மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 14 ஆக 2020

அரசுக்கு ரூ.100 கோடி அபராதம்: தடை விதிக்க மறுப்பு!

அரசுக்கு ரூ.100 கோடி அபராதம்: தடை விதிக்க மறுப்பு!

சென்னையில் நதிகளைப் பராமரிக்கத் தவறியதாகத் தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதித்த உத்தரவுக்குத் தடை கோரிய மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

திருவான்மியூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜவஹர்லால் சண்முகம் கடந்த ஆண்டு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், பக்கிங்ஹாம் கால்வாயில் அதிக அளவில் கட்டுமான கழிவுகள், மணற்குவியல்கள், குப்பைகள் இருப்பதால் மழைக்காலத்தில் நீர் செல்ல வழியில்லாமல் வெள்ளம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும், அதனால் அந்த கால்வாயைத் தூர் வார வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை 2019 பிப்ரவரி 16ஆம் தேதி விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கத் தமிழக அரசு தவறிவிட்டது. அடையாறு, கூவம்,பங்கிங்ஹாம் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. நதிகளைப் பராமரிக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டிருந்தது.

அபராதத் தொகை விதிக்கப்பட்டதை எதிர்த்து தமிழக பொதுப்பணித் துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ”கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் அகியவற்றில் மேற்கொண்ட நடவடிக்கைகளைக் கருத்தில் கொள்ளாமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பசுமைத் தீர்ப்பாயம் ஏற்கெனவே ரூ.2 கோடி அபராதம் விதித்ததற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது” என்று வாதிடப்பட்டது.

அப்போது, இதுதொடர்பாக பசுமைத் தீர்ப்பாயம், மனுதாரர் ஜவஹர்லால் சண்முகம் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழக அரசின் மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், பசுமை தீர்ப்பாயம் அபராதம் விதித்ததற்குத் தடை விதிக்க முடியாது என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க

மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடிக்கு டெல்லி போட்டுத் தந்த ப்ளான்!

ஏ.எல்.விஜய் திருமணக் கொண்டாட்டம்!!

அத்திவரதரை தரிசித்த விஜயகாந்த்

பாரதியார் பாடல்: நிர்மலாவைப் பாராட்டிய சிதம்பரம்


வெள்ளி, 12 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon