மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 15 ஆக 2020

ஆசிரியரைப் போல பாடம் எடுக்கிறேன்: நிர்மலா சீதாராமன்

ஆசிரியரைப் போல பாடம் எடுக்கிறேன்: நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட் தொடர்பான விவாதத்துக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (ஜூலை 10) மக்களவையில் பதிலளித்தார். அப்போது அவர், “பொது செலவினத்தில் எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் நிதி சேர்ப்புக்கு அரசு பொறுப்புடன் செயல்பட்டு வருகிறது. 2024-25ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக உருமாற்றுவதற்கு உள்கட்டமைப்பில் முதலீட்டை அதிகரிப்பது, அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையை தாராளமயமாக்குவது, கார்ப்பரேட் வரிகளைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஜிடிபியில் 3.3 விழுக்காடு நிதிப்பற்றாக்குறை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள் குறித்து எந்த யூகமும் தேவையில்லை என்பதையும், விவரங்கள் அனைத்தும் உண்மையானவை எனவும் அவைக்கு உறுதியளிக்கிறேன். பொருளாதார வளர்ச்சிக்கும், தேசிய பாதுகாப்புக்கும் அரசு முக்கியத்துவம் அளிக்கும். சாதாரண மக்களுக்குப் பயனளிக்கக்கூடிய திட்டங்களுக்கான ஆதரவு நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது.

எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி விகிதத்தை 12 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாகக் குறைக்க ஜிஎஸ்டி கவுன்சிலில் நடவடிக்கை எடுப்போம். 2024ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராம குடும்பங்களுக்கும் குடிநீர் விநியோகிக்க மாநில அரசுகளுடன் இணைந்து பணிபுரிவோம். உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக அடுத்த ஐந்தாண்டுகளில் ரூ.100 லட்சம் கோடியை அரசு முதலீடு செய்யவுள்ளது. அனைத்து 22 வேளாண் பொருட்களுக்குமான குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

முதலீடுகளை அதிகரிப்பதற்குப் பிரதமர் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். நிர்மலா சீதாராமனின் கருத்துகளுக்குச் சில உறுப்பினர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். அப்போது அவர், “நான் கேலி செய்யப்பட்டாலும்கூட, வகுப்பில் மாணவர்களிடம் பேசும் ஆசிரியரைப் போல சில சமயம் பாடம் எடுத்திருக்கிறேன். அதுவும் போதாது என்றால் உறுப்பினர்களை அறை எண் 36க்கு வரவேற்க மகிழ்ச்சியடைகிறேன்.

வங்கித் துறை சந்திக்கும் நெருக்கடியைப் பொறுத்தவரையில், வாராக் கடன்களைக் கண்டறிவது, பொதுத் துறை வங்கிகளுக்கு மூலதனம் வழங்குவது, சீர்திருத்தங்களை மேற்கொள்வதன் வாயிலாக நெருக்கடியைக் குறைப்போம். கடன் கலாச்சாரத்தை மாற்றவும், வாராக் கடன் பிரச்சினையைத் தீர்க்கவும் திவால் சட்டம் பெரிதும் உதவும்” என்று தெரிவித்தார்.

நிர்மலா சீதாராமன் பேசுகையில், பட்ஜெட்டில் முன்மொழியப்பட்டுள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்பப்பெறும்படி காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கோஷங்களுடன் அவையிலிருந்து வெளியேறினர். அவர்களுடன் திமுக, திருணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளியேறினர்.

மேலும் படிக்க

வைகோவுக்கு இன்னொரு செக்!

ராஜ்யசபா தேர்தல் நடக்காது!

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக இடப்பட்ட உத்தரவு!

பதவி விலகத் தயார்: அமைச்சர்!

இளைஞரணியில் உதயநிதி செய்யும் மாற்றம்!


வியாழன், 11 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon