மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 15 ஆக 2020

தோனிக்கு நியூசிலாந்து அணியில் இடமுண்டா?

தோனிக்கு நியூசிலாந்து அணியில் இடமுண்டா?

தோனியின் ஓய்வு குறித்து பலரும் கருத்து தெரிவித்துவரும் நிலையில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனிடம் இதுகுறித்து கருத்துகேட்கப்பட்டது.

நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவி வெளியேறினாலும் தோனியின் நிதான ஆட்டம் அணியை வெற்றிக்கு அருகில் அழைத்துச் சென்றது. எதிர்பாராத விதமாக அவர் ரன் அவுட் ஆனது வெற்றியை நியூசிலாந்து ருசிக்க வாய்ப்பாக அமைந்தது. உலகக் கோப்பைத் தொடருடன் தோனி வெளியேறுவதாக பேசப்பட்டுவந்த நிலையில் அதை இந்திய அணியின் கேப்டன் கோலி முற்றிலுமாக மறுத்துள்ளார்.

போட்டி நிறைவடைந்ததும் பேசிய கோலி, “ஓய்வு குறித்து தோனி எங்களிடம் எதுவும் தெரிவிக்கவில்லை” என்று கூறினார்.

வெற்றி பெற்ற அணியின் கேப்டனான வில்லியம்சனிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் கிண்டலாக கேள்வி எழுப்பினார். தோனிக்கு இந்திய அணியில் ஓய்வு அளிக்கப்பட்டால் அவரை நியூசிலாந்து அணியில் சேர்த்துக்கொள்வீர்களா என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த கேன் வில்லியம்சன், “தோனி உலகளவில் மிகச் சிறந்த வீரர். ஆனால், அவர் இந்தியர் அல்லவா? நான் இந்திய அணியின் கேப்டனாக இருந்தால் அவருக்கு கட்டாயம் இடம் அளிப்பேன். அவரது அனுபவம் அவரது பங்களிப்பு இப்போதும் எதிர்காலத்திலும் அவசியமானது” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக தோனியின் பேட்டிங் குறித்த விமர்சனம் வரும்போதெல்லாம் அவரது இருப்பின் முக்கியத்துவத்தை கோலியும் தொடர்ந்து பேசிவருகிறார்.

சர்வதேச கிரிக்கெட் வாரியம் தோனி குறித்த ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. “தோனி இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றியவர். உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோருக்கு நம்பிக்கையளிப்பவராக இருக்கிறார். எம்.எஸ்.தோனி வெறும் பெயரல்ல, மறுக்கமுடியாத மரபு” என்று ஐசிசியின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் விராட் கோலி, ஜாஸ்ப்ரீத் பும்ரா, பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் உட்பட ரசிகர்களும் எம்.எஸ்.தோனி குறித்து பேசியுள்ளனர்.

விக்கெட் கீப்பர் தோனிதான் எனது முன்மாதிரி. மிஸ்டர் கூல் களத்தில் கீப்பிங் செய்யும் போது எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது கைகள் ஸ்டம்பிற்கு பின்னால் இருந்து வேகமாக விக்கெட்டை எடுக்கும். பேட்டிங் செய்யும் போதும் மிகவும் அமைதியாக இருப்பார். இந்த விளையாட்டின் தூதர் அவர். நான் அவரது தீவிர ரசிகன் என இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பட்லர் தெரிவித்துள்ளார்.

15 ஆண்டுகளாக இந்திய அணியை நேரடியாகவும் மறைமுகமாகவும் வழிநடத்திவரும் தோனி தொடர்ந்து அவரது பங்களிப்பை சிறப்பாக அளித்து விமர்சனங்களை நொறுக்கித் தள்ளுவார் என எதிர்பார்க்கலாம்.

மேலும் படிக்க

வைகோவுக்கு இன்னொரு செக்!

இந்திய அணியின் ‘அந்த மூன்று பேர்’!

மகனுக்காக வேலூரில் முகாமிட்ட துரைமுருகன்

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக இடப்பட்ட உத்தரவு!

இந்திய அணியை வெளியேற்றிய காரணிகள்!


வியாழன், 11 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon