மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 7 ஆக 2020

முட்டாள்களின் பேராசை!

முட்டாள்களின் பேராசை!

ஒரு கப் காபி!

கல்லூரி காலத்தில் என்னுடன் படித்த மாணவன் ஒருவன் யாருடனும் அவ்வளவாகப் பேச மாட்டான். சாந்தமாகவே இருக்கும் அரிய குணம் கொண்டவன். தொலைதூர கிராமத்திலிருந்து வந்திருந்தான். வகுப்பில் என்ன நடந்தாலும் அமைதியாகவே இருப்பான். ஒருநாள் ஆசிரியர் அவனை எழுப்பிப் பல கேள்விகளைக் கேட்டார். அவன் எதற்குமே பதிலளிக்கவில்லை. வான்வழி வந்த பெரும்பான்மையான அறிவுஜீவி ஆசிரியர்களைப் போலவே அவரும் புத்தகத்தைத் தூக்கி அவன் முகத்தில் எறிந்து வெளியே அனுப்பினார். இப்படியாகப் பல முறை அவன் அவமதிக்கப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

சில வாரங்கள் கழித்து தேர்வுகள் முடிந்து விடைத்தாள்களை வழங்கிக்கொண்டிருந்தார் ஆசிரியர். அவன் ஏறக்குறைய 90% மதிப்பெண் பெற்றிருந்தான். “நான் கேள்வி கேட்டபோதெல்லாம் நீ எதற்கும் பதிலளிக்கவில்லை. ஆனால், எப்படி உன்னால் இவ்வளவு மதிப்பெண் பெற முடிந்தது?” என்று ஆசிரியர் கேட்டார்.

அதற்கு அவன், “எனக்கு இடதுபக்கம் காது சரியாகக் கேட்காது. அதனால் நான் வகுப்புகளில் கவனம் செலுத்தியதில்லை. கவனம் செலுத்தினாலும் பயனில்லை. என்னைப் போன்றோருக்காகத்தான் புத்தகங்கள் உள்ளன. நான் அவற்றை முறையாகப் பயன்படுத்தி மதிப்பெண் பெற்றேன்” என்று சற்றும் அவனது பொறுமை சிதறாமல் பதிலளித்துவிட்டு அமர்ந்தான்.

“ஒரு முட்டாள் தன்னைத் தானே அறிவுஜீவி என்று எண்ணுகிறான். ஆனால், ஓர் அறிவாளிக்கு மட்டுமே தான் ஒரு முட்டாள் என்பது தெரியும்” என்கிறார் ஷேக்ஸ்பியர். ஒருவரைப் பார்த்தவுடனே அவர் பற்றி எதுவும் தெரியாமல் சில முடிவுகளை எடுத்துவிடுவது மனித இயல்பு. இதை Prejudice என்பார்கள். அத்தகைய முடிவைத்தான் எங்கள் ஆசிரியரும் எடுத்தார்.

முட்டாள் எனக் கருதத் தனக்கு யாராவது ஒருவர் வேண்டுமென்பதே மனித ஜீவன்களின் பேராசை. மற்றவரை முட்டாள் என்றழைப்பதில் கிடைக்கிறது பேரின்பம். ஆனால், உண்மை என்பது இத்தகைய முன்முடிவுகளுக்கும் அற்ப ஆசைகளுக்கும் அப்பாற்பட்டது என்பதை நாம் உணரும் தருணங்களும் உருவாகத்தான் செய்கின்றன.

நாங்கள் அனைவரும் அந்த மாணவனின் திறமையை உணர்ந்துகொண்டதுபோல!

- அ. விக்னேஷ்

வியாழன், 2 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon