மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 21 அக் 2019

தண்ணீர் தட்டுப்பாடு: வலுக்கும் போராட்டம்!

தண்ணீர் தட்டுப்பாடு: வலுக்கும் போராட்டம்!

தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில், சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பொதுமக்கள் போராடத் தொடங்கியுள்ளனர். இந்த சூழலில் கோவையில், குடிநீர் உடனடியாக வழங்கக் கேட்டு திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாநகரின் பல வார்டு பகுதிகளுக்கு முறையாகத் தண்ணீர் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் குடிநீர் வழங்கக் கேட்டு, திமுக எம்.எல்.ஏ கார்த்திக் தலைமையில் 300க்கும் மேற்பட்டோர் கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் காலி குடங்களுடன் வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர். தண்ணீர் பற்றாக்குறைக்கு முறையாக நடவடிக்கை எடுக்காத உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி பதவிவிலக வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

தொடர்ந்து, கோவையில் தண்ணீர் தேவைக்காக சூயஸ் என்ற வெளிநாட்டுத் தனியார் நிறுவனத்தோடு போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதுடன். இந்நிறுவனம் முறையாக நிர்வகிக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளனர். முதலில் இந்த போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தடையை மீறி திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சிலர் கைது செய்யப்பட்டு அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை

சென்னை வளசரவாக்கம் அருகே ராமா புரம் வள்ளுவர் சாலையில் பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் இருக்கும் தனியார் குடிநீர் ஆலையை மூட வலியுறுத்திய அவர்கள், அந்த ஆலை மூலம், ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த போராட்டம் காரணமாக வளசரவாக்கத்தில் 2 கி.மீ தூரத்துக்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மதுரை

திருமங்கலத்தை அடுத்த குருவாயூர் என்ற பகுதியில் 3000 குடும்பங்கள் உள்ளன. இங்குக் கடந்த ஒரு மாதமாக போதுமான தண்ணீர் வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே குருவாயூர் கிராமத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று கள்ளிக்குடி-காரியாபட்டி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கள்ளிக்குடி போலீசார் மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தண்ணீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பிறகு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

இதுபோன்று கடலூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இன்று தண்ணீருக்காகப் போராட்டம் நடைபெற்றுள்ளது.


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: அன்புமணிக்கு ராஜ்யசபா இல்லை: உடைகிறது அதிமுக-பாமக கூட்டணி?

எடப்பாடி - வேலுமணி இடையே விழுந்த விரிசல்!

ராசா பதவியேற்பு: சம்பவம் அல்ல, சரித்திரம்!

தலித்துகளின் கேள்விகளில் நியாயமே இல்லையா?

பிரேமலதா சமரசம் தோல்வி!


புதன், 19 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon