மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 19 ஜுன் 2019

டிஜிட்டல் திண்ணை: திமுக வேட்பாளர் விஷால்- தேர்தல் ரத்து பின்னணி!

டிஜிட்டல் திண்ணை: திமுக வேட்பாளர் விஷால்- தேர்தல் ரத்து பின்னணி!

அலுவலக வைஃபை இணைப்பு கொடுத்ததும், வாட்ஸ் அப் ஆன் லைனில் இருந்தது. ‘நடிகர் சங்க தேர்தலில் அரசியல் பக்காவாக விளையாடியிருக்கிறது. இதுபற்றிய தகவல்கள் விரைவில்’ என்று ஒரு டீசர் மெசேஜ் வந்தது.

நடிகர் சங்க தேர்தல் பற்றிய மின்னம்பலம் செய்திகளை படித்துக் கொண்டே இருக்கையில் வாட்ஸ் அப் அடுத்த செய்தியை ரிலீஸ் செய்தது.

“தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ஜூன் 23 ஆம் தேதி நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சென்னை மாவட்டப் பதிவாளர் தேர்தலை ரத்து செய்வதாக திடீரென அறிவித்திருக்கிறார். சங்க உறுப்பினர்கள் அளித்த புகார், அதற்கு சங்க நிர்வாகிகள் அளித்த விளக்கம் ஆகியவற்றைக் குறிப்பிட்டிருக்கும் பதிவாளர் வாக்காளர் பட்டியல் சேர்க்கை முறைகேடு, பதவிக் காலம் முடிந்த நிர்வாகம் ஆகிய காரணங்களைக் குறிப்பிட்டு தேர்தலை ரத்து செய்திருக்கிறார்.

நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கும்போது இன்று பதிவாளர் இந்த அறிவிப்பை வெளியிட, இதையே முகாந்திரமாக வைத்து வழக்கை இரு வாரங்களுக்கு ஒத்தி வைத்துவிட்டது நீதிமன்றம். ஆக மீண்டும் விஷால் தரப்பு பதிவாளர் உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் தனியாக வழக்கு போடத் தயாராகி வருகிறது. இது தொடர்பாக விஷால் இன்று ஆளுநரையும் சந்தித்து முறையிட்டிருக்கிறார்.

நடிகர் சங்க தேர்தலை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்பதுதான் அதிமுகவின் எண்ணம். அதற்குக் காரணம் விஷாலின் திமுக ஆதரவு, அதிமுக எதிர்ப்பு நிலைப்பாடுதான் என்கிறார்கள் நடிகர் சங்க வட்டாரத்தில்.

அதிமுகவுக்கும் விஷாலுக்கும் பழைய பகை நிறைய இருக்கிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவின் எச்சரிக்கையையும் மீறி விஷால் வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் வேட்பு மனுவில் சில குளறுபடிகள் இருப்பதாக மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்குப் பின்னால் அதிமுக இருப்பதாக அப்போதே விஷால் புகார் கூறினார்.

அடுத்த பகை, அதிமுக சார்பில் நியூஸ் ஜெ என்ற தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டது. அப்போது ஒரு ட்விட் போட்டார் விஷால். அதில், ‘மற்றுமொரு செய்தி சேனல் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு செய்தி சேனல் ஆரம்பிக்க நிறைய செலவாகும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் மாதச்சம்பளம் வாங்கும் எம்எல்ஏ., எம்.பி.க்கள் எப்படி இதுபோன்ற ஒரு வியாபார அமைப்பை தொடங்க முடிகிறது? 2019-ம் ஆண்டுக்காக காத்திருக்கிறேன்’ என்று அதிமுகவை பகிரங்கமாக தாக்கியிருந்தார். இதற்கு பதிலடியாக அப்போதே அதிமுகவின் அதிகார பூர்வ பத்திரிகையான நமது அம்மாவில் கணக்கு கேட்ட விஷாலை கடுமையாக தாக்கியிருந்தார்கள். ‘ஏற்கனவே நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் ஏழு கோடி ரூபாயை காணோமென்று கோடம்பாக்கமே உன்னைக் கொலைவெறியில் தேடுகிறபோது உனக்கெதுக்கு இந்த வேண்டாத வேலை?’ என்று விஷாலை தாக்கியது நமது அம்மா.

இப்படியாக விஷாலுக்கும் அதிமுகவுக்குமான முட்டல் மோதல்கள் தொடர்ந்துகொண்டிருந்த நிலையில்தான் விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம் முடக்கப்பட்டு சிறப்பு நிர்வாகக் குழு அரசின் வசம் சென்றது. அதேபோல நடிகர் சங்கத்தில் இருந்தும் விஷாலை தூக்கி எறிய வேண்டும் என்று அதிமுகவின் சில அமைச்சர்களே கங்கணம் கட்டிக் கொண்டு இறங்கியிருக்கிறார்கள்.

காரணம் ஒன்பது ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லாதபோதும் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் திமுக வசமே இருக்கிறது. அமைச்சர்கள் சிலரின் பணம் தமிழ் சினிமாவில் புழங்கிக் கொண்டிருக்கும் நிலையிலும் தமிழ் சினிமா உலகத்தில் அதிமுக புள்ளிகளுக்கு கௌரவமான நிலை இல்லை. காரணம் திரையுலக அமைப்புகளில் விஷால் உள்ளிட்ட திமுக அபிமானிகளே கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள்.

தவிர, வர இருக்கும் நடிகர் சங்கத் தேர்தலில் நாடக நடிகர்களின் ஓட்டு மிகவும் முக்கியமானது. சேலம், மதுரை, கோவை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் நாடக நடிகர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்குத் தேவையான அத்தனை வசதிகளையும் செய்து கொடுப்பது உதயநிதி ஸ்டாலினுடைய ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் ஆட்கள்தான். ஏற்கனவே விஷால் தலைமையிலான நிர்வாகம் கொடுத்த வாக்குறுதிகள் பல நிறைவேற்றப்பட்டுள்ளன. கட்டிடப் பணியும் முடியும் தருவாயில் உள்ளது. கட்டிடமும் முடிந்துவிட்டால் அதில் இருந்து கிடைக்கும் வருவாயில் இருந்து நாடக நடிகர்களுக்கு கூடுதல் உதவி கிடைக்கும் என்று சொல்லியிருந்தார் விஷால். இதனால் ஏற்கனவே நாடக நடிகர்கள் விஷால் பக்கம் சாய்ந்திருக்கின்றனர். போதாக்குறைக்கு அவர்களை ஒருங்கிணைத்து வாக்களிக்க அழைத்து வருவதில் உதயநிதி ஸ்டாலினுடைய தயாரிப்பு நிறுவனம் களமிறங்கியிருக்கிறது. இந்த சூழலில் விஷால் அணி வெற்றிபெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

’மீண்டும் விஷால் ஜெயித்துவிட்டால் திரையுலகம் ஒட்டுமொத்தமாக திமுகவின் கைக்குள் போய்விடும். மே 25 ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து விஷால் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து சொல்கிறார், அவருக்காக உதயநிதி வேலை செய்கிறார்., விஷால் அணியில் போட்டியிடும் பூச்சிமுருகன் எப்போதும் அறிவாலயத்திலே இருக்கும் திமுக தலைமை நிலைய ஊழியர். . இப்படி விஷாலே திமுக வேட்பாளர் போலதான் இருக்கிறார்தான். அவர் ஜெயித்துவிட்டால் அமைச்சர்கள் என்னதான் ஃபைனான்ஸ் கொட்டினாலும் தமிழ் திரையுலகம் அதிமுக பக்கம் வராது. எனவே தேர்தல் நடந்தால் விஷால் ஜெயிப்பார். அதைத் தடுக்க வழி தேர்தலை நிறுத்தி குழப்பத்தை அதிகரிப்பதுதான்’ என்று சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகளும் இப்போது அதிமுக பக்கம் இருப்பவர்களுமான சரத்குமார்,ராதாரவி போன்றோர் அரசுத் தரப்பிடம் அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள்.

அதற்கு அதிமுக தலைமையிடம் இருந்து கிரீன் சிக்னல் கிடைத்ததால்தான் தேர்தல் நடக்காது என்று ஏற்கனவே எஸ்.வி. சேகர், ராதாரவி ஆகியோர் அடித்துக் கூறினார்கள். அதன்படியே ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் விஷால் அணிக்கு எதிராகவே படிப்படியாக செயல்பட்டு நடிகர் சங்க தேர்தல் ரத்து செய்யப்பட்டிருக்கிறது” என்ற செய்தியை செண்ட் செய்தது வாட்ஸ் அப்.

அதை ஷேர் செய்துகொண்ட ஃபேஸ்புக், “ பாண்டவர் அணி, சங்கரதாஸ் அணி என்பதற்கு பதில் திமுக அணி, அதிமுக அணி என்றே பெயர் வைத்திருக்கலாமே?” என்று கமெண்ட் போட்டுவிட்டு சைன் அவுட் ஆனது.


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: அன்புமணிக்கு ராஜ்யசபா இல்லை: உடைகிறது அதிமுக-பாமக கூட்டணி?

எடப்பாடி - வேலுமணி இடையே விழுந்த விரிசல்!

ராசா பதவியேற்பு: சம்பவம் அல்ல, சரித்திரம்!

தலித்துகளின் கேள்விகளில் நியாயமே இல்லையா?

பிரேமலதா சமரசம் தோல்வி!


சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

புதன் 19 ஜுன் 2019