மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 19 ஜுன் 2019

தகறாறு - தகராறு: எது சரி?

தகறாறு - தகராறு: எது சரி?

ஒரு சொல் கேளீரோ! – 20: அரவிந்தன்

அடிக்கடி பயன்படுத்தும் சில சொற்களைச் சரியாக எழுதுவது எப்படி என்று பார்ப்போம்.

பிரச்சினை: வடமொழியில் முத்ரா, பத்ரா, சித்ரா என்றெல்லாம் வரும் சொற்களை, முத்திரை, பத்திரம், சித்திரம் என்று தமிழ் ஒலிப் பண்புக்கு ஏற்ப எழுதுவோம். அதுபோலவே ப்ரச்ன என்னும் சொல்லைத் தமிழ் ஒலிப் பண்புக்கு ஏற்ப பிரச்சினை என எழுத வேண்டும்.

பொறுமல்: இதைப் பலரும் பொருமல் என எழுதுகிறார்கள். வல்லினம் பயன்படுத்திப் பொறுமல் என எழுதுவதே சரி.

இதேபோலத்தான் ஆச்சரியம், வீரியம் ஆகிய சொற்களையும் எழுத வேண்டும். சூர்யன் என எழுதுவதில்லை அல்லவா? அதே வழக்கத்தின் அடிப்படையில் ஆச்சரியம், வீரியம் என ‘இகரம்’ பயன்படுத்தி எழுதுவதே தமிழ் ஒலிப்பண்புக்கு ஏற்றது.

சுமுகம் என்பது சரி. சுமூகம் என்பது தவறு.

சு + முகம் = சுமுகம். அதாவது, நன்முகம், இணக்கம் என்று பொருள்.

பத்திரிகை என்பது சரி. பத்திரிக்கை என்று ‘க்’ சேர்த்து எழுத வேண்டாம்.

கறுப்பு என்றுதான் எழுத வேண்டும். கறுப்பு, கறுப்பர் என வல்லினம் (று) பயன்படுத்தி எழுதுவதே சரி.

கருமை, கரிய, கருத்த என்று வரும்போது இடையினம் (ரு) பயன்படுத்தி எழுத வேண்டும்.

சிகப்பு என எழுதுவதற்குப் பதில் சிவப்பு என்றே எழுதலாம் (சிவப்பு, சிவந்த, செவத்த…)

விபரம் என்பதைத் தவிர்த்து விவரம் என எழுதலாம். புள்ளிவிவரம் என்னும் சொல்லுக்கும் இது பொருந்தும்.

புள்ளிவிவரம் என்னும் சொல்லைச் சேர்த்து ஒரே சொல்லாகவே எழுத வேண்டும்.

தற்கொலை செய்துகொண்டார், திருமணம் செய்துகொண்டார் என்று எழுத வேண்டும்..

தற்கொலை செய்தார், திருமணம் செய்தார் என எழுதுவது தவறு.

கொலை செய்தார், விவாகரத்து செய்தார் என்று எழுதலாம். ஆனால், தற்கொலை, திருமணம் ஆகியவற்றைச் செய்துகொண்டார் என்றுதான் எழுத வேண்டும்.

தொலைபேசி என்பதே சரி. தொலைப்பேசி என்பது தவறு.

பொறுத்தவரை என்பது சரி. பொருத்தவரை என்பது தவறு.

அர்ஜுன் என்பது சரி. அர்ஜூன் என்பது தவறு.

ராஜு – சரி. ராஜூ – தவறு.

இவை என்பது சரி. இவைகள் என்பது தவறு.

சுவரை என்றே எழுத வேண்டும். சுவற்றை என்பது தவறு

கானல் நீர் என்பதைச் சிலர் இப்போதெல்லாம் காணல் நீர் என எழுதுகிறார்கள்.

காலனி (Colony) என்பதைக் காலணி என்று எழுதுகிறார்கள். காலணி என்றால் செருப்பு என்று பொருள். காலனி என்பது தமிழ்ச்சொல்லே அல்ல.

ஆவண செய்ய வேண்டும் என்பது தவறு. ஆவன செய்ய வேண்டும் என்பது சரி.

தகராறு என்பதில் வரும் மூன்றாவது எழுத்து இடையினமா (ரா) வல்லினமா (றா) எனச் சிலருக்குக் குழப்பம்.

சின்னத் தகராறாக இருந்தால் சின்ன ர போடுங்கள், பெரிய தகராறாக இருந்தால் பெரிய ற போடுங்கள் என்று பழைய நகைச்சுவைத் துணுக்கு ஒன்று சிலருக்கு நினைவு இருக்கலாம்.

இடையில் வருவது இடையினம்தான். தகராறு என்பதே சரி.

கறாராக என்பதைச் சிலர் கராறாக என எழுதுகிறார்கள். இதன் வேர்ச் சொல்லை எழுதிப் பார்த்தால் தவறு விளங்கிவிடும். கறார், கராற் இரண்டில் எது சரி என்பது ஓரளவு தமிழ் தெரிந்தவர்களுக்கும் பார்த்த உடனேயே தெரிந்துவிடும்.

சில்லறை, சில்லரை ஆகிய இரண்டில் எது சரி என்பதற்குத் தெளிவான பதில் இல்லை. இரண்டுமே வழக்கில் இருக்கிறன. இரண்டுமே சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதியிலும் இருக்கின்றன. இரண்டில் ஒன்றை மட்டும் சரி என்று சொல்லிவிட முடியாத நிலை உள்ளது. எனவே இவற்றில் ஏதேனும் ஒன்றை வைத்துக்கொள்ளலாம். ஆனால், ஏதேனும் ஒன்றைச் சீராகப் பயன்படுத்துவதே முறையானது.

சில்லறை என்பதே பெருவழக்காக, பலரும் பயன்படுத்தும் வழக்காக இருப்பதால் அதையே நாம் வைத்துக்கொள்ளலாம்.

நியாபகம் என்று சிலர் எழுதுகிறார்கள். ஞாபகம் என எழுதுவதே சரி. நியாயம், ஞாபகம் ஆகிய இரண்டுமே வடமொழிச் சொற்கள்தாம். இரண்டின் முதல் எழுத்தும் வேறு வேறு.

முதலாவது ந்யா, இரண்டாவது க்ஞா. முதலாவதைத் தமிழ் ஒலிப் பண்புக்கு ஏற்ப ‘நியா’ என்றும் இரண்டாதை ‘ஞா’ என்றும் எழுதுகிறோம்.

ஆகவே, நியாயம், ஞாபகம் ஆகியவையே சரியான வடிவங்கள்.

உத்திரவாதம் என்பது தவறு. உத்தரவாதம் என்பதே சரி.

Police என்பதை போலீஸ் என நெடில் பயன்படுத்தி எழுதலாம். சொல்லும்போது இயல்பாக நெடில் வருவதால் இதைப் பின்பற்றலாம்.

முஸ்லீம் அல்ல. முஸ்லிம் என்பதே சரி.

உளமார, மனதார, நினைவுகூர்ந்து…

மேலே உள்ள மூன்று சொற்களுக்கும் இடையின ‘ர’கரம்தான் வரும்.

ஆர்ந்து என்பது ஆழமான என்னும் பொருள் கொண்ட சொல். அந்தச் சொல்தான் மனமார, உளமார என்னும் சொற்களில் பின்னொட்டாகச் சேர்கிறது. எனவே ‘ர’ பயன்படுத்த வேண்டும்.

நினைவுகூர் என்பது நினைவுபடுத்திக்கொள்வது. நினைவு கூறு என்பது நினைவைச் சொல்வது.

கூர்த்தல் என்பது மிகுத்தல் எனப் பொருள்படும். கூறுதல் என்பது சொல்லுதல் என்னும் பொருள்படும். ஒரு தலைவரை அல்லது ஒரு நிகழ்வை நினைவுகூர்தல் என்பது அத்தலைவர் அல்லது நிகழ்வின் முக்கிய அம்சங்களைக் கூடுதலாகச் சொல்வது. எனவே நினைவுகூர்தல் / நினைவுகூர்ந்தார் / நினைவுகூரத்தக்கது என்று எழுத வேண்டும்.

(தொடரின் அடுத்த பகுதி வரும் வெள்ளியன்று)

சுருக்கெழுத்துக்கள்!


மேலும் படிக்க

ராசா பதவியேற்பு: சம்பவம் அல்ல, சரித்திரம்!

டிஜிட்டல் திண்ணை: அன்புமணிக்கு ராஜ்யசபா இல்லை: உடைகிறது அதிமுக-பாமக கூட்டணி?

வாழ்க பெரியார், வந்தே மாதரம்: தமிழக எம்.பி.க்கள் பதவியேற்பு சுவாரசியங்கள்!

ரஞ்சித் குடும்பப் புகைப்படம்: ஹெச்.ராஜா மீது டிஜிபியிடம் புகார்!

உதயநிதிக்கு வழிவிடுகிறாரா வெள்ளக்கோயில் சாமிநாதன்?


வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

புதன் 19 ஜுன் 2019