மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 26 பிப் 2021

புதிய கல்விக் கொள்கை: முதல்வருக்கு கி.வீரமணி கடிதம்!

புதிய கல்விக் கொள்கை: முதல்வருக்கு கி.வீரமணி கடிதம்!

மின்னம்பலம்

புதிய தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை பெரியார் திடலில் கடந்த 14ஆம் தேதியன்று திராவிடர் வரலாற்று ஆய்வு மையத்தின் சார்பாக புதிய தேசிய கல்விக் கொள்கை 2019க்கான வரைவு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் கல்வியாளர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த முடிவுகள் தொடர்பாக நேற்று (ஜூன் 18) முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குக் கடிதம் எழுதியுள்ள கி.வீரமணி, “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாம் அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் இந்தப் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை மொழிபெயர்த்து மத்திய அரசே அதிகாரபூர்வமாக வெளியிட வேண்டும். புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து மக்கள் கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட வேண்டும். தமிழக அரசு சட்டப் பேரவையைக் கூட்டி புதிய தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு குறித்து விவாதிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய அரசு கூட்டியிருக்கும் மாநிலக் கல்வி அமைச்சர்கள் மாநாட்டுக்கு முன்னதாகவே, உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, இவ்வரைவு குறித்த அனைவரின் கருத்துகளையும் தமிழக அரசு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள வீரமணி,

தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வி, உயர்கல்வி, தொழில்நுட்பக் கல்வி எனப் பல துறைகளிலும் உள்ள கல்வியாளர்களை அழைத்து, இந்த வரைவு அறிக்கை பற்றிய மிக விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக, மாநில உரிமையைப் பறிக்கக்கூடிய, இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதிக்கு எதிரான, கல்வியை முழுமையாக வணிகமயமாக்குகின்ற இந்தப் புதிய தேசிய கல்விக் கொள்கை திரும்பப் பெறப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், “இந்தியப் பன்முகப் பண்பாட்டுக்கு எதிரான இந்தி - சமஸ்கிருதத் திணிப்பு, ஒற்றைக் கல்விமுறை, ஒற்றைப் பண்பாட்டைத் திணிக்கும் இந்தப் புதிய தேசியக் கல்விக் கொள்கைக்கான வரைவு முழுமையாகத் திரும்பப் பெறப்பட வேண்டும்” என்றும் அதில் வலியுறுத்தியுள்ளார்.


மேலும் படிக்க

ராசா பதவியேற்பு: சம்பவம் அல்ல, சரித்திரம்!

டிஜிட்டல் திண்ணை: அன்புமணிக்கு ராஜ்யசபா இல்லை: உடைகிறது அதிமுக-பாமக கூட்டணி?

வாழ்க பெரியார், வந்தே மாதரம்: தமிழக எம்.பி.க்கள் பதவியேற்பு சுவாரசியங்கள்!

ரஞ்சித் குடும்பப் புகைப்படம்: ஹெச்.ராஜா மீது டிஜிபியிடம் புகார்!

உதயநிதிக்கு வழிவிடுகிறாரா வெள்ளக்கோயில் சாமிநாதன்?


புதன், 19 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon