மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 14 ஆக 2020

படுக்கையறையை ஒட்டுக் கேட்கிறதா கூகுள்?

படுக்கையறையை ஒட்டுக் கேட்கிறதா கூகுள்?

படுக்கையறையில் பேசுவதைக் கூகுள் செயலி மறைமுகமாகப் பதிவு செய்கிறது என்பதை நம்பமுடிகிறதா?

ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பெரும்பாலானோருக்குக் கூகுள் பற்றியும் கூகுளின் இதர அம்சங்கள் பற்றியும் தெரிந்திருக்கும். குறுஞ்செய்திகள் அனுப்புவதற்குக் குரலை எழுத்துக்களாக மாற்றும் வசதி ’கூகுள் வாய்ஸ் ரெகோகனைசன்’ என்ற அம்சத்தில் இருக்கிறது. இதன் மூலம் வாட்ஸ் அப், ஃபேஸ்புக், குறுஞ்செய்திகளில் நாம் பேசுவதை எழுத்துகளாகப் பதிவு செய்து அனுப்ப முடியும். கூகுள் தேடலில் இந்த வசதி முதலில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், இப்போது அனைத்து செயலிகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் சுமார் 120 மொழிகளை எழுத்தாக்கம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வசதி பயனாளர்களுக்கு மிகவும் பயனுள்ளது என்றாலும் நமது அந்தரங்க உரையாடல்களையும், தனிநபர் அடையாள விவரங்களையும் ரகசியமாகப் பதிவுசெய்வது ஏற்கத்தக்கதா?

பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த வி.ஆர்.டி. நியூஸ் ஊடகம் இதுதொடர்பான ஆய்வு மேற்கொண்டு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது, கூகுள் ஹோம் ஸ்பீக்கர், செக்யூரிட்டி கேமரா, மொபைல் போன் போன்றவற்றில் உள்ள கூகுள் வாய்ஸ் ரெகோகனைசன் மூலமாக நமக்குத் தெரியாமலேயே நமது குரல் பதிவுகள் பதிவுசெய்யப்படுகின்றன. இவை கூகுள் வாய்ஸ் ரெகோகனைசைனின் தரத்தை மேலும் உயர்த்தும் ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்படுகிறதாம். கூகுள் நிறுவனத்துக்காக ஒப்பந்த அடிப்படையில் செயல்படும் மூன்றாம் தரப்பு நிறுவனம் இப்பணியில் ஈடுபட்டுள்ளது.

கூகுள் வாய்ஸ் ரெகோகனைசனின் இவ்வாறாகப் பதிவாகிய 1,000 குரல் பதிவுகளைத் தனது ஆய்வில் கேட்டுள்ளது வி.ஆர்.டி. நியூஸ். அதில், பயனாளர்களின் முகவரிகள், கணவன் - மனைவி இடையேயான அந்தரங்க விவாதங்கள், எண்ணற்ற ஆண்களின் பாலியல் விருப்பம் தொடர்பான உரையாடல்கள் உள்ளிட்ட குரல் பதிவுகள் இருந்துள்ளன. உயிருக்குப் போராடிய பெண் ஒருவரின் குரல் பதிவும் இதில் இடம்பெற்றிருந்தது. இவ்வாறாகப் பதிவுசெய்யப்படும் குரல் பதிவுகளில் வெறும் 0.2 சதவிகிதப் பதிவுகள் மட்டுமே அடுத்தகட்ட பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாகக் கூகுள் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இதன் மூலம் கூகுள் வாய்ஸ் ரெகோகனைசனின் தரத்தை உயர்த்த முயற்சிப்பதாகவும் கூகுள் நிறுவனத்தின் புராடெக்ட் சர்ச் பிரிவு மேலாளரான டேவிட் மான்சீஸ், ஜூலை 11ஆம் தேதி பிளாக் போஸ்ட் பதிவில் கூறியுள்ளார்.

என்னதான் இருந்தாலும் தனிநபரின் அந்தரங்க உரையாடல்களைக் கேட்கவும், ரகசியமாகப் படுக்கையறையை ஒட்டுக்கேட்கவும் கூகுளுக்கு உரிமையோ அதிகாரமோ உள்ளதா?

மேலும் படிக்க

மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடிக்கு டெல்லி போட்டுத் தந்த ப்ளான்!

ஏ.எல்.விஜய் திருமணக் கொண்டாட்டம்!!

அத்திவரதரை தரிசித்த விஜயகாந்த்

பாரதியார் பாடல்: நிர்மலாவைப் பாராட்டிய சிதம்பரம்


வெள்ளி, 12 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon