மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 26 செப் 2020

மாநிலங்களவைத் தேர்தல்: 6 பேரும் போட்டியின்றி தேர்வு!

மாநிலங்களவைத் தேர்தல்: 6 பேரும் போட்டியின்றி தேர்வு!

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்ட வைகோ உள்ளிட்ட 6 பேரும் போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வாகியுள்ளனர்.

தமிழகத்தில் காலியாக இருந்த 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளை நிரப்புவதற்காக வரும் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அதிமுக சார்பில் முகம்மது ஜான், சந்திரசேகர், பாமகவின் அன்புமணி ஆகியோரும் திமுக சார்பில் சண்முகம், வில்சன் மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ என 6 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர்.

தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டதால் அவருடைய வேட்புமனு ஏற்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் திமுக சார்பில் நான்காவது வேட்பாளராக என்.ஆர்.இளங்கோ மனுதாக்கல் செய்தார். வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டதையடுத்து தன்னுடைய வேட்புமனுவை அவர் நேற்று வாபஸ் பெற்றார். 6 பேர் மட்டுமே மனுதாக்கல் செய்திருந்ததால் அனைவரும் போட்டியின்றி தேர்வுசெய்யப்படும் வாய்ப்பே ஏற்பட்டது.

வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாளான இன்று (ஜூலை 11) யாரும் திரும்பப்பெறாததால், 6 பேரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரியான சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் தலைமைச் செயலகத்தில் அறிவித்தார். இதனையடுத்து வெற்றிச் சான்றிதழைப் பெற்றுக்கொண்ட அதிமுக எம்.பி.க்கள் முகம்மது ஜான், சந்திரசேகர் மற்றும் அன்புமணி ஆகியோர் முதல்வரை சந்தித்து வாழ்த்துபெற்றனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் சகிதம் தலைமைச் செயலகத்திற்கு வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுக எம்.பி.க்கள் சண்முகம், வில்சன் ஆகியோர் சட்டப்பேரவைச் செயலாளரிடமிருந்து வெற்றிச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டனர். அப்போது எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “கூட்டாட்சி தத்துவத்தை காக்க கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வேன். மதச்சார்பின்மைக்கு எதிராக இருக்கும் இந்துத்துவா படையெடுப்பை எதிர்ப்பேன். தமிழகத்தில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் திட்டங்களை கொண்டுவருவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பேன்.” என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து திமுக கூட்டணி சார்பில் தேர்வுசெய்யப்பட்ட மூவரும் மெரினா கடற்கரையிலுள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்குச் சென்று வெற்றிச் சான்றிதழ்களை வைத்து மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர். சென்னை வேப்பேரியிலுள்ள பெரியார் நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் படிக்க

வைகோவுக்கு இன்னொரு செக்!

இந்திய அணியின் ‘அந்த மூன்று பேர்’!

மகனுக்காக வேலூரில் முகாமிட்ட துரைமுருகன்

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக இடப்பட்ட உத்தரவு!

இந்திய அணியை வெளியேற்றிய காரணிகள்!


வியாழன், 11 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon