மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 9 ஆக 2020

அத்திவரதர்: குடியரசுத் தலைவர் தமிழகம் வருகை!

அத்திவரதர்: குடியரசுத் தலைவர் தமிழகம் வருகை!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரண்டு நாட்கள் பயணமாக ஜூலை 12ஆம் தேதி தமிழகம் வருகிறாா். அப்போது அவர் அத்திவரதரை தரிசிக்க காஞ்சிபுரம் செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் அத்திவரதரை தரிசிக்க லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். நேற்றைய நிலவரப்படி சுமார் 10 லட்சத்து 20,000 பேர் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள், உயரதிகாரிகள், மத்திய மாநில அமைச்சர்கள் என அனைவரும் காஞ்சிபுரம் சென்று அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். இந்தச் சூழலில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழகம் வரவுள்ளார். ஜூலை 12ஆம் தேதி பிற்பகல் 2.10 மணிக்கு டெல்லியிலிருந்து தனி விமானத்தில் சென்னை விமான நிலையம் வருகிறாா். அங்கு அவருக்கு ஆளுநர், அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்பு அளிக்கவுள்ளனர்.

அதன்பிறகு உடனடியாக தனி ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரம் செல்லும் குடியரசுத் தலைவர் அங்கு வரதராஜப் பெருமாள் கோயிலில் அத்திவரதரை தரிசனம் செய்கிறாா். இதைத்தொடர்ந்து குண்டு துளைக்காத காரில் கிண்டி ஆளுநா் மாளிகை சென்று தங்கும் அவர் மறுநாள் மாலை 4.35 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானத்தில் ஆந்திரா மாநிலம் ரேணிகுண்டாவுக்குச் செல்கிறாா்.

இதேபோல துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு ஜூலை 13ஆம் தேதி பகல் 12.55 மணிக்கு மைசூரிலிருந்து தனி விமானத்தில் சென்னை விமான நிலையம் வருகிறாா். சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாட்கள் சென்னையில் இருக்கும் வெங்கய்யா நாயுடு ஜூலை 15ஆம் தேதி 6.45 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானத்தில் டெல்லி செல்கிறாா்.

குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த சிறப்பு ஆலோசனைக் கூட்டம் சென்னை பழைய விமான நிலையத்தில் நேற்று (ஜூலை 10) நடைபெற்றது.

மேலும் படிக்க

வைகோவுக்கு இன்னொரு செக்!

ராஜ்யசபா தேர்தல் நடக்காது!

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக இடப்பட்ட உத்தரவு!

பதவி விலகத் தயார்: அமைச்சர்!

இளைஞரணியில் உதயநிதி செய்யும் மாற்றம்!


வியாழன், 11 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon