மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 27 மே 2020

உடலமைப்பை கிண்டல் செய்ய கூடாது: சித்தார்த்

உடலமைப்பை கிண்டல் செய்ய கூடாது: சித்தார்த்

யோகி பாபுவின் உடலமைப்பைக் கொண்டு காமெடி செய்வதில் தனக்கு உடன்பாடு இல்லை என்று கூறியுள்ளார் சித்தார்த்.

யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள கூர்கா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் கனடா மாடல் எலிஸா கதாநாயகியாக நடித்துள்ளார். ராஜ் ஆர்யன் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் ஜூன் 28ஆம் தேதி வெளியாகிறது. 4 மங்கீஸ் ஸ்டுடியோ தயாரிக்க, லிப்ரா ப்ரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது.

பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட்டு, வாழ்த்தி பேசினார். “எனக்கு பாடல் பாடுவது மட்டுமே தெரியும். மற்ற விஷயங்களை பற்றி அவ்வளவாக தெரியாது. ஆனாலும், சினிமா துறையில் எவ்வளவோ பேர் கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள். ஒரு படம் வெற்றியடைந்தால்தான் அனைவருக்கும் வாழ்க்கை. இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும். தண்ணீரை யாரும் வீணாக்க வேண்டாம், தண்ணீர் என்பது தங்கம், பிளாட்டினத்தை விட விலை மதிப்புடையது. தண்ணீர் சேமிப்பு என்பது மிக முக்கியம். அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டு செல்வது அது ஒன்றே” என்றார் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம்.

யோகி பாபு பேசும் போது, “எனக்கும், சாம் ஆண்டனுக்கும் நட்பு உருவானதே 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படத்தில் இருந்து தான். எனக்கு மிகவும் சுதந்திரம் கொடுத்த ஒரு இயக்குநர். அது தான் அடுத்தடுத்து அவர் இயக்கத்தில் தொடர்ந்து என்னை நடிக்க வைக்கிறது. சத்யம் தியேட்டர் வெளியில் இருந்த நான் இந்த இடத்தில், மேடையில் இருக்கிறேன், அதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி” என்று கூறினார்.

“ஒரு ஜாலியான படம் பண்ண வேண்டும் என்ற எண்ணத்தில் உருவான படம் இது. 34 நாட்களில் படத்தை முடிக்க வேண்டும், நாங்களே தயாரிக்கிறோம் என்றபோது நிறைய சிரமங்கள் இருந்தன. யோகிபாபு யாருக்கும் கொடுக்காத முக்கியத்துவத்தை எங்களுக்கு கொடுத்திருக்கிறார். ஒரே கட்டமாக மொத்தமாக தேதிகளை கொடுத்தார். ரொம்ப பிஸியாக இருந்தாலும், தனக்கென ஓய்வுக்கு நேரம் ஒதுக்காமல் எல்லா படங்களுக்கும் தேதிகளை கொடுத்து, அவர் நிறைய கஷ்டப்பட்டிருக்கிறார்” என்றார் இயக்குநர் சாம் ஆண்டன்.

சித்தார்த் பேசும்போது, “யோகிபாபுவை பார்த்து நான் வியந்திருக்கிறேன், அவர் ஒரு மிகச்சிறந்த ஒரு நடிகர். அவருடன் இரண்டு படங்களில் நடித்திருக்கிறேன். யோகிபாபு ஓய்வே இல்லாமல் உழைக்கிறார். வெற்றி வந்த பிறகு எல்லோரும் உடல்நிலையை கவனித்துக் கொள்ள வேண்டும். அது தான் மிக முக்கியம். அவருடைய லுக்கை வைத்து பலரும் காமெடி பண்ணுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அதுவும் ஒரு வகை தான் என்று ஏற்றுக் கொண்டு வெவ்வேறு வகையில் காமெடி பண்ணிக்கிட்டு இருக்கார். இவர்களை போல நிறைய தயாரிப்பாளர்கள் வர வேண்டும், ரிலீஸுக்கு முன்பே லாபகரமான படமாக இது அமைந்திருக்கிறது” என்றார் .


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: அன்புமணிக்கு ராஜ்யசபா இல்லை: உடைகிறது அதிமுக-பாமக கூட்டணி?

எடப்பாடி - வேலுமணி இடையே விழுந்த விரிசல்!

ராசா பதவியேற்பு: சம்பவம் அல்ல, சரித்திரம்!

பிரேமலதா சமரசம் தோல்வி!

தலித்துகளின் கேள்விகளில் நியாயமே இல்லையா?


புதன், 19 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon