மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 ஆக 2020

ஃபானி புயல்: 8 லட்சம் பேர் வெளியேற்றம்!

ஃபானி புயல்: 8 லட்சம் பேர் வெளியேற்றம்!

ஃபானி புயல் நாளை ஒடிசாவில் கரையைக் கடக்கிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள 8 லட்சம் பேரை வெளியேற்றும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான ஃபானி புயல் நாளை (மே 3) மதியம் ஒடிசா மாநிலத்தின் கோபால்பூர் மற்றும் சாந்த்பலி இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஒடிசாவில் நாளை பலத்த காற்றுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய முன்னறிவிப்புகள் கூறியுள்ளன. புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 175 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 1999ஆம் ஆண்டு ஒடிசாவை தாக்கிய புயலுக்குப் பிறகு மீண்டும் உருவாகியுள்ள கடுமையான புயல் ஃபானி என்று கூறப்படுகிறது.

ஒடிசா மாநிலத்தின் புரி, ஜெகத்சிங்பூர், கேந்த்ரபரா, பத்ராக், பலசோர், மயூர்பான்ஜ், கஜபதி, கஞ்சம், கோர்தா, கட்டாக், ஜெய்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 8 லட்சம் மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் பணியில் அம்மாநில அரசு ஈடுபட்டு வருகிறது. புயலால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளுக்கு கடற்படை, விமானப் படை, கடலோர பாதுகாப்பு மற்றும் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர், ஒடிசா பேரிடர் மீட்பு படையினர் அனுப்பப்பட்டுள்ளனர். ஒடிசா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு உச்சபட்ச எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசியப் பேரிடர் மீட்புப் படையின் சார்பில் ஒடிசாவுக்கு 28 அணிகள் அனுப்பப்பட்டுள்ளன. அதேபோல ஆந்திராவுக்கு 12 அணிகளும், மேற்கு வங்கத்துக்கு 6 அணிகளும் அனுப்பப்பட்டுள்ளன. புயலால் ஒடிசா, ஆந்திரா மட்டுமின்றி மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்திலும் கடலோர பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புயலுக்குப் பின் சாயும் மரங்களை அகற்றவும், மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை படகுகளின் உதவியுடன் மீட்கவும், தொலைத்தொடர்பு வசதிகளை சீர் செய்யவும் கூடுதலாக 30 அணிகள் காத்திருக்கின்றன. ஒடிசாவில் மீட்புப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் நேற்று மாலை அரசு அதிகாரிகள் அடங்கிய உச்சபட்ச ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. ஒடிசாவில் உள்ள அனைத்துப் பள்ளி கல்லூரிகளுக்கும் அடுத்த 3 நாட்களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மே 15 வரை ஒடிசாவில் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் அனைவருக்கும் விடுமுறை ரத்து செய்யப்படுவதாக அம்மாநில தலைமைச் செயலாளர் ஏபி.பதி அறிவித்துள்ளார். அதேபோல காவல் துறையினருக்கும் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேற்கூறிய மாவட்டங்களில் இதுவரை 880 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. புயல் பாதிக்கப்படக்கூடிய 11 மாவட்டங்களில் மீட்புப் பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் விதிகளைத் தளர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 2 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon