங்கே உப்பளத்துக்கும் வந்தேன். அந்த அடிப்படையில்தான் தேர்தல் அறிக்கையும் தயாரித்தோம்.

இனிமேல் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. திமுக ஆட்சிக்கு வருமென்று எங்களுக்கு இருக்கும் நம்பிக்கை போலவே மக்களாகிய உங்களுக்கும் இருக்கிறது. ஏற்கன்வே 18 ஆம் தேதி நடந்து முடிந்த நாடளுமன்றத் தேர்தலில் என் தங்கை கனிமொழியை எம்பியாக தேர்ந்தெடுத்து முடித்துவிட்டீர்கள். முடிவு வரவேண்டியதுதான் பாக்கி.

அவர் இங்கேயே இருப்பார். பல நிகழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டிய நேரம், நாடாளுமன்ற அலுவல் நேரம் தவிர இங்கேயே இருக்கும் முடிவோடுதான் கனிமொழி தூத்துக்குடியிலேயே வீடு எடுத்துவிட்டார். அதே நம்பிக்கையொடு சட்டமன்ற இடைத்தேர்தலிலும் திமுகவை நீங்கள் ஆதரிக்க வேண்டும்.

மொத்தம் 22 தொகுதிகளிலும் திமுகதான் வெற்றிபெறுவோம். சட்டமன்றத்தில் திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்று உளவுத்துறை சொல்லிவிட்டதால்தான், இப்போது 3 எம்.எல்.ஏ.க்களை பதவியைப் பறிக்க திட்டமிட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். என்னதான் அவர் நோட்டிஸ் அனுப்பியிருந்தாலும் அவர் நடவடிக்கை எடுக்க முடியாதபடி நான் ஒரு நடவடிக்கை எடுத்துவிட்டேன்.

ஆட்சியைக் காப்பாற்றத்தான் எடப்பாடி செயல்படுகிறார். மக்களைக் காப்பாற்ற அவர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை” என்று குற்றம் சாட்டினார் ஸ்டாலின்.

வியாழன், 2 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon