மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 5 ஆக 2020

இந்த ஒப்பீடு தேவையா?

இந்த ஒப்பீடு தேவையா?

நமக்குள் தேடுவோம் 10 - ஆசிஃபா

இன்ஸ்டாகிராமில் பிரபலங்கள் பலரும் நேரடியாக தங்களுடைய புகைப்படங்களை பதிவிடுகிறார்கள். பொதுமக்களுக்கும் அவர்களுக்குமான தூரம் குறந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். இதில் ஒரு நுண்சிக்கல் இருக்கிறது.

இன்றைய சூழலில் பிரபலங்கள், குறிப்பாக சினிமா பிரபலங்கள், அநேகமாக ஒரு ஃபார்முலாவின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். வெள்ளை நிறமாக, உயரமாக, சற்று நீளமான முடி, மெலிந்த உடல்வாகு என்று சில கட்டமைப்புகளுக்கு உட்பட்டே இவர்கள் இருக்கிறார்கள். சிலர் விதிவிலக்காக இருந்தாலும், ஏறத்தாழ இந்த ஃபார்முலாவுக்குள் வருவதற்குச் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்துவிடுகிறார்கள். மேக்கப், யூகேம் பெர்ஃபெக்ட் என்று புகைப்படங்களுக்காகத் தயாராகிப் புகைப்படங்கள் போடுகிறார்கள்.

இந்தப் புகைப்படமும், நாம் சாலையில் நின்று எடுத்துக்கொள்ளும் புகைப்படமும் ஒன்றா? ஆனால், நாம் இது இரண்டையும் ஒப்பீடு செய்கிறோம் அல்லவா? இது சாதாரண ஒப்பீடு அல்ல. எதிர்மறையான ஒப்பீடு என்று சொல்லலாம். காரணம், சம்பந்தமே இல்லாத இரு விஷயங்களை ஒப்பீடு செய்கிறோம். நாம் வாழும் சூழல், வாழ்க்கைமுறை, புகைப்படத்துக்கான மெனெக்கெடல் என்று பல கூறுகள் இணைந்தே நம்மை, நம் தோற்றத்தைத் தீர்மானிக்கின்றன. இரு வேறு உலகங்களைச் சேர்ந்தவர்களின் தோற்றங்களை ஒப்பிடுவது அடிப்படையிலேயே பிழையானது.

இது வெறும் அழகு தொடர்பான அல்லது சமூக வலைத்தளம் தொடர்பான விஷயம் மட்டும் அல்ல. அனைத்து இடங்களிலும் இதை நாம் செய்கிறோம். துபாயில் இருக்கும் என்னுடைய பால்ய காலத் தோழியின் வாழ்க்கையையும் என்னுடைய வாழ்க்கையையும் ஒப்பீடு செய்திருக்கிறேன்; 27 வயதில் மாதம் ஒரு லட்சத்துக்கும் அதிகமாகச் சம்பாதிக்கும் நபரைப் பார்த்து 20 வயதில் கல்லூரிகூட முடிக்காத நபர் ‘நாமளும் இருக்கிறோமே!’ என்று சொல்லிக்கொள்வதைப் பார்த்திருக்கிறேன்.

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். சற்றும் தொடர்பில்லாத விஷயங்களை ஒப்பீடு செய்வதை வழக்கமாகவே வைத்திருக்கிறோம்.

இந்த ஒப்பீடு, நம்முடைய மகிழ்ச்சியான அல்லது நன்றாகப் போய்க்கொண்டிருக்கும் வாழ்க்கையையும் சிக்கலாக்கிவிடுகிறது என்றுதான் தோன்றுகிறது. சில சூழல்களில், அதிகபட்சமாக வேறொரு நபராகவே நாம் மாறிவிட விரும்புகிறோம். உண்மையில் ஒருவர் அடையக்கூடிய மோசமான நிலைகளில் ஒன்று இது. கார்ப்பரேட்கள் நம்மிடம் முன்னிறுத்தும் பல விஷயங்களுக்காக ஏன் நாம் நாமாக இருப்பதை வெறுக்கிறோம்?

ஓப்பீடு என்பது வீடுகளிலேயே சாதாரணமாக்கப்பட்ட விஷயம். அதுவும், இந்த எதிர்மறையான ஒப்பீட்டைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அரசு வேலை பார்க்கும் பக்கத்து வீட்டு அக்கா கார் வாங்கிருப்பதைப் பார்த்துவிட்டு, வேலை தேடிக்கொண்டிருக்கும் நபர் தானும் கடன் வாங்கி கார் வாங்கும் நிலமை இன்றும் இருக்கிறது. சமூக வலைதளங்களும், இன்று நமக்கு இருக்கக்கூடிய exposure-ம் இந்த எதிர்மறை ஒப்பீட்டை மேலும் வலுப்படுத்தி, துரிதப்படுத்துகின்றன.

எங்கு, என்ன செய்துகொண்டு இருந்தாலும், ஒரு விஷயத்தை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். யார் என்ன செய்தாலும், என்ன வாங்கினாலும், எவ்வளவு சந்தோஷமாக இருந்தாலும், நம் வாழ்க்கை வேறும், அவர் வாழ்க்கை வேறு! இந்த உண்மையை உணர்ந்தால், இந்தக் கண்ணோட்டம் இருந்தால் தேவையற்ற ஒப்பீடும் அதனால் ஏற்படும் உணர்வு ரீதியான சிக்கல்களும் நம்மை அண்டாது.

தோற்றுப்போவேன் என்று அஞ்சியே...!


மேலும் படிக்க


ஆட்சிக் கவிழ்ப்பு: மத்திய அரசின் உதவியை நாடும் எடப்பாடி


டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி அழைப்பை நிராகரித்த நான்கு எம்.எல்.ஏ.க்கள்!


ஆட்சிக் கவிழ்ப்பு: திமுகவுக்கு அதிமுக தரப்பின் நிபந்தனை!


2.0: சீனாவில் பிரம்மாண்ட ஓப்பனிங்!


இளையராஜா 76: சுவாரஸ்யமான தருணங்கள்!


செவ்வாய், 4 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon