மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 27 மே 2020

சென்னைப் பஞ்சத்துக்கு என்ன காரணம்?: துரைமுருகன்

சென்னைப் பஞ்சத்துக்கு என்ன காரணம்?: துரைமுருகன்

சென்னையில் தண்ணீர் பஞ்சம் நிலவுவதாக எதிர்க்கட்சிகள் சொல்வது வதந்தி என்று அமைச்சர் வேலுமணி கூறியது ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

சென்னையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் இருப்பது போன்ற தோற்றத்தைச் சிலர் உருவாக்கியுள்ளனர். தண்ணீர் பஞ்சம் நிலவுவதாக ஊடகங்களும், எதிர்க்கட்சிகளும் சொல்வது வதந்தி என்று சென்னை ரிப்பன் மாளிகையில் 17ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி கூறியிருந்தார். தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சியும், குடிநீர் தட்டுப்பாடு நிலவும் நிலையில் அமைச்சர் வேலுமணி கூறியதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த திமுக பொருளாளர் துரைமுருகன், இதைவிட ஜமக்காளத்தில் வடிகட்டிய பெரிய பொய் இருக்காது என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “சென்னை மாநகரத்தில் தாய்மார்கள் குடங்களுடன் காத்துக்கொண்டிருப்பதையும், அலைவதையும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். எல்லா ஊடகங்களிலும் காட்டுகிறார்கள். தண்ணீர் பஞ்சத்துக்கு முழுக்காரணம் அதிமுக அரசுதான். சென்னைக்கு ஆதிகாலத்தில் பூண்டியிலிருந்து தண்ணீர் கொண்டுவந்தார்கள். அடுத்து புழல் ஏரியிலிருந்து தண்ணீர் கொண்டுவந்தார்கள். அப்போது இருந்த மக்கள் தொகைக்கு இரண்டும் சரியாக இருந்தது.

அதற்குப் பிறகு மக்கள்தொகை அதிகமான பிறகுதான் கிருஷ்ணாவிலிருந்து தமிழகத்துக்குத் தண்ணீர் கொண்டு வரும் திட்டம் உருவாக்கப்பட்டது. கலைஞரே ஆந்திராவுக்குச் சென்று சென்னா ரெட்டி, என்.டி.ராம ராவ், சந்திரபாபு நாயுடுவை நேரில் பார்த்துப் பேசி கிருஷ்ணா நீரைக் கொண்டுவந்தார். இப்போது நமக்கு வர வேண்டிய 12 டி.எம்.சி நீர் வரவில்லை. ஆனால், எந்த அமைச்சரும் தண்ணீர் கேட்டுப் பெறவில்லை” என்றார்.

சென்ற வருடம் ஆந்திராவில் நிறைய தண்ணீர் வீணானது. அப்போதே கேட்டிருந்தால் கொடுத்திருப்பார்கள் என்று கூறிய அவர், “ஆந்திராவிலிருந்து தண்ணீர் வாங்கி செம்பரம்பாக்கம் சோழவரம், போரூர் ஏரியை நிரப்பியிருந்தால் சென்னைக்கு இப்போது தண்ணீர் இருந்திருக்கும். ஆனால், இவர்கள் குவாரியில் தேங்கிக் கிடக்கும் அசுத்தமான தண்ணீரைக் கொண்டுவந்து தருவதாகச் சொல்கிறார்கள். ஈரோடு, திருச்சி, ஜோலார்பேட்டையிலிருந்து ரயில்களில் தண்ணீர் கொண்டுவந்து தரலாம். தண்ணீர் கொண்டுவருவதற்கான புதிய திட்டம் எதையுமே இவர்கள் கொண்டுவரவில்லை” என்று குற்றம்சாட்டினார்.


மேலும் படிக்க

ராசா பதவியேற்பு: சம்பவம் அல்ல, சரித்திரம்!

டிஜிட்டல் திண்ணை: அன்புமணிக்கு ராஜ்யசபா இல்லை: உடைகிறது அதிமுக-பாமக கூட்டணி?

வாழ்க பெரியார், வந்தே மாதரம்: தமிழக எம்.பி.க்கள் பதவியேற்பு சுவாரசியங்கள்!

ரஞ்சித் குடும்பப் புகைப்படம்: ஹெச்.ராஜா மீது டிஜிபியிடம் புகார்!

உதயநிதிக்கு வழிவிடுகிறாரா வெள்ளக்கோயில் சாமிநாதன்?


புதன், 19 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon