மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 27 மே 2020

கீர்த்திக்குக் கிடைத்த வரம்!

கீர்த்திக்குக் கிடைத்த வரம்!

தும்பா படத்தில் நடித்தது தனக்குக் கிடைத்த வரம் என்று கூறியுள்ளார் அறிமுக நாயகி கீர்த்தி பாண்டியன்.

கானா, படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷை ஒருதலையாகக் காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் தர்ஷன். இவர் கதாநாயகனாக நடித்துள்ள 'தும்பா' திரைப்படம் ஜூன் 21ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதில் அவருக்கு ஜோடியாக நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் மகள், கீர்த்தி பாண்டியன் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் டிவி கலக்கப்போவது யாரு புகழ், தீனா நடித்துள்ளார். ஹரீஷ் ராம் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய கீர்த்தி பாண்டியன், “தும்பா எனது அறிமுகப்படம். இது எனது முதல் படமாக அமைந்தது எனது வரம். என் வாழ்க்கையில் நான் எப்படி இருப்பேனோ அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில்தான் இந்தப் படத்திலும் நடித்திருக்கிறேன். சிறந்த விதத்தில் அனிமேஷன் காட்சிகளைக் கொடுக்க, காட்டில் எங்களுடன் பயணித்து கடுமையாக உழைத்தார்கள் ரங்கா மற்றும் வில்லவன் கோதை சார். நடிகர்களான எங்களுக்கு முழு சுதந்திரத்தைக் கொடுத்தார் இயக்குநர் ஹரீஷ்.

என் தோற்றத்தைப் பற்றிய எந்தவிதமான கருத்தும் சொல்லாமல், எனக்குள் தன்னம்பிக்கையை விதைத்தவர். மூன்று வருடங்களாக நான் நிறைய முயற்சிகள் எடுத்திருக்கிறேன். என் தன்னம்பிக்கையைக் குலைக்கும் விதமான கருத்துகளை எதிர்கொண்டிருக்கிறேன். ஆனால், ஹரீஷ் அந்த விதத்தில் எனக்குக் கிடைத்த வரம். உன் நடிப்பை மட்டும் கவனி, நம்பிக்கையோடு நடி என எனக்கு ஊக்கம் தந்தார் ஹரீஷ். குடும்பத்தோடு வந்து பார்க்கலாம், ஒரு தூய்மையான பொழுதுபோக்கு படமாக இருக்கும்” என்றார்.

கதாநாயகன் தர்ஷன் பேசும்போது, “கனா படத்துக்குக் கிடைத்த வரவேற்புக்கு மீடியா, அருண்ராஜா அண்ணன், சிவகார்த்திகேயன் அண்ணன் ஆகியோருக்கு முதலில் நன்றி தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

இந்தப் படத்தில் அனிமேஷன் காட்சிகள் பெரும்பகுதி இருக்கும், அதை நாங்களே கற்பனை செய்து தான் நடிக்க வேண்டும். அதனால் எங்கள் எல்லோருக்கும் நான்கு நாட்கள் ஒரு வொர்க்‌ ஷாப் வைத்தார். நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டோம். அதிலிருந்து உடனடியாக நாங்கள் அனைவரும் நல்ல நண்பர்கள் ஆனோம். கீர்த்தி ஒரு சிறந்த நடிகை. படப்பிடிப்பில் அவர் நிறைய நம்பிக்கை கொடுப்பார். இந்தப் படம் அனைவரும் ரசிக்கும் படமாக அமையும்” என்றார்.

இயக்குநர் ஹரிஷ் ராம், “இந்தப் படத்தின் மூலக்கதை என் நண்பர், இணை இயக்குநர் பிரபாகரன் அவர்களுடையது. இந்தப் படத்தைக் குறிப்பிட்ட காலத்தில் முடிக்க மிக முக்கிய காரணம் ஒளிப்பதிவாளரின் ஒத்துழைப்பும் திட்டமிடலும்தாம். அனிமேஷன் காட்சிகள் நிறைந்த படம் என்பதால் படத்தொகுப்பாளரின் வேலை இந்தப் படத்தில் மிகவும் கடினமானது. இந்தப் படத்தின் இரண்டு மிக முக்கிய அம்சங்கள் அனிமேஷன் காட்சிகள் மற்றும் சவுண்ட் டிசைன். குழந்தைகள் இந்தப் படத்தை மிகவும் ரசிப்பார்கள்.

அனிருத், சந்தோஷ் தயாநிதி, விவேக் மெர்வின் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் ஹீரோ, ஹீரோயின் என்றெல்லாம் கிடையாது. எல்லோருமே முக்கிய கதாபாத்திரங்கள். நாயகி கீர்த்தியின் திறமைதான் அவரை இந்த இடத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது. இந்த மாதிரி ஒரு சின்ன படம் இந்தளவுக்கு மக்களைச் சென்று சேர காரணம் கேஜேஆர் ஸ்டூடியோஸ் ராஜேஷ் சாரின் புரமோஷன்தான்” என்று கூறினார்.


மேலும் படிக்க

ராசா பதவியேற்பு: சம்பவம் அல்ல, சரித்திரம்!

டிஜிட்டல் திண்ணை: அன்புமணிக்கு ராஜ்யசபா இல்லை: உடைகிறது அதிமுக-பாமக கூட்டணி?

வாழ்க பெரியார், வந்தே மாதரம்: தமிழக எம்.பி.க்கள் பதவியேற்பு சுவாரசியங்கள்!

ரஞ்சித் குடும்பப் புகைப்படம்: ஹெச்.ராஜா மீது டிஜிபியிடம் புகார்!

உதயநிதிக்கு வழிவிடுகிறாரா வெள்ளக்கோயில் சாமிநாதன்?


புதன், 19 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon