மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 5 ஆக 2020

கைதானவருக்கு வெகுமதி? - கொலை வழக்கில் திருப்பம்!

கைதானவருக்கு வெகுமதி? - கொலை வழக்கில் திருப்பம்!

கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டவரை விடுதலை செய்வதுடன் அவருக்கு வெகுமதி வழங்க வேண்டும் என ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி ஒருவர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் கடந்த மாதம் நடைபெற்ற மர்மமான மரணத்தின் புலனாய்வில் தெரியவந்த விவரங்களை ஒட்டியே இந்தக் கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.

கடந்த மே 25ஆம் தேதி, சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தின் பின்பக்கத்தில், 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் தலையிலும் முகத்திலும் அடிபட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் இதுபற்றி சத்தியமங்கலம் காவல் துறைக்குத் தகவல் கொடுத்தனர். போலீசார் அவரைக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மறுநாள் அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அவர் பவானிசாகர் அருகே உள்ள புது பீர்கடவு பகுதியைச் சேர்ந்த சின்னதுரை (வயது 45) என்பது தெரியவந்தது. முன்தலையிலும் மூக்குப் பகுதியிலும் பலமாக தாக்கப்பட்டிருப்பதால் சின்னதுரை உயிரிழந்திருப்பது உடற்கூறு ஆய்வில் தெரியவந்தது.

சத்தியமங்கலம் போலீசார் இதைக் கொலை வழக்காகப் பதிவு செய்து, சின்னதுரையை அடித்துக் கொலை செய்தவரைப் பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

பேருந்து நிலையத்தில் இரவு நேரக் கடைக்காரர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், சுமை தூக்குவோர் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பேருந்து நிலையம் அருகிலிருந்த கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள சாவக்காட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கோபால் (வயது 45) என்பவர்தான் சின்னதுரையைத் தாக்கியவர் என்பது இந்த விசாரணைகளில் தெரியவந்தது.

திருட்டும் தாக்குதலும்

இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் சத்தியமங்கலம் போலீசார் கோபாலைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். கோபால் விசாரணையின்போது அன்றிரவு நடந்ததை விளக்கினார்.

“நான் கடந்த மாதம் 24ஆம் தேதி தாளவாடியில் உள்ள என்னுடைய உறவினர் வீட்டுக்குச் சென்றேன். அவரிடமிருந்து ரூ.50 ஆயிரம் கடன் வாங்கிக்கொண்டு சாவக்காட்டுப் பாளையம் திரும்ப முடிவுசெய்தேன். அதன்படி தாளவாடியிலிருந்து சத்தியமங்கலம் பேருந்து நிலையத்துக்கு வந்தேன். இரவு நேரமாகிவிட்டதால் எனக்கு பஸ் கிடைக்கவில்லை. இதனால் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் தங்கிவிட முடிவு செய்து, அங்கு நின்றுகொண்டிருந்தேன்.

அப்போது அடையாளம் தெரியாத மூன்று பேர் என்னிடம் இருந்த பணத்தையும் செல்போனையும் பறித்துக்கொண்டு ஓடினார்கள். நான் அவர்களைத் துரத்தினேன். பணத்தைப் பிடுங்கிய ஒருவன் மட்டும் என்னிடம் சிக்கினான். அவனிடமிருந்து என் பணத்தையும் செல்போனையும் பிடுங்கினேன். அப்போது அந்த நபர் என்னைத் தாக்கினார். நானும், அவனின் முகத்தில் சரமாரியாகத் தாக்கினேன். இதில் அவர் மயங்கிக் கீழே விழுந்துவிட்டார்.

நான் அவரை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு வந்துவிட்டேன். காலை நான்கு மணிக்குப் புறப்படும் பேருந்தில் என்னுடைய ஊருக்குப் போய்விட்டேன்” என்று கோபால் கூறியுள்ளார்.

கோபாலைக் கைது செய்துள்ள போலீசார், அவரை சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின் கோபிச்செட்டிபாளையம் சிறையில் அடைத்தனர்.

தண்டனை அல்ல, வெகுமதி தர வேண்டும்!

கைதுசெய்யப்பட்டுள்ள கோபாலைக் கொலைக் குற்றவாளியாகக் கருத முடியாது என்று ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரியான கே.கே.முத்துசாமி இது குறித்து முகநூலில் கருத்து தெரிவித்துள்ளார்.

“சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் இரவு நேரங்களில் திருடர்கள் தொல்லை அதிகம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சாவக்கட்டுப்பாளையம் கோபால் என்பவர் தன்னுடைய பணத்தையும் செல்போனையும் பறித்துக்கொண்டு ஓடிய திருடனிடமிருந்து தனது பணத்தைக் காப்பாற்றும்போது ஏற்பட்ட கைகலப்பில் திருடன் இறந்துவிட, தற்போது கோபால் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இ.பி.கோ. பிரிவு 103இன்படி அவரின் செயல் (கொலை) குற்றமல்ல. கோபால் கடன் வாங்கி வந்தது, திருடனின் மீதுள்ள வழக்குகள், முன் தண்டனை பெற்ற விவரம் போன்ற விபரங்களைத் தீர விசாரித்து, கோபாலின் வாக்குமூலமும் சாட்சிகளும் உண்மையானதாக இருந்தால் அரசு அவருக்கு வெகுமதியளித்துக் கவுரவிக்க வேண்டும். அவர் மீது தொடரப்பட்டுள்ள வழக்கையும் கைவிட வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மதுரையில் இதைப் போன்றதொரு வழக்கில் அப்போது மதுரையில் எஸ்.பி.யாக இருந்த அஸ்ரா கார்க் கையாண்ட விதத்தையும் கே.கே.முத்துசாமி நினைவுகூர்ந்திருக்கிறார். அந்தச் சம்பவத்தில் அஸ்ரா கார்க் அந்தப் பெண்மீது எஃப்.ஐ.ஆர்.கூடப் பதிவுசெய்ய மறுத்தை முத்துசாமி நினைவுபடுத்தியுள்ளார்.

- எஸ்.எஸ்.மணி


மேலும் படிக்க


ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!


விஜய்க்கு இது முதன்முறை!


ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணனுக்குப் புதிய பொறுப்பு!


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


தனுஷின் ரீமேக் முடிவை மாற்றிய படம்!


வியாழன், 6 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon