மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 25 ஜன 2021

அனைவருக்குமான அடிப்படை வருமானம் - 7

அனைவருக்குமான அடிப்படை வருமானம் - 7வெற்றிநடை போடும் தமிழகம்

இந்தியாவில் அனைவருக்குமான அடிப்படை வருமானம் பற்றிய விவாதத்தைப் பிரபலப்படுத்தியதில் 2014-2018 காலத்தில் அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்ரமணியன் அவர்களுக்குப் பெரும்பங்கு உண்டு. பொருளாதார ஆய்வறிக்கை 2016-17இல் இந்தக் கருத்தாக்கத்தைப் பற்றி விரிவாக விவாதித்தது.

நூற்றுக்கணக்கான மக்கள்நலத் திட்டங்களும், மானியங்களும் நம் நாட்டில் உள்ளன. அவற்றை தகுதியானவர்களைக் கண்டறிந்து சேர்ப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இதனால் ஏற்படும் செலவினங்கள் அதிகரித்துக்கொண்டே போவதாகவும், நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருப்பதாகவும் அரசு தொடர்ந்து கூறிக்கொண்டே வருகிறது.

‘ஏழை மக்கள் மிகுதியாக இருக்கும் நம் நாட்டில், மக்கள் நலனையும் உறுதி செய்ய வேண்டும்; அதே நேரத்தில் செலவுகளையும் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு உள்ளது. அதனால் அனைவருக்குமான அடிப்படை வருமானத்தை நோக்கி நகர்வதைப் பற்றி சிந்திக்கத் தொடங்க வேண்டும்’ என்ற கருத்து வலுப்பெறத் தொடங்கியுள்ளது. அதன் பிரதிபலிப்பாகத்தான் ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள விவாதத்தை நாம் பார்க்க வேண்டும்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் வழங்காமல், வறுமைக்கோட்டை உயர்த்தி, 75 விழுக்காடு மக்களுக்கு மட்டும் அடிப்படை வருமானம் வழங்க தேவைப்படும் தொகை, தேச மொத்த உற்பத்தியில் கிட்டத்தட்ட 5 விழுக்காடாக இருக்கும் என்கிறது ஆய்வறிக்கை. ஒவ்வொரு நபருக்கும் அடிப்படை வருமானமாக வழங்கப்பட வேண்டிய தொகையைத் தீர்மானிப்பதுதான் மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

2016-17 நிதியாண்டில் அரசின் மொத்த செலவில் சமூகநலத் திட்டங்களுக்குச் செய்த செலவின் பங்கு தேச மொத்த உற்பத்தியில் 5 விழுக்காடு. இது இரண்டு முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. அனைவருக்குமான அடிப்படை வருமானத்தைச் செயல்படுத்த எங்கிருந்து வளங்களைத் திரட்ட வேண்டும்? நலத்திட்டங்கள், மானியங்களை வெட்டிதான் இதனைச் செயல்படுத்த முடியுமா?

இதற்குப் பொருளாதார வல்லுநர்கள் சில வழிகளை முன்வைத்துள்ளனர். வசதி படைத்தவர்களுக்கு அளிக்கப்படும் மானியங்களை ஓரளவுக்கு வெட்டினால் ஏற்படும் சேமிப்புகள், பெருநிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் அளிக்கப்படும் சலுகைகள், வரி விலக்குகளைக் குறைப்பதனால் கிடைக்கும் வளங்களைக் கொண்டு சிறப்பான முறையில் அனைவரும் பயன்பெறும்படி இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடியும் என்று ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர். செல்வந்தர்களிடமிருந்து கூடுதலாக நேர்முக வரிகள் வசூலித்து இதற்கான நிதி திரட்டுவதால் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் குறைவதற்கான வாய்ப்புண்டு.

ஆனால், ‘ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் நலத்திட்டங்கள், மானியங்களோடு சேர்த்து அடிப்படை வருமானத்தை அளிக்க நிதிக் கோட்பாடுகள் அனுமதிக்காது; ஏற்கனவே உள்ள நலத் திட்டங்கள் சிலவற்றை நீக்காமல் இது சாத்தியமாகாது ’ என்று ஆய்வறிக்கை சொல்கிறது. இதனால், அரசு தனது கடமைகளைச் சந்தையிடம் ஒப்படைத்து விலகிக்கொள்ள முயல்கிறதா எனும் அச்சம் ஏற்படுகிறது.

உணவுப் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, உட்கட்டமைப்பு, பல்வேறு பொதுப்பண்டங்கள் (Public Goods) ஆகியவற்றை அரசு தொடர்ந்து வழங்க வேண்டும். அடிப்படை வருமானமாகப் பெறும் தொகையை எவ்வகைப் பிரச்சினையும் இன்றி மக்கள் பயன்படுத்துவதற்கான வசதிகளையும், சூழலையும் உருவாக்கித்தரும் கடமை அரசுக்கு இருக்கிறது.

அனைவருக்குமான அடிப்படை வருமானம் - 1

அனைவருக்குமான அடிப்படை வருமானம் - 2

அனைவருக்குமான அடிப்படை வருமானம் - 3

அனைவருக்குமான அடிப்படை வருமானம் - 4

அனைவருக்குமான அடிப்படை வருமானம் - 5

அனைவருக்குமான அடிப்படை வருமானம் - 6

.

.

மேலும் படிக்க

.

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பா? மும்முனை வியூகம்!

.

நீட்: கல்வி வணிகர்கள் விரிக்கும் வலை!

.

அமமுகவில் இணைந்த கொங்கு பாமக பிரமுகர்கள்!

.

தேனிக்கு திடீர் இயந்திரங்கள்: ஓ.பன்னீர் மகனை ஜெயிக்க வைக்க முயற்சியா?

.

திருப்பரங்குன்றம்: மலையேறப் போவது யார்?

வியாழன், 9 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon