மின்னம்பலம்
துப்புரவுப் பணியாளர், மதிய உணவு ஒருங்கிணைப்பாளர், உதவி சமையலர் உள்ளிட்ட கடைநிலைப் பணிகளுக்கும் எழுத்துத் தேர்வு அடிப்படையில் பணியாளர்களைத் தேர்வு செய்ய வேண்டுமென்று தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.
தமிழக அரசுப் பணியிலுள்ள கடைநிலை ஊழியர்கள் பணி நியமன முறைகள் தொடர்பாக, மதுரை மாவட்டம் தேனியைச் சேர்ந்த உதயகுமார் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவொன்றைத் தாக்கல் செய்தார். காமயக்கவுண்டன்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இரவுக் காவலராக சேகர் என்பவர் 2011ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டதாகவும், மாற்றுத்திறனாளியாக இருக்கும் மனுதாரர் 8ஆம் வகுப்பு முடித்த நிலையில் 1998ஆம் ஆண்டே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்ததாகவும், எனவே சேகரின் இரவுக் காவலர் நியமனத்தை ரத்து செய்து அப்பணியைத் மனுதாரருக்கு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
நேற்று (ஜூன் 18) இந்த மனுவானது நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, சேகர் பணி நியமனம் பெற்று 8 ஆண்டுகளுக்குப் பிறகு உதயகுமார் இக்கோரிக்கையை வைத்துள்ளதால், சேகரின் நியமனத்தை ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்தார் நீதிபதி. அதே நேரத்தில், கடைநிலை ஊழியர்கள் பணி நியமனங்களில் எந்த விதிகளும் பின்பற்றப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
“உரிய விதிமுறைகள் இல்லாததால் பதவியில் இருப்பவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களை இப்பணிகளில் நியமிக்க வாய்ப்புள்ளது. எனவே, இந்தப் பணிகள் அனைத்திலும் விதிகளுக்கு உட்பட்டு பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். குறிப்பாக இரவுக் காவலர், அலுவலக உதவியாளர், துப்புரவுப் பணியாளர், தோட்டப் பணியாளர்கள் போன்ற பணியிடங்களில் தங்களுக்கு வேண்டியவர்களையும், ஒரு சார்பாகவும் அதிகாரிகள் நியமிக்கிறார்கள். இதுபோன்ற ஊழல் நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டார் நீதிபதி.
இதுபோன்ற கடைநிலைப் பணிகளுக்கு நேர்முகத் தேர்வு மூலம் பணி நியமனம் நடைபெறுகிறது எனவும், இனிமேல் எழுத்துத் தேர்வு அடிப்படையில் பணியாளர்களைத் தேர்வு செய்யும் வழிகாட்டுதல்களை தமிழக அரசு தலைமைச் செயலாளர் பிறப்பிக்க வேண்டும் எனவும், தேர்வு செய்யப்படும் வழிகளில் நேர்முகத் தேர்வுக்கான மதிப்பெண் 15 சதவிகிதத்துக்கு அதிகமாக இருக்கக் கூடாது எனவும் தெரிவித்தார் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம். இது தொடர்பாக தலைமைச் செயலாளர் உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டுமென்றும், அது தொடர்பான அறிக்கையை வரும் ஜூலை 24ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.