மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 ஆக 2020

4 தொகுதி இடைத்தேர்தல்: இறுதிப்பட்டியல் வெளியீடு!

4 தொகுதி இடைத்தேர்தல்: இறுதிப்பட்டியல் வெளியீடு!

4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று (மே 2) வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்ட மன்றத் தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தலின் இறுதிகட்ட வாக்குப்பதிவு நடக்கும் மே 19ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் ஏப்ரல் 22 முதல் 29 வரை நடந்தது. ஒட்டுமொத்தமாக 256 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 30ஆம் தேதி நடந்தது. பரிசீலனையில் 104 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 152 மனுக்கள் ஏற்கப்பட்டன. இதில் 113 பேர் சுயேட்சை வேட்பாளர்கள்.

வேட்பு மனுக்களை திரும்பப் பெற இன்று இறுதி நாளாகும். இன்று மாலை 3.00 மணி வரையில் வேட்பு மனுக்களை திரும்பப் பெற கால அவகாசம் இருந்தது. இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியலை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி 4 தொகுதிகளிலும் 137 பேர் போட்டியிடவுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடைசி நாளான இன்று 15 பேர் தங்களது வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுக்கொண்டனர். இந்த 15 பேரும் சுயேட்சை வேட்பாளர்கள்.

அதிகபட்சமாக அரவக்குறிச்சி தொகுதியில் 63 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 68 பேர் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், அவர்களில் 5 சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது மனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்டனர். திருப்பரங்குன்றம் தொகுதியில் 63 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் 19 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 44 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இன்று 7 பேர் வேட்பு மனுவை திரும்பப்பெற்றுக் கொண்டதால் 37 பேர் களத்தில் உள்ளனர்.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் 41 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் 23 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 18 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது. அதில் 3 பேர் வேட்பு மனுவை திரும்பப் பெற்றுவிட்டதால் 15 பேர் தற்போது களத்தில் உள்ளனர். அதேபோல சூலூர் தொகுதியில் 22 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அங்கு யாரும் மனுவை திரும்பப் பெறவில்லை இவர்களுக்கான சின்னமும் இன்றே ஒதுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

வியாழன், 2 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon