மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 30 மே 2020

வடைக்கு வணக்கம்!

வடைக்கு வணக்கம்!

ஒரு கப் காபி

பயணம் என்பது பலருக்கும் பிடிக்கும். ஆனால் சிலருக்கே வாய்க்கும். அன்றாடப் பணிகளுக்காக நாம் சாலைகளில் உழன்று கொண்டிருக்கும்போது, சுற்றுலாவுக்காக நம்மைக் கடந்து செல்லும் வெளியூர் பேருந்துகளைப் பார்க்கும்போது ஒரு சின்ன ஏக்கக் காற்று நம் மேல் வீசும்.

வேளாங்கண்ணி அருகே இருக்கும் கிராமத்தைச் சேர்ந்தவன் என்பதால் சிறுவயதிலிருந்தே சுற்றுலா பேருந்துகள் பலவற்றை எங்களூர் சாலையில் கடந்திருக்கிறேன். பல்வேறு மாநிலங்களில் இருந்தெல்லாம், வருவார்கள். கல்லூரிக்கு முழுக்க முழுக்க ரயில் பயணம். அதுவும் தினமும் போக அறுபது, வர அறுபது என 120 கிலோ மீட்டர் ரயில் பயணம் என்பதால் அதுவே ஒரு மினி சுற்றுலா போல அமைந்துவிடும்.

இன்றும் எங்கே பயணம் சென்றாலும் அது அலுவலக நிமித்தமோ, சொந்தப் பணி நிமித்தமோ எங்கே சென்றாலும் என்னைக் கவர்வது வடைதான். ஆம்… கேட்பவர்களுக்கு விசித்திரமாக இருக்கலாம்.

தென்னிந்தியாவின் பல பகுதிகளுக்கு சென்றபோதெல்லாம் முதலில் நான் ருசித்தது வடையைதான். வடைக்கும் எனக்குமான பந்தம் பள்ளிக் காலத்திலேயே தொடங்கிவிட்டது.

வீட்டில் முப்பருப்பு வடை, உளுந்து வடை என்று அம்மா அவ்வப்போது செய்து தந்தாலும், காக்கா கடை (கேரளாகாரர்கள் வைத்திருக்கும் டீ கடைகளை எங்களூரில் காக்கா கடை என்றே அழைப்போம்)யில் கண்ணாடிப் பெட்டிக்குள் குவித்து வைக்கப்பட்டிருக்கும் வடைகளுக்கென்று ஒரு வாசனை உண்டு.

பதினைந்து, பதினாறு வயதுகளில் அந்த வடையை ஒரு கடித்துக் கொண்டு, தேனீரை ஒரு குடி குடித்துக் கொண்டு பெரிய மனிதர்களோடு அரசியல் பேசிக் கொண்டிருக்கும் நாட்கள் இனி எப்போதும் திரும்ப வாராது.

கடை வடையில் எண்ணெய் அதிகமிருக்கும், அது என்ன வகை எண்ணெய் என்று தெரியாது என்றேல்லாம் வடையை வேண்டாதோர் சொல்வார்கள். ஆனால் இப்போதும் தேனீர் கடைகளுக்குச் செல்லும்போது பலர் சிகரெட் தேடுவது போல் என் கண் வடையை தேடும்.

வளர வளரதான் வடை என்பது தென்னிந்தியாவின் அடையாளம் என்றும் அறிந்துகொண்டேன். அதனால் அதன் மீதான ஈர்ப்பு இன்னும் அதிகமானது. வைணவத்தில் திருப்பனியாரம் என்று அழைக்கப்படும் வடை, திருவரங்கத்தில் அரங்கநாதனுக்கு படைக்கப்படும் முக்கிய நைவேத்தியங்களில் ஒன்று என்பதையும் பிறகே அறிந்தேன்.

நாம் தினந்தோறும் கடந்து செல்லும் ஒவ்வொரு விஷயத்திலும் நமக்கான வரலாற்றுச் சிறப்பான அடையாளம் பதிந்துள்ளது. ஆனால் அதெல்லாம் ஏதோ இப்போது வந்ததைப் போல நாம் கண்டுகொள்ளாமல் கடந்து வருகிறோம். ஒரு முறை திருவல்லிக்கேணி தேனீர் கடையில் ஒரு வெள்ளைக்காரரிடம் இந்த வடையின் வரலாறு பற்றி சொன்னபோது புளகாங்கிதப்பட்டு, எனக்கு ஒரு வணக்கம் வைத்து, தான் சாப்பிட்டுக் கொண்டிருந்த வடைக்கும் ஒரு வணக்கம் வைத்தார்.

ஆனால் நாமோ வடை போன்ற நமது அன்றாட அடையாளங்கள் பற்றி உணராமல் இருக்கிறோம். வடை போச்சே என்ற வகையில் நாம் இழக்கும் ஒவ்வொன்றிலும் நம் வரலாறும் போச்சே என்ற ஆதங்கமும், அதைக் காப்பாற்றும் எச்சரிக்கை உணர்வும் இருக்க வேண்டும்.

-ஆரா

புதன், 19 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon