மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 12 ஆக 2020

மன்னன் மயங்கும் மலர்!

மன்னன் மயங்கும் மலர்!

வனமெல்லாம் செண்பகப்பூ 10 - ஆத்மார்த்தி

கலை அதைப் படைப்பவர்களுக்கும் பெறுபவர்களுக்கும் மத்தியில் ஓர் இடைவெளியை உருவாக்குவது அதன் முக்கிய இயல்பு . நடனத்தை நல்குபவருக்கும் அதனைக் கண்டு இன்புறுவோருக்குமான கொடுக்கல் வாங்கல்கள் வெவ்வேறானவை. நுகர்வின் உணர்தலுக்கும் படைப்பின் நிகழ்தலுக்கும் இடையிலான சமமற்ற தன்மை கலையின் அடிப்படை. அதுவே எழுத்து என்று எடுத்துக்கொண்டோமேயானால் வழங்குபவரைவிடப் பெறுபவருக்கான அடைதல் சாத்தியப்பாடுகள் அதிகம். வாசகன் ஒருவன் எழுதியவனைவிட படைப்பின் மீது அதிகாரமும் இயங்குகாலமும் கொண்டவனாக இருக்க முடியும். இது எழுத்தின் நியதி. உணர்தல், உணர்த்துதல் இவ்விரண்டிற்கிடையிலான வித்தியாசங்கள் கூடவோ, குறையவோ ஏற்படுவதும் நிதர்சனம்.

இசை எனும் பெருங்கலையில்தான் அறிதலும் அறியாமையும் சமமாகி வழங்குபவரின் பேரின்பத்துக்குக் குறைவற்ற இன்னொரு பேரின்பத்தை அடைபவராலும் கொள்ள முடியும். அது இசையின் உன்னதம். இசை என்பது ஞானத்தின் பிற்பாடான மௌனம். அது அறியாமையின் இருள் நிசப்தம் அல்ல. அறிதலினூடாக ஒளிரும் சன்னதம். இசை என்பதன் இயங்குதளம் நெடியது. அதன் முதல் வித்தியாசம் மற்ற எந்தக் கலையை விடவும் அது காலத்தைத் தன்னால் ஆன மட்டிலும் கட்டுப்படுத்திவிடுகிறது. காலம் இசையின் பேச்சுக்கு மறுபேச்சு மொழிவதில்லை. இசையின் முன்னே பெய்யெனப் பெய்யும் மழை போலக் கட்டுக்கு அடங்கி நிற்கிறது

ஏன் சில பாடல்கள் உயிருக்கு அருகே சென்று அமர்ந்துவிடுகின்றன? ஏன் அத்தகைய பாடல்களை எப்போது, எத்தனையாவது முறை கேட்டாலும் முதன்முறையின் அதே பரவசத்தைக் குன்றாமல் நம்மால் அடைந்துவிட முடிகிறது? சில பாடல்களுக்கு மட்டும் எப்படிச் சிறகுகள் முளைத்திருக்கின்றன? சில பாடல்களால் மாத்திரம் எப்படி நம் இரவுகளை அந்திமாலைகளாகவும் அதிகாலைகளை முன்னிரவுகளாகவும் மாற்றம் செய்ய முடிகிறது? ஏன் சில குரல்கள் நம்மை அடக்கி ஆளும் சட்டாம்பிள்ளைகளாகின்றன? எப்படித் தன் கையிலிருக்கும் சவுக்கை ஒருதடவை கூடப் பிரயோகிக்காமலேயே நம்மை அதன் நுனிவழி அன்பை நல்கி ஆள முடிகிற ஆற்றலைச் சில பாடல் வரிகள் மட்டும் தமக்குத் தாமே வழங்கிக்கொள்கின்றன? பாடல்கள் இசை வரிகள் குரல்கள் இவையெல்லாம் கலையின் முகங்கள் மாத்திரமன்றி எப்படி நம் சுயத்தில் பெருகுகிற அதிகாரங்களாக மாறுகின்றன?

அப்படியான அற்புதப் பாடல்களிலிருந்து அதன் தொடக்க இசையை, இசைக்கோவைகளை, பல்லவியின் வரிகளை, பல்லவிக்கும் சரணங்களுக்கும் இடையிலான இசைத் தோரணங்களை, சரணத்துக்கும் முடிவுக்கும் இடையிலான சங்கதிகளை, குரலை, பாடல் செல்லும் திசைவழிப் பயணத்தை என எதையும் கொஞ்சம் மாற்றினாலும் பாடலின் மொத்த ஆன்மாவும் கெட்டுவிட்டதான உணர்வை மீண்டும் மீண்டும் ஏற்படுத்திவிடுகின்றன.

தீர்க்க சுமங்கலி. ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கத்தில் 1974ஆம் ஆண்டு ஏப்ரல் தமிழ்ப் புத்தாண்டு வெளியீடு. மாபெரும் ஹிட் படம். இசை எம்.எஸ்.விஸ்வநாதன். பாடல்கள் கண்ணதாசன், வாலி. முத்துராமன், கே.ஆர் விஜயா நடித்தனர். இந்தப் படத்தில் எம்.எஸ்.வி. இசையில் முதல் பாடலாக மல்லிகை என் மன்னன் மயங்கும் பாடலைப் பாடினார் வாணி ஜெயராம். இந்திய இசையின் மகா முக்கிய நிகழ்தலாகவே இந்தப் பாடல் பெருங்கணக்கைத் தொடங்கியது. வாணியின் பிசிரற்ற குரலும் துல்லியமும் உள்ளே எங்கோ ஆழத்தில் ஒளிந்திருக்கும் சின்னதொரு கட்டளைத் தன்மையும் வேறு யாருக்கும் வாய்க்காதது. இவற்றை அவரது குரலின் தளைகளாகவே சுட்ட முடியும். ஆனால், அவற்றைத் தன் வளர்ப்புக் கிளிகளைப் போலாக்கிப் பல்லாயிரம் பாடல்களைப் பாடினார் வாணி இந்தியக் குரல்வானின் தன்னிகரற்ற நட்சத்திரம் வாணி ஜெயராம்.

எளிதில் புரியவைக்க முடியாத தொடக்க இசையிலிருந்தே இப்பாடலுக்கான ராஜபாதை தொடங்குகிறது. மெல்லிய வருடல் அடுத்தடுத்த நகர்தல்களாகிப் பெருகி ஒலிக்கும் தொடக்க இசை வாணியின் குரலுக்கு முன் சென்று பழகிய வளர்ப்பு மிருகத்தைப் போல மண்டியிடுகிறது. மொத்தப் பாடலின் இசையுமே மறுமுறை நிகழாத வேறோர் அற்புதமெனவே பெருக்கெடுக்கிறது.

மல்லிகை - என் மன்னன் மயங்கும்

பொன்னான மலரல்லவோ?

எந்நேரமும் உன்னாசைபோல்

பெண்பாவை நான் பூச்சூடிக் கொள்ளவோ?

மல்லிகை - என் மன்னன் மயங்கும்

பொன்னான மலரல்லவோ?

இடையிசைதான் இந்தப் பாடலின் ஆச்சரியம் எனலாம். சின்னச் சின்ன நகாசு வேலைகளின் மூலமாக முழுக் காட்சியையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கும் மந்திர மேதை ஒருவன் முகத்தில் துண்டு போர்த்திக்கொண்டு உறங்குகிற பாவனையோடு பாடலிலிருந்து அந்தக் காலத்தின் வழமையைக் குறிக்கும் யாவற்றையும் வெளியேற்றிப் புத்திசை நல்கினார் எம்.எஸ்.வி.

வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்

வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்

திங்கள்மேனியைத் தொட்டுத் தாலாட்டுது!

குளிர் காற்றிலே தளிர் பூங்கொடி!

கொஞ்சிப் பேசியே அன்பைப் பாராட்டுது

என் கண்ணன் துஞ்சத்தான்

என் நெஞ்சம் மஞ்சம்தான்

கையோடு நானள்ளவோ

என் தேவனே உன் தேவி நான்

இவ்வேளையில் உன் தேவை என்னவோ

மல்லிகை - என் மன்னன் மயங்கும்

பொன்னான மலரல்லவோ?

இந்தப் பாடல் முழுமையான பெண் குரல் பாடல். எம்.எஸ்.வி.யின் இசை மேதமையை வார்த்தைகளால் சொல்லி முடித்து விட முடியாதது. அவரது இசைத்த காலம் அந்தக் காலத்தின் வசதியின்மை, இயலாமைகள் இவற்றோடு பொருத்திப் பார்த்தால்கூட ஓரளவுதான் அவர் இசைத்த பெருஞ்செல்வத்தை உணர முடியும். இன்னொருவரால் இணை செய்யவே முடியாத பேரிசை எம்.எஸ்.விஸ்வநாதன். வாலி மெல்லிய பிரார்த்தனைக்கான நகர்தலோடு அன்பின் பிணைப்பைத் தனக்கே உரிய சொல்லாடல்களோடு வடித்தார். இஷ்ட தெய்வத்தைத் தன் சிரத்தையினால் கட்டுப்படுத்தும் பக்தனின் தீர்மானத்துடன் எழுதினார். நுட்பமான வைராக்கியம் பெருக்கெடுக்கும் உறவாடலின் சொற்கள் கொண்டு இந்தப் பாடலைப் புனைந்தார்.

இந்தப் பாடலுக்கான இசைக்கோவைகளைத் தீர்மானித்ததிலிருந்தே விஸ்வநாதன் செய்துபார்த்த வித்தியாசம் தொடங்குகிறது. சொல்லிப் புரியவைக்க முடியாத உணர்வுகளுக்குப் பின்னதான மனோபாவ நிறைதலை இசைவழி பெயர்த்தல் அரிய வேலை. அதைத் தன் ஆழ் மனத்திலிருந்து செய்தளித்தவர் எம்.எஸ்.வி. வாணி ஜெயராம், எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாடிய முதல் பாடல் இது. ஒரு குரல் எப்படியான பாடல்களுக்கு ஒத்துவரும் என்பதைக் கணிப்பதிலிருந்து பல பாடல்களின் உருவாக்கம் தொடங்குவதாகப் பொருள். இதை நன்கு உணர்ந்தவரே இசையில் தனியாட்சி செய்பவராகிறார் எம்.எஸ்.வி. கணித்ததில் பிறழவே இல்லை. ஆதிக்கமும் தீர்க்கமும் மிகுந்த தனித்த குரல்வகைமை வாணி ஜெயராமினுடையது. அதை அட்சரம் பிசகாமல் வெளிப்படுத்துகிற நல்வாய்ப்பாகவே இந்தப் பாடல் அமைந்தது நல்வரம்.

பொன் மாங்கல்யம் ...வண்ணப் பூச்சரம்

பொன் மாங்கல்யம் ...வண்ணப் பூச்சரம்

மஞ்சள் குங்குமம் - என்றும் நீ தந்தது!

ஓராயிரம் இன்பக் காவியம்

உந்தன் கண்களில் அள்ளி நான் தந்தது!

நம் இல்லம் சொர்க்கம்தான்

நம் உள்ளம் வெள்ளம்தான்

ஒன்றோடு ஒன்றானது

என் சொந்தமும் இந்த பந்தமும் உன்னோடுதான்

நான் தேடிக்கொண்டது

மல்லிகை - என் மன்னன் மயங்கும்

பொன்னான மலரல்லவோ?

எந்நேரமும் உன்னாசைபோல்

பெண்பாவை நான் பூச்சூடிக் கொள்ளவோ?

இசையை உணர்வதற்கு இசையின் உபரூபங்கள் புரிய வேண்டும் என்பது கட்டாயமே இல்லை. தெய்வமெதுவென்று அறிவதற்கு முந்தைய தெய்வத் தேடல் எங்ஙனம் ஆன்மிகத்தின் உட்கூறாகக் காலமெல்லாம் பார்க்கப்பட்டு வருகிறதோ, அங்ஙனமே இசையெதுவென்று அறிவதற்கு முந்தைய இசைமீதான பற்றுதல் போதுமானதாயிருக்கிறது. வாழ்காலமெல்லாம் இசையைப் பற்றிக்கொண்டு கடந்த பெருங்கூட்டம் இசையின் உள்கட்டுமானங்களை அறிந்ததேயில்லை. இசை என்பது காலத்தினூடான ஆவணச் சான்றுகளாகத் தன்னை நிகழ்த்திக் கொள்கிறது. ஆகவே, காலம் ஒரு கலயம் போலாகி இசையைத் தனக்குள் நிரப்பிக்கொள்கிறது.

வெற்றிப் படமான தீர்க்க சுமங்கலி பிற்காலத்தில் இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் மறுவுரு கண்டது. அவற்றில் மலையாளத்தில் மட்டும் எம்.எஸ்.விஸ்வநாதனே இசையமைத்தார். மல்லிகை என் மன்னன் மயங்கும் பாடலுக்குச் சமமான அதே சூழல் பாடலாக அமைந்த பாடலை வாணி ஜெயராமே பாடினார். இப்படியான பாடல்கள் ஒப்பாய்வுக்கு ஏற்றவை.

முல்லைமாலை சூடிவந்த வெள்ளி மேகமே உன் அழகைப் பார்த்துப் பௌர்ணமி நிலவு தயங்குகிறதல்லவா... அழகான வசந்த இரவில் மாளிகையின் மேற்தளத்தில் பூத்த மலர்கள் ஆத்மநாதனுக்காகக் காத்திருக்கின்றன. இப்படியாகச் செல்லும் மலையாளப் பாடலின் இல்லாத ஏதோவொன்று தமிழ்ப் பாடலில் நேர்ந்திருக்கிறது. நம் மொழி என்பதற்காக தமிழை உயர்த்திப் பிடிக்கிறேனோ எனும் ஐயம் எழுபவர்கள் மீண்டும் மீண்டும் இரண்டு மொழியிலும் காணப்படுகிற மேற்காணும் பாடல்களைக் கேட்டுப்பார்த்து முடிவுக்கு வரலாம்.

மல்லிகை என்ற இந்தப் பாடலின் முதற்சொல் ஒன்றே போதும் எது உச்சியில் மின்னும் வைரம் என்பதை நின்றுவிட.

வாழ்க எம்.எஸ்.வி. புகழ்!

வாழ்க இசை!

கரை கடந்த வெள்ளம்!

மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடிக்கு டெல்லி போட்டுத் தந்த ப்ளான்!

வைகோவுக்கு இன்னொரு செக்!

இந்திய அணியின் ‘அந்த மூன்று பேர்’!

மகனுக்காக வேலூரில் முகாமிட்ட துரைமுருகன்

இந்திய அணியை வெளியேற்றிய காரணிகள்!


வெள்ளி, 12 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon