மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 14 ஆக 2020

நீதிமன்றத்திற்கு சவாலா? தலைமை நீதிபதி கேள்வி!

நீதிமன்றத்திற்கு சவாலா? தலைமை நீதிபதி கேள்வி!

கர்நாடக அரசியல் நெருக்கடி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் இன்று (ஜூலை 12) விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரொஹத்கி, “எம்.எல்.ஏக்களை சந்தித்தபிறகும் சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உரிய நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக அவர் செய்தியாளர்களை சந்தித்து எம்.எல்.ஏக்கள் ஏன் நீதிமன்றத்துக்கு சென்றார்கள் என கேள்வியெழுப்பியுள்ளார்.

ஒருபுறம், ஒரே நாளில் முடிவெடுக்க தன்னால் முடியாது என சபாநாயகர் ரமேஷ் குமார் கூறுகிறார். மறுபுறம், நீதிமன்றம் தனக்கு உத்தரவிட முடியாது எனவும் கூறுகிறார். நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் அவர் முடிவெடுக்கவில்லை என்றால் அவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

அப்போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், “உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கும், உரிமைகளுக்கும் சபாநாயகர் சவால் விடுகிறாரா? நீதிமன்றம் கைகட்டி கொண்டு இருக்க வேண்டுமென சபாநாயகர் எதிர்பார்க்கிறாரா?” என்று கேள்வியெழுப்பினார்.

அப்போது கர்நாடக முதல்வர் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, “நானும் ஒரு அரசியலமைப்பு ஊழியர்தான். எம்.எல்.ஏக்கள் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளனர். சபாநாயகர் தப்பித்துக்கொள்வதாக முன்பு எம்.எல்.ஏக்கள் குற்றம்சாட்டினர். இப்போது, அவர்கள்தான் சபாநாயகரை சந்திக்க வரவில்லை என்று கூறுகின்றனர்” என்று தெரிவித்தார்.

அப்போது, தகுதிநீக்க விவகாரத்தில்தான் முதலில் முடிவெடுக்க வேண்டும் என விரும்புகிறீர்களா என்று தலைமை நீதிபதி கேள்வியெழுப்பினார். அதற்கு அபிஷேக் மனு சிங்வி, “தகுதிநீக்கமும், ராஜினாமாவும் வெவ்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும். நீதிமன்றத்தில் முன்முடிவுகளை உருவாக்க அவர்கள் முயல்கின்றனர். மேலோட்டமான விளக்கங்களை மட்டுமே கொடுக்கின்றனர்.

10 எம்.எல்.ஏக்களும் தகுதிநீக்க நடைமுறைகளை சந்திக்கின்றனர். ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கிய எட்டு எம்.எல்.ஏக்களுக்கு தகுதிநீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நேற்று நடந்த கூட்டத்தில், ஆளுநரை சந்தித்ததாகவும், ரெசார்டுக்கு சென்றதாகவும், மும்பைக்கு சென்றதாகவும், சபாநாயகரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கவில்லை எனவும் எம்.எல்.ஏக்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். தகுதிநீக்கத்தை தவிர்ப்பதற்காகவே எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர்” என்று தெரிவித்தார்.

மறுபுறம், கர்நாடக சட்டமன்றம் இன்று கூடுவதால் பெங்களூருவில் எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்திற்கு வந்தனர். அரசியல் நெருக்கடிக்கு இடையே இந்தக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மேலும் படிக்க

மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடிக்கு டெல்லி போட்டுத் தந்த ப்ளான்!

ஏ.எல்.விஜய் திருமணக் கொண்டாட்டம்!!

அத்திவரதரை தரிசித்த விஜயகாந்த்

பாரதியார் பாடல்: நிர்மலாவைப் பாராட்டிய சிதம்பரம்


வெள்ளி, 12 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon