மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 1 ஜுன் 2020

வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு: சீதாராம் யெச்சூரி

வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு: சீதாராம் யெச்சூரி

வாக்குப் பதிவு இயந்திரத்தில் குளறுபடி நடந்திருப்பதாக மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் சென்னை தி.நகரிலுள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் நேற்றும், இன்றும் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மற்றும் மத்திய குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். காவிரி பிரச்சினைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க உடனடியாக சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநிலக் குழுக் கூட்டம் முடிந்தபிறகு இன்று (ஜூன் 12) செய்தியாளர்களிடம் பேசிய சீதாராம் யெச்சூரி, அகில இந்திய அளவில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவிகிதத்தினை தேர்தல் ஆணையம் இதுவரை வெளியிடாததன் காரணம் என்ன எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், “300க்கும் அதிகமான மக்களவைத் தொகுதிகளில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுக்கும், விவிபாட்டில் பதிவான எண்ணிக்கைக்கும் வித்தியாசங்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே மின்னணு வாக்குப் பதிவு எந்திர முறைகேடுகள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் பேசி ஒரு கூட்டுமுடிவினை எடுப்போம்” என்றார்.

புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து பேசியவர், “புதிய தேசியக் கல்விக் கொள்கை பரிந்துரை என்பது மிகவும் ஆபத்தானது. இது அரசியலமைப்புச் சட்டத்தின் மதிப்பீடுகளை பாதுகாத்து செல்லாமல் இந்துத்துவ கொள்கைகளை திணிப்பதில் கவனம் செலுத்தியுள்ளது. இந்திய வரலாற்றை படிக்க வைப்பதற்கு பதிலாக புராணங்களை படிக்கவைக்க முயல்கிறார்கள். இந்திய தத்துவங்களை படிக்க வைப்பதற்கு பதிலாக இந்து இறையியலை படிக்க வைக்க முயல்கிறது” என்று குற்றம்சாட்டினார்.

மும்மொழிக் கொள்கையை மார்க்சிஸ்ட் எதிர்ப்பதாகத் தெரிவித்த அவர், இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள்தான். அனைத்தையும் சமமாகப் பார்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


மேலும் படிக்க

பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்

சட்டமன்றக் கூட்டம்: எடப்பாடியின் அதிரடித் திட்டம்!

டிஜிட்டல் திண்ணை: ஆலோசனைக் கூட்டம்! எடப்பாடி-பன்னீர் க்ளைமேக்ஸ் ஒப்பந்தம்!

ஒற்றைத் தலைமை பற்றி பேசவில்லை!

வாரிசுகள் தோல்வியடைந்த வரலாறு


புதன், 12 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon