மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

தண்ணீர் பற்றாக்குறை: சென்னையில் 100 விடுதிகள் மூடல்!

தண்ணீர் பற்றாக்குறை: சென்னையில் 100 விடுதிகள் மூடல்!

தமிழக அரசு தண்ணீர் பற்றாக்குறை இல்லை என்று தெரிவித்து வரும் நிலையில் கடந்த சில நாட்களில் மட்டும் சென்னையில் கிட்டத்தட்ட 100 விடுதிகள் மூடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தண்ணீர் பற்றாக்குறை என்று கூறுவது வதந்தி, போதுமான தண்ணீர் சென்னை மக்களுக்கு வழங்கப்படுகிறது என்று கூறியுள்ளார். 800 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் நிலையில் நாளொன்றுக்கு 525 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக மேன்ஷன்கள், விடுதிகள் மூடப்பட்டு வருகின்றன. கடந்த சில தினங்களில் சென்னை விடுதி உரிமையாளர்கள் நலச் சங்கம் கீழ் இயங்கும் 100 விடுதிகளின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி அங்குத் தங்கியுள்ளவர்கள் மாற்று இடத்துக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக சங்கத்தின் செயலாளர் கே எஸ் மனோகரன், தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, தனக்கு சொந்தமான 10 விடுதிகளில் ஏற்கனவே இரண்டு விடுதிகள் மூடப்பட்டது. எங்கள் சங்கத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் பல விடுதிகளை வைத்திருக்கிறார்கள், அவர்கள் அனைவரும் கடுமையான நெருக்கடியில் உள்ளனர். தண்ணீர் நெருக்கடி தொடர்ந்தால் அடுத்த ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் இன்னும் பல விடுதிகள் மூடப்பட வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

அதுபோன்று விடுதி உரிமையாளர்களின் நலன்புரி சங்கத்தின் கீழ் இயங்கும் 200 மகளிர் விடுதிகளில் 15 விடுதிகள் மூடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சங்கத்தின் தலைவர் ஷோபனா மாதவன் கூறுகையில், மெட்ரோ தண்ணீருக்காக பதிவு செய்தால் 20 நாட்களுக்கு மேலாகக் காத்திருக்க வேண்டியுள்ளது. தனியாரிடம் ரூ.1500 கொடுத்து ஒரு லோடு தண்ணீர் வாங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அவையும் உயர்த்தப்பட்டு ரூ.3,500 முதல் 4,000 வரை விற்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே காஞ்சிபுரத்தை சேர்ந்த தனியார்ப் பள்ளி ஒன்று கழிவறைக்குப் பயன்படுத்த போதிய தண்ணீர் இல்லாததால் காலவரையற்ற அரைநாள் விடுமுறை அளித்துள்ளது. அதன்படி மதியம் 12.30 மணி வரை மட்டுமே பள்ளி இயங்கும் என்று அறிவிப்புப் பலகை வைத்துள்ளது.


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: அன்புமணிக்கு ராஜ்யசபா இல்லை: உடைகிறது அதிமுக-பாமக கூட்டணி?

எடப்பாடி - வேலுமணி இடையே விழுந்த விரிசல்!

ராசா பதவியேற்பு: சம்பவம் அல்ல, சரித்திரம்!

பிரேமலதா சமரசம் தோல்வி!

தலித்துகளின் கேள்விகளில் நியாயமே இல்லையா?


புதன், 19 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon