மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 27 மே 2020

தியாகம் செய்த நாயகன்!

தியாகம் செய்த நாயகன்!

சினிமா பாரடைசோ 31 – தேவிபாரதி

டி.ராஜேந்தர். வெறும் நாயகன் அல்ல அவர். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம், இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு எனத் திரைப்படத் துறையின் சகல துறைகளையும் ஒரு கை பார்த்தவர். 1980களில் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் பித்தேறச் செய்த காதல் காவியமான ஒருதலை ராகம் படத்தின் மூலம் அறிமுகமான டி.ராஜேந்தர் அதே பாணியில் சில படங்களைத் தயாரித்து, இயக்கி, நடித்து வெற்றி பெற்றார். பாக்யராஜ், ராமராஜன் உள்ளிட்ட எம்.ஜி.ஆரைப் பின்பற்றிய நாயகர்களின் கதையைவிட டி.ராஜேந்தரின் கதை பரவசமூட்டக்கூடியது.

1970-80களில் தமிழ் சினிமா மாற்றத்தை நோக்கிப் பயணப்படத் தொடங்கியிருந்தது. எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய இருவரது அடையாளங்களிலிருந்தும் விலகி, சினிமாவை தமிழ் வாழ்வுக்கு நெருக்கமானதாக்க முயன்றுகொண்டிருந்த தேவராஜ் - மோகன், ஆர்.செல்வராஜ், பாரதிராஜா, மகேந்திரன் முதலான இயக்குநர்கள் குறைந்தபட்சம் பத்துப் பேராவது இருந்தார்கள். சினிமாவை ஒரு பிரச்சார ஊடகமாகப் பயன்படுத்திவந்த இயக்குநர்களிடமிருந்து அவர்கள் திட்டவட்டமாக ஒதுங்கியிருந்தார்கள். திரைமொழியில் பாய்ச்சல்கள் நிகழத் தொடங்கியிருந்தன. கால் நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ் சினிமாவின் மீது கவிந்திருந்த நாயக பிம்பங்களை முற்றாகக் கலைத்துப் போட்டார்கள். கதை, திரைக்கதை, வசனங்கள் தவிர அரங்க வடிவமைப்பு, ஒப்பனை, இசை, ஒளி, ஒலி, படத்தொகுப்பு உள்ளிட்ட திரைப்படக் கலையின் சகல வடிவங்களையும் மாற்ற முயன்றார்கள்.

காலத்தைப் பின்னகர்த்திய இயக்குநர்

டி.ராஜேந்தர் அந்த மாற்றங்களைக் கேலி செய்தார், சிதைத்தார். காலாவதியாகிக்கொண்டிருந்த அடையாளங்களை மீட்டெடுத்தார். அவரால் உருவாக்கப்பட்ட நாயகர்கள் திரைப்படப் பார்வையாளர்களால் சகித்துக்கொள்ளவே முடியாதவர்களாக இருந்தார்கள். காதல், வீரம், அன்பு, கருணை முதலான தமிழ் சினிமா கொண்டாடிக்கொண்டிருந்த உணர்வுகளை அவரது கதாபாத்திரங்களில் பல கொச்சைப்படுத்துவதற்குத் தயங்கவே இல்லை. அவரது திரைப்படங்களில் இடம்பெற்ற அரங்க அமைப்புகள் தமிழ் சினிமாவை முப்பதாண்டுகள் பின்னோக்கி எடுத்துச் சென்றன.

டி.ராஜேந்தர் எழுதிய வசனங்கள் கேலிக்குள்ளானபோதிலும் அவர் அவற்றைப் பொருட்படுத்தவில்லை. சண்டைக் காட்சிகளின்போதும் எதிரிகளைப் பந்தாடும்போதும் சில பாடல் காட்சிகளிலும் தமிழ் சினிமாவுக்குப் பல புதிய சத்தங்களை உருவாக்கி அறிமுகப்படுத்தினார். எவ்விதமான ஒலிக் கருவிகளின் துணையுமில்லாமல் அவரால் அவற்றை உருவாக்க முடிந்தது. வசனங்களில் அடுக்கு மொழி அடுக்கடுக்காக இடம்பெற்றிருந்தது. அவரது ரசிகர்கள் அவற்றைக் கொண்டாடித் தீர்த்தார்கள். அவை இடம்பெற்ற காட்சிகள் பலத்த கைத்தட்டல்களைப் பெற்றன. பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு உள்ளிட்ட திரைப்படத்தின் தொழில்நுட்பக் கூறு எதையும் டி.ராஜேந்தர் விட்டு வைக்கவில்லை. எல்லாவற்றையும் ஒரு கை பார்த்துவிடத் துணிந்த டி.ராஜேந்தர் தமிழ் சினிமாவின் வெற்றிப்பட நாயகர்களின் வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடித்தார்.

ஒருதலை ராகத்தின் பல அவதாரங்கள்

ஒருதலை ராகத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதே பாணியில் சில காதல் காவியங்களை எடுத்தார் டி.ஆர். ரயில் பயணங்களில், மைதிலி என்னைக் காதலி, உயிருள்ளவரை உஷா போன்ற அவரது படங்கள் ஒருதலை ராகத்தைப் பிரதியெடுத்தவை போல் தென்பட்டன. கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் என ஒவ்வொன்றிலும் அந்தப் படத்தின் சாயல்கள் தென்பட்டன. ஒருதலை ராகம் படத்தில் பங்கேற்ற நடிகர்கள் சிலர் டி.ஆரின் அந்தக் கட்டத்திய படங்களில் தவறாது பங்கேற்றனர்.

ஒருதலை ராகத்தின் வெற்றிக்கு அப்போது பலரும் சொந்தம் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான ஈ.எம்.இப்ராஹிம் ராவுத்தருக்குப் படத்தில் பெரிய பங்கு எதுவும் இல்லை என்பது போன்ற கருத்துகள் உருவாகின. படத்தின் பாடல்களை எழுதி அவற்றுக்கு இசையமைத்த டி.ராஜேந்தர்தான் அதன் உண்மையான இயக்குநர் என்றார்கள். மற்றொரு தரப்பினர் படத்தை இயக்கியது அதன் ஒளிப்பதிவாளர்களான ராபர்ட் - ராஜசேகரன் இணைதான் என்று சொல்லத் தொடங்கியிருந்தார்கள். சம்பந்தப்பட்டவர்கள் அவற்றை மறுக்கவில்லை. ஒவ்வொருவரும் தங்கள் பிந்தைய படங்களில் அதை நிறுவ முயன்றார்கள்.

மேற்குறிப்பிட்ட டி.ராஜேந்தரின் படங்களில் ஒருதலை ராகத்தில் இடம்பெற்ற அதே கல்லூரி வளாகங்களும் வகுப்பறைகளும் இடம்பெற்றன. மதில் சுவர்களின் மீது கால்களைத் தொங்கவிட்டு உட்கார்ந்துகொண்டு பாட்டுப் பாடி மாணவிகளைக் கேலி செய்யும் மாணவர்கள் இருந்தார்கள். ஒருதலை ராகம் படத்தில் அத்தகைய மாணவராக நடித்த ரவீந்தர் டி.ஆரின் எல்லாப் படங்களிலும் அதே வேடத்தில் நடித்துப் புகழ் பெற்றார். ஒருதலை ராகம் படத்தின் நாயகியைப் போலவே டி.ஆரின் எல்லாப் படங்களிலும் துயரம் தோய்ந்த முகத்துடன் தனிமையில் தவிக்கும் மாணவிகள் நாயகிகளாகத் தோன்றினார்கள். நாயகன் அவர்களை ஒருதலையாகக் காதலித்தார். படத்தின் இரண்டாம் பகுதியில் சோகத்தில் மூழ்கினார், தாடி வளர்த்துக்கொண்டார். சால்வை போர்த்திக்கொண்டு கடற்கரைகளிலோ, பூங்காக்களிலோ டி.எம்.சௌந்தரராஜனின் குரலில் பாடினார்.

பாலைவனச் சோலை ஏற்படுத்திய திருப்பம்

அந்தத் தருணத்தில் ஒருதலை ராகம் படத்தின் ஒளிப்பதிவு இயக்குநர்களான ராபர்ட் - ராஜசேகர் இணையின் இயக்கத்தில் வெளிவந்த பாலைவனச் சோலை பற்றிச் சொல்ல வேண்டும்.

அந்தப் படம் ஒருதலைக் காதலின் வெவ்வேறு பரிமாணங்களைக் கவித்துவம் ததும்பும் திரைமொழியில் காட்ட முற்பட்டது. ஒருதலைக் காதல் தவிர ஆண் - பெண் நட்பு, காதல் பற்றியும் பேச முற்பட்டது. அந்தப் படத்தின் நாயகியான சுகாசினிக்கும் சந்திரசேகர் உள்ளிட்ட அவரது நான்கு நண்பர்களுக்குமிடையேயான நட்பையும் காதலையும் சோகம் ததும்பச் சித்திரித்தது. டி.ராஜேந்தரின் படங்களைப் போல் அல்லாமல் படம் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது. வணிக ரீதியிலும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற அந்தப் படம் இளைஞர்களை வெகுவாக ஈர்த்தது.

படத்தின் இறுதியில் நாயகி சுகாசினி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் விஷயம் தெரியவரும். அது அவரது காதலுக்கும் உயிருக்கும் உலைவைத்துவிடும். அந்தப் படத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்தே தமிழ் சினிமாவில் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்தது. அதற்குப் பிறகு ஏறத்தாழப் பத்தாண்டுகள் வரை தமிழ் சினிமாவின் நாயகன் - நாயகி என யாராவதொருவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டார்கள். குறிப்பாக ரத்தப் புற்று நோய். ஆர்.சுந்தரராஜனின் இயக்கத்தில் உருவான பயணங்கள் முடிவதில்லை படத்தில் நாயகன் மோகன் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவராக வந்து ரசிகர்களின் கண்களைக் குளமாக்கினார். கமலும் நடிகை ராதாவும்கூட வெவ்வேறு படங்களில் ரத்தப் புற்றுநோய்க்குப் பலியானார்கள்.

தடம் மாறிய தியாகம்

ஆனால், டி.ராஜேந்தர் ஒருதலைக் காதல் விவகாரங்களிலிருந்து சீக்கிரத்திலேயே தன்னை விடுவித்துக்கொண்டார். அவரது கவனம் அண்ணன் - தங்கை விவகாரங்களைக் கையிலெடுத்தது. காதலுக்காகத் தியாகம் செய்துவந்த நாயகன் ராஜேந்தர் பிறகு தங்கைக்காகத் தியாகங்கள் புரிய தொடங்கினார். தங்கைக்கோர் கீதம், என் தங்கை கல்யாணி ஆகிய தலைப்புகளில் டி.ராஜேந்தர் தயாரித்து, இயக்கி, நடித்த படங்களில் அவர் தங்கைகளின் மீது பாசத்தைக் கொட்டி வளர்க்கும் அண்ணனாக நடித்தார். இவற்றின் மூலம் தமிழ் சினிமாவின் பெண் ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்ற டி.ஆர், ஒருகட்டத்தில் எம்.ஜி.ஆரைப் போலச் சமூகப் பிரச்சினைகளின் மீது அக்கறை காட்டினார். தன் படங்களில் சமூக நீதியை நிலைநாட்ட முயன்றார்.

எம்.ஜி.ஆரோடு அவரை யாரும் ஒப்பிடத் துணியவில்லை. ஆனால், அவரும் அரசியலில் குதித்தார். எம்.ஜி.ஆரைக் கடுமையாக விமர்சித்தார். திமுகவில் சேர்ந்து 1996 தேர்தலில் சென்னை பூங்கா நகர் தொகுதியில் போட்டியிட்டுச் சட்டப் பேரவை உறுப்பினராகவும் ஆனார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து திமுகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார். அவரது அடுக்குமொழி வசனங்களைக் கேட்டு வாக்காளர்கள் பரவசமடைந்தார்கள். 2004ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக திமுகவிலிருந்து விலகி லட்சிய திமுக என்ற கட்சியைத் தொடங்கினார். தான் பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் மகன் சிலம்பரசன், மனைவி உஷா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் பேச வைத்தார். அதே அடுக்குமொழி வசனங்கள். அவராலும் எம்.ஜி.ஆரின் இடத்தை நிரப்ப முடியவில்லை.

வாரிசுகள் தோல்வியடைந்த வரலாறு


மேலும் படிக்க

ராசா பதவியேற்பு: சம்பவம் அல்ல, சரித்திரம்!

டிஜிட்டல் திண்ணை: அன்புமணிக்கு ராஜ்யசபா இல்லை: உடைகிறது அதிமுக-பாமக கூட்டணி?

வாழ்க பெரியார், வந்தே மாதரம்: தமிழக எம்.பி.க்கள் பதவியேற்பு சுவாரசியங்கள்!

ரஞ்சித் குடும்பப் புகைப்படம்: ஹெச்.ராஜா மீது டிஜிபியிடம் புகார்!

உதயநிதிக்கு வழிவிடுகிறாரா வெள்ளக்கோயில் சாமிநாதன்?


புதன், 19 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon