மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 14 நவ 2019

இலங்கை: மீண்டும் பதவியேற்ற முஸ்லிம் அமைச்சர்கள்!

இலங்கை: மீண்டும் பதவியேற்ற முஸ்லிம் அமைச்சர்கள்!

கடந்த ஜூன் 3 ஆம் தேதி இலங்கை அரசில் அங்கம் வகித்த முஸ்லிம் அமைச்சர்கள் 9 பேரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். அவர்களில் இரு அமைச்சர்கள் மட்டும் மீண்டும் தங்கள் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

ஏப்ரல் 21 ஆம்தேதி இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் சுமார் 250 பேர் கொல்லப்பட்ட நிலையில், இதன் பின்னால் உள்நாட்டு முஸ்லிம் அடிப்படைவாதிகளோடு கை கோர்த்து ஐஸ் அமைப்பு செயல்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது.

ஒருகட்டத்தில் இலங்கை அரசில் இருக்கும் சில முஸ்லிம் அமைச்சர்களுக்கே இதில் தொடர்பிருப்பதாகவும் எனவே அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் ராஜினாமா செய்ய வேண்டுமென்றும், ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும் புத்த பிக்குவுமான அதுரேலிய ரத்ன தேரோ உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். அவருக்கு ஆயிரக்கணக்கான மக்கள் ஆதரவு தெரிக்க, முஸ்லிம் அமைச்சர்கள் மீது அழுத்தம் அதிகமானது. இதையடுத்து, இலங்கை அரசில் அங்கம் வகிக்கும் ஒன்பது முஸ்லிம் அமைச்சர்களும் ஜுன் 3 ஆம் தேதி தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். மாகாண ஆளுநர்களாக இருக்கும் இரு முஸ்லிம்களும் கூட ராஜினாமா செய்தனர்.

இதன் மூலம் இலங்கை அரசுக்கு உலக அரங்கில் பெரும் தர்மசங்கடம் ஏற்பட்டது. பௌத்த இன வாதத்துக்கு இலங்கை அரசு அடிபணிந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி தங்கள் கட்சி சார்பில் அமைச்சர்களாக இருந்த இரு முஸ்லிம்களை மீண்டும் வற்புறுத்தியதன் அடிப்படையில் அவர்கள் நேற்று (ஜூன் 18) மீண்டும் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

சரியாக 15 நாட்களுக்குப் பிறகு ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த கபீர் ஹாசிம், அப்துல் ஹலீம் ஆகிய இரு அமைச்சர்களுக்கு நேற்று (ஜூன் 19) அதிபர் சிறிசேனா மீண்டும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்தத் தகவல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கே தெரியாமல் நடந்ததாக அடுத்த சர்ச்சையும் வெடித்திருக்கிறது. ஏற்கனவே ராஜினாமா செய்த 9 முஸ்லிம் அமைச்சர்களையும் அடுத்த வாரம் ஒரே நேரத்தில் அமைச்சரவையில் மீண்டும் சேர்க்க ரணில் திட்டமிட்டிருந்த நிலையில், அவருக்கே தெரியாமல் இரு முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பதவியேற்றிருக்கிறார்கள். இது அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமர் ரணிலுக்கும் மீண்டும் மோதலை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க

போயஸ் கார்டன்: சசிகலாவுக்கு அதிகரிக்கும் நெருக்கடிகள்!

டிஜிட்டல் திண்ணை: திமுக வேட்பாளர் விஷால்- தேர்தல் ரத்து பின்னணி!

விஜய் 63: கசிந்தது டைட்டில்!

எடப்பாடி - வேலுமணி இடையே விழுந்த விரிசல்!

பினாமியால் பிரச்சினையில் சிக்கும் விஷால்


வியாழன், 20 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon