மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 19 செப் 2020

பழிபோட ஒரு பலிகடா!

பழிபோட ஒரு பலிகடா!

நமக்குள் தேடுவோம் 12 - ஆசிஃபா

எனக்கு பரீட்சை என்றாலே பயம். ஏன் என்ற காரணத்தை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பரீட்சை அல்லது அது சார்ந்த டெஸ்ட் போன்ற சின்ன விஷயங்கள் முதல் ஆண்டுப் பரீட்சைவரை அனைத்துமே பயம்தான். பயத்தின் வெளிப்பாடு கோபமாக, அழுகையாக, சண்டையாக என்று பல விதங்களில் இருக்கும். கடந்த வாரம் தொடர்ந்து பரீட்சை நடந்ததால், துணி துவைக்கும் வேலையை அப்பா செய்தார். வாஷிங் மெஷினில் போட்ட என்னுடைய யூனிஃபார்மைப் பரீட்சை அன்று காலை காணவில்லை! அவ்வளவுதான் கதை! உங்களால் இன்று என் பரீட்சை அவ்வளவுதான் என்று தொடங்கிய சண்டையில் எப்படியோ ஒரு வழியாக உடை கிடைத்துவிட்டது.

முக்கியமான வேலைக்கு நாம் செல்ல வேண்டுமென்றால், முந்தைய தினமே உடை, பொருட்கள், தொடர்புடைய ஆவணங்கள் என அனைத்தும் இருக்கின்றனவா என்று பார்த்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டியது நம் கடமைதானே? ஆனால், அதை நான் செய்யாமல், உதவி செய்தவர்களையே குற்றம் சொன்னேன். இது ஒன்றும் முதல் முறையும் அல்ல.

அப்படியான ஒரு சூழலில், நாம் ஏன் தவறு நம்முடையது என்று ஒப்புக்கொள்ள மறுக்கிறோம்? நான்தான் பார்த்திருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டால் பிரச்சினையே இருக்காதே, ஆனால், அதை நம்மில் பலரும் செய்வதில்லை. காரணம், அப்படிச் செய்வதற்கு நம்முடைய ஈகோ இடம் தராது. அவ்வளவுதான் விஷயம். இந்த ஈகோவைத் தள்ளிவைத்துவிட்டு யோசித்தால் நம் வாழ்வில் நிகழ்ந்த பல தவறுகளுக்கும் பிரச்சினைகளுக்கும் நாம் எந்த அளவுக்குக் காரணம் என்பது புரிந்துவிடும்.

நம்மைப் பாதிக்கும் ஒரு செயல் நடந்துவிட்டாலே நம்முடைய முதல் எதிர்வினை, இது யாரால் நடந்தது என்று யோசிப்பதுதான். காரணத்தை எப்போதும் வெளியில் தேடுவோம். பழிபோட நமக்கு எப்போதும் யாரவாது ஒருவர் கிடைக்க வேண்டும். வெகுசில நேரங்களில் உண்மையாகவே பிறர் தலையீடு நமக்குப் பிரச்சினையாக முடிந்திருக்கும். ஆனால், பெரும்பாலான நேரத்தில், நம் வினைதான் நம்மைச் சுட்டிருக்கும்! இதைக் கண்டுபிடிக்கக் கொஞ்சம் பொறுமையும் பக்குவமும் இருந்தால் போதும்.

நம் செயலுக்கு நாம் பிறர் தலையில் பழியைப் போடுவதற்கு இன்னொரு முக்கியமான காரணம் இருக்கிறது. நம் தவறுகளை, நம் குறைகளை மறைப்பதுதான் அந்தக் கரணம். யோசித்துப் பாருங்களேன், பல சண்டைகளுக்குக் காரணம் “நீதான் எல்லாவற்றுக்கும் காரணம்” என்று சொல்வதாகவே இருக்கும் இல்லையா? ஒரு பிரச்சினை வந்ததும் அப்படிச் சொல்லிவிடாமல், நம் பக்கம் தவறு இருந்தால், அதை ஒப்புக்கொள்ளலாம்தானே?

நம் செயல்களுக்கான பொறுப்பை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போவதும் நடப்பதுண்டு. இதை அடிப்படைச் சிக்கலாக நான் நினைக்கிறேன். நாம் செய்ததை நம்மாலேயே ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால், பிறரால் ஏற்றுக்கொள்ள முடியுமா? வாழ்க்கையில் நாம் படிக்க வேண்டிய முதல் விஷயம், இதுதான்.

சரியோ தவறோ, அதை நான்தான் செய்தேன் என்று ஒப்புக்கொள்ளும் மனப்பான்மைதான் நம்மை வளரச்செய்யும்.

இது தவிர, உண்மையிலேயே பெரிய தவறு செய்கிறொம் என்றால், அதுவும் வேலை இடங்களில், கல்லூரிகளில் எல்லாம் ஏதாவது சிக்கலில் மாட்டிக்கொண்டால், அன்று விடுப்பு எடுத்தவரின் பெயரைச் சொல்லிவிட வேண்டியது! இது நடக்காத இடம் இருக்கவே முடியாது!

இப்படி பொய்சொல்வது முதல், பெரும்பழியை ஒருவர் மீது சுமத்துவது வரை பல விஷயங்களைச் செய்வதன் மூலம், நாம் செய்ததை அப்படியே மூடி மறைத்துவிடுகிறோம். இது நமக்கு நாமே பின்னிக்கொள்ளும் வலை. ஒருநாள், அந்த வலை உண்மை எது பொய் எது என்பது மட்டுமல்லாமல், நாம் யார் என்பதையே ஆக்கிரமித்து மெல்ல மெல்ல அழித்துவிடும்.

அந்தச் சுமையை இறக்கி வைக்கலாமே!


மேலும் படிக்க


ஆந்திர அமைச்சரவைப் பதவியேற்பு: ரோஜாவுக்கு இடமில்லை!


மோடி முதல் பயணமாக மாலத்தீவு சென்றது ஏன்?


திமுக எம்பிக்கள் ஜாதகம்: அமித் ஷா உத்தரவு!


டிஜிட்டல் திண்ணை: பன்னீருக்கு எதிராக எடப்பாடியின் வெளிப்படையான குரல்!


நடிகர் சங்கத் தேர்தல்: பின்னணியில் அமைச்சர்!


ஞாயிறு, 9 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon