மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 14 ஆக 2020

நாங்கள் 150 பேர் எழுந்து நின்றால்: ஜெகன் ஆவேசம்!

நாங்கள் 150 பேர் எழுந்து நின்றால்: ஜெகன் ஆவேசம்!

ஆந்திர சட்டமன்றத்தில் நடந்த விவாதத்தின்போது ஆளுங்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸுக்கும் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசத்திற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மக்களவைத் தேர்தலோடு நடந்த ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் 151 இடங்களைக் கைப்பற்றிய ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது. 23 இடங்களைப் பெற்ற சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது.

இந்த நிலையில் ஆந்திர சட்டமன்றத்தில் இன்று (ஜூலை 12) மாநிலத்தில் நிலவிவரும் வறட்சி தொடர்பான விவாதத்தில் பேசிய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன் வழங்குவது தொடர்பாக தெலுங்கு தேசத்தையும் சந்திரபாபு நாயுடுவையும் கடுமையாகக் குற்றம்சாட்டிப் பேசினார். “ விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க தெலுங்கு தேசம் அரசாங்கம் ஒரு பைசாவைக் கூட ஒதுக்கவில்லை” என்று விமர்சித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தெலுங்கு தேசம் கட்சியினர், முதலமைச்சர் தனது தகுதியை மீறி செயல்படுவதாகவும், விவசாய கடன் வழங்குவதில் தவறான தகவல்களை கூறுவதாகவும் குற்றம்சாட்டினர். இது ஒருகட்டத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு இடையே நேரடி வாதமாக மாறியது. ஜெகன் பேசிக்கொண்டிருக்கும் போதே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து எழுந்து எதிர்க்கட்சியினரை நோக்கி ஆவேசமாகப் பேசிய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, "உங்களுடைய பார்வைக்கெல்லாம் பயப்படுபவன் அல்ல நான். என்னிடம் 150 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் எழுந்து நின்றால் தாங்க மாட்டீர்கள். ஒருவர் வளர்வதால் மட்டுமே பெரிய ஆள் கிடையாது. முதலில் புத்தி வளர வேண்டும்”என கடுமையாக சாடினார்.

முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, “ஜெகன் மோகன் ரெட்டியும் அவரது குழுவும் அரசாங்கத்தை நடத்துவதற்கான நுணுக்கங்களை கற்றுக்கொள்வதற்கு பதிலாக எதிர்க்கட்சியினரை அவமானப்படுத்தும் வேலைகளில்தான் ஈடுபட்டுவருகின்றனர். நாங்கள் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக அவை உரிமை மீறல் பிரச்சினையை எழுப்ப உள்ளோம்” என்று தெரிவித்தார். மேலும், சட்டப்பேரவையில் பொய் பேசியதற்காக ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் படிக்க

மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடிக்கு டெல்லி போட்டுத் தந்த ப்ளான்!

ஏ.எல்.விஜய் திருமணக் கொண்டாட்டம்!!

அத்திவரதரை தரிசித்த விஜயகாந்த்

பாரதியார் பாடல்: நிர்மலாவைப் பாராட்டிய சிதம்பரம்


வெள்ளி, 12 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon