மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 12 ஆக 2020

நாவலருக்கு அரசு விழா: சட்டமன்றத்தில் துணை முதல்வர்

நாவலருக்கு அரசு விழா: சட்டமன்றத்தில் துணை முதல்வர்

நாவலர் நெடுஞ்செழியனுக்கு அரசு சார்பில் விழா எடுக்கப்படும் என்று சட்டமன்றத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார்.

திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும் திமுகவின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராக அறியப்பட்டவருமான நாவலர் நெடுஞ்செழியன், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரின் மறைவின்போது இடைக்கால முதல்வராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார். 1956ஆம் ஆண்டு திருச்சியில் நடந்த திமுக மாநில மாநாட்டில், மாநாட்டுக்குத் தலைமை தாங்கிய நாவலர் நெடுஞ்செழியனை மேடையில் அண்ணா, “தம்பி வா... தலைமையேற்க வா... உன் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடக்கிறோம்” என அழைத்தார். அந்த மாநாட்டில் திமுகவின் பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டார். 1920ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி பிறந்த நாவலர் நெடுஞ்செழியனுக்கு இந்த ஆண்டு நூற்றாண்டு வருடமாகும்.

இதுதொடர்பாக சட்டமன்றத்தில் நேற்று (ஜூலை 11) கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் பேசுகையில், “நடமாடும் பல்கலைக்கழகம் எனப் போற்றப்படுபவரும், அடிப்படை திராவிட கொள்கையிலிருந்து மாறுபடாதவருமான நாவலர் நெடுஞ்செழியனின் நூற்றாண்டைச் சிறப்பிக்கும் வகையில், தமிழக அரசு அவருக்குச் சிறப்புச் செய்ய வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

இதற்குப் பதிலளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு குறித்து முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்தியுள்ளோம். திராவிட இயக்கத்தின் தூணான நெடுஞ்செழியனுக்கு அரசின் சார்பில் விழா எடுக்கப்படும். அவரின் பெயர் வரலாற்றில் இடம்பெறும் வகையில் முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார்” எனத் தெரிவித்தார்.

நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “திராவிட இயக்கத்தின் சமூக நீதி லட்சியத்தை நெஞ்சில் ஏந்தி, பெரியாரின் பகுத்தறிவுத் தெளிவுடனும் அண்ணாவின் தமிழ்மொழிப் பற்றுடனும் - தலைவர் கருணாநிதியுடனான இயக்க உறவுடனும் தொடர்ந்து பயணித்தவரான நாவலர் நெடுஞ்செழியனுக்கு நூற்றாண்டு விழா என்பது திராவிட இயக்கத்தைச் சேர்ந்த அனைவருக்கும் தேனென இனிக்கின்ற செய்தியாகும்

திராவிட இயக்க வரலாற்றில் தனித்த புகழையும், தகுதி மிகுந்த அடையாளத்தையும் கொண்டுள்ள நாவலரின் நூற்றாண்டில் அவரது பெருமைகளை நினைவுகூர்வோம். சமூகநீதி - சுயமரியாதை ஆகிய லட்சியங்களைக் காக்கும் பயணத்தை வாழும் நாள் முழுதும் தொய்வின்றித் தொடர்ந்து மேற்கொள்ள சூளுரைப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடிக்கு டெல்லி போட்டுத் தந்த ப்ளான்!

வைகோவுக்கு இன்னொரு செக்!

இந்திய அணியின் ‘அந்த மூன்று பேர்’!

மகனுக்காக வேலூரில் முகாமிட்ட துரைமுருகன்

இந்திய அணியை வெளியேற்றிய காரணிகள்!


வெள்ளி, 12 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon