மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 14 அக் 2019

நீதிபதிகள் தேர்வு: ஒருவர் கூட தேர்ச்சி இல்லை!

நீதிபதிகள் தேர்வு: ஒருவர் கூட தேர்ச்சி இல்லை!

தமிழகம் முழுவதும், 31 மாவட்ட நீதிபதிகள் பணியிடங்களுக்கு நடந்த முதல் நிலைத் தேர்வில் கலந்து கொண்ட 3 ஆயிரத்து 562 பேரில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்பது நீதித் துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 31 மாவட்ட நீதிபதிகள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்றுக் கடந்த ஜனவரி மாதம் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இந்த பணிக்கான முதல் நிலைத் தேர்வு கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி நடத்தப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றமும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும் இணைந்து நடத்திய இந்த தேர்வில், சிவில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என, 3 ஆயிரத்து 562 பேர் பங்கேற்றனர்.

பிரதான தேர்வு மே 25 மற்றும் 26ஆம் தேதிகளில் நடக்க உள்ள நிலையில், முதல் நிலைத் தேர்வில் பங்கேற்ற சிவில் நீதிபதிகள் உட்பட 3 ஆயிரத்து 562 பேரில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முதல் நிலைத் தேர்வில் பொதுப் பிரிவினர் 60 மதிப்பெண்களும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 52.5 மதிப்பெண்களும், பட்டியல் இன மற்றும் பட்டியல் பழங்குடியினர் 45 மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். இந்த மதிப்பெண்கள் பெறாதவர்கள், பிரதான தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தற்போது, முதல் நிலை தேர்வு முடிவுகள் நீதிமன்ற இணையதளத்தில் வெளியாகியுள்ள நிலையில் இதில், தேர்வெழுதிய 3 ஆயிரத்து 562 பேரில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் கேள்விகள் மிகவும் கடுமையாக இருந்ததாலும், தவறான விடைக்கு மைனஸ் மதிப்பெண் வழங்கப்பட்டதாலும் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை எனக் கூறப்படுகிறது.

அதுபோன்று புதுச்சேரியிலிருந்து தேர்வு எழுதிய 558 பேரும் தேர்ச்சி பெறவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

வியாழன், 2 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon