மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 19 செப் 2020

தண்ணீர் இல்லை: நேரத்தைக் குறைக்கும் பள்ளிகள்!

தண்ணீர் இல்லை: நேரத்தைக் குறைக்கும் பள்ளிகள்!

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில் தனியார் பள்ளிகள் சில தங்களது பள்ளிகள் திறந்திருக்கும் நேரத்தைக் குறைத்துள்ளன.

சுட்டெரிக்கும் வெயிலை விட இப்போது சென்னை வாசிகள் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சினை தண்ணீர் பஞ்சம்தான். நீராதாரங்களில் தண்ணீர் மட்டம் குறைந்துள்ளதால் தண்ணீர் விநியோகத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு வாசிகளுக்கு மட்டுமல்லாமல் ஐடி நிறுவனங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக இருப்பதால் சில நிறுவனங்கள் தங்களது பணியாட்களை வீட்டிலிருந்தபடியே வேலைபார்க்கக் கேட்டுக்கொண்டுள்ளன. இந்நிலையில் பள்ளிக்கூடங்களிலும் தண்ணீர் பிரச்சினை தலையெடுத்துள்ளதால் பள்ளிகள் தங்களது வேலைநேரத்தைக் குறைத்துள்ளன.

கிழக்கு தாம்பரத்தில் உள்ள கிறிஸ்ட் கிங் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அப்பள்ளியில் உள்ள ஆறு ஆழ்துளைக் கிணறுகளும் வறண்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. அப்பள்ளியின் செயல்பாட்டுக்குத் தினசரி 24,000 லிட்டர் அளவிலான தண்ணீர் வெளியிலிருந்து வாங்கப்படுகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டால்தான் பள்ளிக்கு இரண்டு நாட்கள் விடுப்பு வழங்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை அப்பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது. தண்ணீர் சேமிப்புக்கான கட்டுமானப் பணி நடைபெறுவதால் மாணவர்களின் பாதுகாப்பு கருதியே விடுமுறை வழங்கப்பட்டதாக அப்பள்ளியின் தலைமையாசிரியரான எஸ்.மேரி கூறியுள்ளார்.

குரோம்பேட்டையில் உள்ள ஃபோம்ரா விவேகானந்தா வித்யாலயா பள்ளி, தண்ணீர் தட்டுப்பாடு காரணமாகத் தனது வேலைநேரத்தைக் குறைத்துள்ளதாக மாணவர்களின் பெற்றோர்களுக்குக் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது. அதன்படி, காலை 8 மணி முதல் பிற்பகல் 12.15 மணி வரை மட்டுமே பள்ளி இயங்குகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அப்பள்ளியின் முதல்வர் இந்திரா ஷங்கர் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். மேற்கு மாம்பலத்தில் உள்ள ஜெய்கோபால் கரோசியா பள்ளி உட்பட சில பள்ளிகள் தங்களது மழலையர் பிரிவு வகுப்புகளைத் தண்ணீர் பிரச்சினை காரணமாக நிறுத்தியுள்ளன.

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடையே பேசிய தமிழக கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களுக்கான தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்வது பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பு எனவும், அரசு நிதி பெறும் எந்தவொரு பள்ளியிலும் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: அன்புமணிக்கு ராஜ்யசபா இல்லை: உடைகிறது அதிமுக-பாமக கூட்டணி?

எடப்பாடி - வேலுமணி இடையே விழுந்த விரிசல்!

ராசா பதவியேற்பு: சம்பவம் அல்ல, சரித்திரம்!

தலித்துகளின் கேள்விகளில் நியாயமே இல்லையா?

பிரேமலதா சமரசம் தோல்வி!


புதன், 19 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon