மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 24 செப் 2020

பிரதமரின் அனைத்துக் கட்சிக் கூட்டம்: அதிமுக கலந்துகொள்ளவில்லை!

பிரதமரின் அனைத்துக் கட்சிக் கூட்டம்: அதிமுக கலந்துகொள்ளவில்லை!

டெல்லியில் பிரதமர் தலைமையில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக சார்பில் கலந்துகொள்ள சென்ற அமைச்சர் சி.வி.சண்முகம், கூட்டத்தில் பங்கேற்காமலேயே திரும்பினார்.

ஒரே தேசம், ஒரே தேர்தல் என்னும் முழக்கத்தை முன்வைத்து மக்களவைக்கும் மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (ஜூன் 19) பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, சிரோன் மணி அகாலிதளம் தலைவர் சுக்பீர்சிங் பாதல், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, பிஜு ஜனதா தளம் தலைவர் நவீன் பட்நாயக், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முக்கிய கட்சிகளான காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, திருணமூல் காங்கிரஸ், தெலுங்கு தேசம், தெலங்கானா ராஷ்டிரிய சமீதி ஆகியவை இக்கூட்டத்தைப் புறக்கணித்தன. ஒரே தேசம், ஒரே தேர்தல் முறைக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் வரவேற்றுள்ளன.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்ள முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான அதிமுக கலந்துகொள்ளவில்லை. இந்தக் கூட்டத்தில் அதிமுக சார்பில் கலந்துகொள்வதற்காக தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று காலை டெல்லி சென்றார். அவருடன் மாநிலங்களவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணனும் கூட்டத்தில் கலந்துகொள்ள இருந்தது. இன்று மாலை கூட்டம் நடைபெற்ற இடத்துக்கு சி.வி.சண்முகம் சென்றபோதும், கூட்டத்தில் பங்கேற்காமல் மனு மட்டுமே அளித்துவிட்டு திரும்பியுள்ளார்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்ள கட்சியின் தலைவர்களுக்கு மட்டுமே பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அல்லது இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரில் ஒருவர் கலந்துகொண்டிருக்க வேண்டும். பன்னீர்செல்வம் ஆயுர்வேத சிகிச்சைக்காக கோவையில் தங்கியிருப்பதால் அவரால் நிகழ்வுக்கு செல்ல முடியவில்லை.

இதனையடுத்து, வழக்கமான டெல்லி சட்ட விவகாரங்களுக்கு அனுப்புவதைப் போன்று சி.வி.சண்முகத்தை அனுப்பிவைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. கட்சிகளின் தலைவர்கள் மட்டுமே பங்கேற்கும் கூட்டம் இது என்பதால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார் என்று கூறப்படுகிறது.

கட்சித் தலைவர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் முக்கிய கூட்டத்திற்கு அமைச்சரான சி.வி.சண்முகத்தை முதல்வர் எவ்வாறு அனுப்பிவைத்தார் என்ற கேள்வி எழும் அதே நேரத்தில், கட்சித் தலைவரின் பிரதிநிதி என்ற அடிப்படையிலாவது அனுமதித்திருக்கலாம் அல்லவா என்ற குரலும் டெல்லி வட்டாரங்களில் எழுந்துள்ளது.

இது ஒருபுறமிருக்க டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோரின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதிமுகவின் தோல்விக்கு பாஜகதான் காரணம் என்று சி.வி.சண்முகம் விமர்சித்திருந்த நிலையில், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: அன்புமணிக்கு ராஜ்யசபா இல்லை: உடைகிறது அதிமுக-பாமக கூட்டணி?

எடப்பாடி - வேலுமணி இடையே விழுந்த விரிசல்!

ராசா பதவியேற்பு: சம்பவம் அல்ல, சரித்திரம்!

தலித்துகளின் கேள்விகளில் நியாயமே இல்லையா?

பிரேமலதா சமரசம் தோல்வி!


புதன், 19 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon