மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 10 ஜூலை 2020

முன்னாள் விடுதலைப் புலிகள் உதவியை நாடும் இலங்கை!

முன்னாள் விடுதலைப் புலிகள் உதவியை நாடும் இலங்கை!

தொடர் குண்டு வெடிப்புச் சம்பவத்துக்குப் பின் இலங்கையில் நிலவி வரும் பயங்கரவாத அச்சுறுத்தலை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வர தமது அனுபவங்களை பகிர்ந்துகொள்ள தயாராக இருப்பதாக முன்னாள் விடுதலைப் புலி ஒருவர் கூறியுள்ளார்.

இலங்கையில் ஏப்ரல் 22ஆம் தேதி ஈஸ்டர் ஞாயிறன்று தேவாலயங்களிலும், நட்சத்திர விடுதிகளிலும் நடத்தப்பட்ட தற்கொலைப் படைத்தாக்குதல்களில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இலங்கையைச் சேர்ந்த உள்நாட்டு இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் இணைந்து இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்துக்குப் பிறகு மேலும் சில இடங்களில் இலங்கையில் வெடிகுண்டுகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் இலங்கையில் இன்னமும் பதட்டமான நிலையே காணப்படுகிறது. இலங்கையில் நிலவும் இந்த பதட்ட நிலையை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்து அமைதியை நிலைநாட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் சிலரின் உதவியை இலங்கை அரசு நாடியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கையில் அந்நாட்டு ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான உள்நாட்டுப் போர் முடிவடைந்து பத்தாண்டுகள் ஆகியுள்ளது. அதிலிருந்த விடுபட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் சிலர் இணைந்து ஆயுதப் போராட்டங்களில் ஈடுபடுவதை நிறுத்திக்கொண்டு ஜனநாயகப் போராளிகள் என்ற கட்சியைத் தொடங்கினர்.

இந்நிலையில், தற்போது இலங்கை எதிர்நோக்கியுள்ள பயங்கரவாத அச்சுறுத்தலை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தமது அனுபவங்களை இலங்கை அரசுடன் பகிர்ந்துகொள்ள தயாராக இருப்பதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளரான க.துளசி கூறியுள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் ராடா வான் காப்பு படையணியின் போராளியான இவர் இதுகுறித்து பிபிசி ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில்,

“சர்வதேச அளவில் செயல்படுகிற பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகளை தடுக்கிற திட்டம் இலங்கை அரசிடம் கிடையாது.

30 ஆண்டுகால யுத்தத்தின்போது இலங்கையில் இருந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் இந்த 10 ஆண்டுகளில் கிடையாது. வன்னி பகுதியை விடுதலைப் புலிகள் ஆட்சி செய்தபோது அங்கு உருவான திடீர் செல்வந்தர்கள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பில் அதிகக் கவனம் செலுத்தப்பட்டது. ஆனால் இப்போது இலங்கையில் உருவாகியுள்ள திடீர் செல்வந்தர்களை பற்றி இலங்கை அரசு எச்சரிக்கையுடன் செயல்படவில்லை. தற்போதேனும் அவர்களிடம் விசாரணை நடத்தலாம்” என்று கூறியுள்ளார்.

மேலும், தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு இலங்கை ராணுவம், சில தினங்களுக்கு முன்பு தன்னை அணுகி கோரிக்கை வைத்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், “இலங்கை எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தலுக்கான உதவிகள் குறித்து இலங்கை அரசாங்கம் தம்மிடம் கோரும் பட்சத்தில், அதனை உரிய வகையில் செய்ய தாம் எந்நேரத்திலும் தயாராகவுள்ளேன். அதே சமயத்தில் இலங்கை ராணுவத்தினர் கோரிக்கையை தாம் ஏற்று செயற்படும் பட்சத்தில், எதிர்காலத்தில் தான் பெரிய அச்சுறுத்தல்களை சந்திக்க நேரிடும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

வியாழன், 2 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon