மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 2 ஜுன் 2020

பம்மிய பாகிஸ்தானும் சீறி எழுந்த வங்கதேசமும்!

பம்மிய பாகிஸ்தானும் சீறி எழுந்த வங்கதேசமும்!

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியின் பயணம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. இனிவரும் அனைத்துப் போட்டிகளிலும் மிகப் பெரிய ரன் ரேட்டுடன் வெற்றி பெற்றால் மட்டுமே பாகிஸ்தான் அணியால் தொடரில் நீடிக்க முடியும். புள்ளிப் பட்டியலில் கடைசி இரண்டாவது இடத்தில் இருக்கும் அந்த அணி பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையுமே ஏமாற்றிவிட்டது என்றே கூறலாம். இந்தியாவுக்கு எதிரான தனது கடைசிப் போட்டியில் பாகிஸ்தான் அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இப்போட்டியில் டாஸ் வென்றும் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது முட்டாள்தனமான செயல் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளரான ஷோயிப் அக்தர் பகிரங்கமாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்திய அணியின் ரன் குவிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிய பாகிஸ்தான் அணிக்கு முகமது அமீர் மட்டுமே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆறுதல் அளித்தார். இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடிய பாகிஸ்தான் அணியின் வியூகம் சற்றும் எடுபடவில்லை. இமாத் வாசிம், சதாப் கான் ஆகிய இருவரும் 19 ஓவர்கள் வீசி விக்கெட் எதுவும் வீழ்த்தாமல் 110 ரன்களை வாரி வழங்கினர். பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய வந்தபோது, இலக்கு மிகப் பெரிதாக இருந்தாலும் அதை நோக்கிப் பயணிப்பதைப் போல அந்த அணியின் ஆட்டம் இருக்கவில்லை.

ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரிலேயே இமாத் உல் ஹக் ஆட்டமிழந்திருந்தாலும், ஃபக்கர் ஜமானுடன் சோடி சேர்ந்த பாபர் அசாம் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தார். தொடக்கத்தில் விக்கெட்டைப் பறிகொடுக்காமல் விளையாடினாலும் பின்னர் ரன் வேகத்தை உயர்த்த வேண்டிய பொறுப்பை இந்த ஜோடி கையிலெடுக்கவில்லை. இரண்டாவது விக்கெட்டுக்கு 104 ரன்கள் குவித்தபோதும் வெற்றி இலக்கை நோக்கிய ரன் வேகத்துக்கு இவர்களது ஆட்டம் போதுமானதாக இல்லை. 250 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடியது போலவே இவர்களது ஆட்டம் இருந்தது. இவர்கள் இருவரையும் குல்தீப் யாதவ் அடுத்தடுத்த ஓவர்களில் வெளியேற்றியபோதே வெற்றி வாய்ப்பு இந்தியாவுக்குப் பிரகாசமாகிவிட்டது.

பாகிஸ்தான் அணியின் அனுபவம் வாய்ந்த வீரர்களான முகமது ஹபீசும் ஷோயிப் மாலிக்கும் பொறுப்பற்ற ஷாட்களை ஆடி அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்து ஏமாற்றினர். இந்தப் போட்டி ஒரு தரப்பு ஆட்டமாகவே இருந்தது. இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் எப்போதுமே மிகவும் விறுவிறுப்பானதாகவே இருக்கும். ஆட்டத்தின் கடைசிப் பந்து வரை வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடியாத வகையில் இரு அணிகளும் கடுமையாகப் போராடும். இது இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கும் உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கும் சுவாரஸ்யமான மோதலாக இருக்கும். ஆனால், இந்த உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் அணியின் ஆட்டம் கத்துக்குட்டி அணிகளின் ஆட்டத்தைவிட மிக மோசமாக இருந்தது.

வெற்றிக்கான முனைப்பு எங்கே?

ஒருபுறம் இந்திய அணி இமாலய வளர்ச்சியில் இருக்கும் நிலையில் மறுபுறம் அதல பாதாளத்தை நோக்கிச் செல்கிறது பாகிஸ்தான் அணி. பாகிஸ்தான் அணியின் இந்த ஆட்டம் அதன் உலகக் கோப்பை கனவைச் சிதைத்ததோடு கிரிக்கெட் விளையாட்டின் ஆரோக்கியத்தையே சிதைத்துள்ளது. வெற்றியை நோக்கிப் போராடுவதற்கான அறிகுறியே அந்த அணியிடம் காணப்படவில்லை. வங்கதேச அணியை எடுத்துக்கொள்வோம். அந்த அணி மிகவும் சாதாரணமாகக் காணப்பட்டாலும் உலகக் கோப்பை போன்ற மிகப் பெரிய மேடைகளில் அந்த அணி அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு மிகப் பெரிய வெற்றிகளை வரலாற்றில் தனதாக்கியுள்ளது.

நடந்துகொண்டிருக்கும் இந்த உலகக் கோப்பை தொடரின் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான அதன் கடைசி ஆட்டத்தில் வங்கதேச அணியின் ஆட்டம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. இரு அணிகளுமே ஆல்ரவுண்டர்கள் அதிகம் கொண்ட அணிகளாக இருந்தாலும் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் மீதே அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் முதலில் ஆடிய அந்த அணி 50 ஓவர்களில் 321 ரன்கள் குவித்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பந்துவீச்சை வங்கதேச வீரர்கள் சமாளிப்பார்களா என்ற கேள்விக்குப் பதிலாக அமைந்தது ஷகிப் அல் ஹசனின் ஆட்டம். அவருக்குப் பக்கபலமாக விளையாடிய லிட்டன் தாஸ் அதிரடியாகவும் விளையாடி ரன்கள் குவித்தார். இந்த ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 189 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. ஷகிப் அல் ஹசன் 124 ரன்களுடனும், லிட்டன் தாஸ் 94 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இந்த ஆட்டத்தில் சிறப்புக்குரிய விஷயம் என்னவென்றால் 321 ரன் என்ற இலக்கை 42ஆவது ஓவரிலேயே வங்கதேச அணி மிக எளிதாக எட்டியது. வெற்றிப் புள்ளியுடன் ரன் ரேட்டையும் இந்த ஆட்டத்தில் வங்கதேச அணி உயர்த்திக்கொண்டது. பாகிஸ்தான் அணிக்கு இந்தியா விதித்த இலக்கு 337. வங்கதேசத்துக்கு மேற்கிந்தியத் தீவுகள் விதித்த இலக்கு 321. வங்கதேச அணியினர் வெற்றியை நோக்கி முனைப்புக் காட்டிய அளவுக்கு பாகிஸ்தான் அணி வீரர்கள் முனைப்புக் காட்டவில்லை. ஏற்கெனவே ஒருமுறை உலகக் கோப்பையை வென்ற அணியான பாகிஸ்தான், இந்த ஆண்டில் இந்தியாவுக்கு எதிரான ஆடிய ஆட்டம், பாகிஸ்தான் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

- செந்தில் குமரன்


மேலும் படிக்க

ராசா பதவியேற்பு: சம்பவம் அல்ல, சரித்திரம்!

டிஜிட்டல் திண்ணை: அன்புமணிக்கு ராஜ்யசபா இல்லை: உடைகிறது அதிமுக-பாமக கூட்டணி?

வாழ்க பெரியார், வந்தே மாதரம்: தமிழக எம்.பி.க்கள் பதவியேற்பு சுவாரசியங்கள்!

ரஞ்சித் குடும்பப் புகைப்படம்: ஹெச்.ராஜா மீது டிஜிபியிடம் புகார்!

உதயநிதிக்கு வழிவிடுகிறாரா வெள்ளக்கோயில் சாமிநாதன்?


புதன், 19 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon