மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 11 ஜூலை 2020

அந்தச் சுமையை இறக்கி வைக்கலாமே!

அந்தச் சுமையை இறக்கி வைக்கலாமே!

நமக்குள் தேடுவோம் 10 - ஆசிஃபா

கடந்த காலம் என்பது நம் அனைவருக்கும் உள்ளதுதான். அதில் நாம் தவறுகள் செய்திருப்போம்; நமக்குப் பிடிக்காதவை நிகழ்ந்திருக்கும்; நம்மைக் கஷ்டப்படுத்தும் நிகழ்வுகள் நடந்திருக்கும்; மனதிற்கு நெருக்கமானதை, நெருக்கமானவர்களை இழந்திருப்போம்; மோசமாக நடந்துகொண்டிருப்போம். இது ஏறத்தாழ எல்லோர் வாழ்விலும் உள்ளதுதான்.

ஆனால், அவற்றை நாம் இன்றும் தூக்கிக்கொண்டு அலைய வேண்டுமா என்பதுதான் கேள்வி. அப்படித் தூக்கிக்கொண்டு அலையும் நபர்களை எனக்குத் தெரியும். அவர்கள் வாழ்க்கை சங்கடமானதாக, கஷ்டமானதாக இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியும்.

கடந்த காலத்திலேயே உழல்வது நமக்கு எவ்வகையிலும் உதவாது என்பது மட்டுமல்ல. நம்மை மேலும் கஷ்டப்படுத்தும் செயல். நடந்ததை முற்றிலுமாக மறப்பது சாத்தியமற்றது. ஆனால், அதை நேற்று நடந்ததைப் போல ஃபிரஷ்ஷாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

கடந்த காலத்திலிருந்து நாம் கற்க வேண்டிய பாடங்கள் உள்ளன. எடுக்க வேண்டிய குறிப்புகள் உள்ளன. அதைச் செய்து முடித்துவிட்டு, அருங்காட்சியகத்தில் வைக்கும் பொருள்போல அதை ஓரமாக வைத்துவிட வேண்டும். எப்போதாவது கட்டாயம் ஏற்படும்போது அந்த நினைவை எடுத்துத் தூசி தட்டிப் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்!

கடந்த காலத்தைப் பற்றி நினைப்பதே தவறு என்பதல்ல. கடந்த காலத்தைப் பற்றி அதீதமாகச் மட்டுமே சிந்திப்பது, பேசுவது ஆகியவை தேவையற்றவை. ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு செயலிலும் கடந்த காலத்தைப் பற்றிச் சிந்திப்பது, மீண்டும் மீண்டும் வெவ்வேறு வகையில், வெவ்வேறு கோணத்தில் ஒரே நிகழ்வை அசை போடுவது ஆகியவை நமக்குப் பெரும் சுமையாகிவிடுகின்றன. மகிழ்ச்சியான சம்பவங்கள் என்றால்கூடப் பரவாயில்லை. ஆனால், அசை போடப்படும் இந்த எண்ணங்கள் எல்லாமே நம்மை வலிக்கச் செய்தவையாகவே இருக்கின்றன.

முன்பு கேசட் பிளேயர் வைத்திருந்தவர்களுக்குத் தெரியும். திடீரென்று அது சிக்கிக்கொள்ளும். சிக்கிக்கொண்ட அந்தப் பாகம் மீண்டும் மீண்டும் ஓடிக்கொண்டே இருக்கும். இதுபோலத்தான் நம் மனங்களில் நிகழ்கிறது. ஒரு எல்லைக்கு மேல், தீவிரமான உளவியல் சிக்கல்களில் இது நம்மைக் கொண்டுபோய் விட்டுவிடும். இதிலிருந்து வெளிவர, சிலர் அதிகமாகச் சாப்பிடுகிறார்கள் அல்லது போதைப் பொருட்கள் பயன்படுத்தத் தொடங்குகிறார்கள். கடந்த காலத்தைப் பற்றி யோசிப்பது, அதுவும் எப்போதும் யோசிப்பது என்பது நமக்கு எச்சூழலிலும் நன்மை செய்யப்போவதில்லை.

ஒரு சில முக்கியமான விஷயங்கள் மறக்க முடியாதவையாக, நினைவிலிருந்து தள்ளிவைக்க முடியாதவையாக இருக்கலாம். ஆனால், நம் மனதில் தங்கியிருக்கும் கடந்த காலச் சுமைகளில் எல்லாமே அப்படித்தானா என நம்மை நாமே கேட்டுக்கொள்வது நல்லது.

எப்போதுமே பழையதை நினைத்து வருந்துவதற்கு மிக முக்கியமான காரணங்களுள் ஒன்று, நாம் செய்த பிழைகளிலிருந்தும் நம் சறுக்கல்களிலிருந்தும் வெளிவர முடியாமல் இருப்பதுதான். பழைய காயங்களை மறக்க விரும்பாமல் நினைவில் பொத்திவைத்துக்கொள்ளும் மனப்பான்மையும் இதற்குக் காரணம்.

காரணம் எதுவாக இருந்தாலும் நாம் அந்தச் சுமையை இறக்கிவைக்கக் கற்க வேண்டும். இல்லையேல் கடந்த காலத்தின் சுமை நம்மை நகரவிடாமல் செய்துவிடும்.

இந்த ஒப்பீடு தேவையா?


மேலும் படிக்க


ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!


விஜய்க்கு இது முதன்முறை!


ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணனுக்குப் புதிய பொறுப்பு!


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


தனுஷின் ரீமேக் முடிவை மாற்றிய படம்!


வியாழன், 6 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon