மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 14 ஆக 2020

தமிழகத்திலும் தொடரும் மாட்டுக்கறி தாக்குதல்!

தமிழகத்திலும் தொடரும் மாட்டுக்கறி தாக்குதல்!

நாகையில் மாட்டுக்கறி சாப்பிட்ட இளைஞர் ஒருவரை, இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பசு பாதுகாப்பு என்ற பெயரில், வடமாநிலங்களில் அப்பாவி மக்கள் மீதான தாக்குதல் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது. இது தற்போது தமிழகத்திலும் தொடர்கிறது.

நாகப்பட்டினம் அடுத்துள்ள பொரவச்சேரியை சேர்ந்தவர் முகமது பைசான். இவர் தன் நண்பர்களுடன் மாட்டுக்கறி சாப்பிட்டுள்ளார். இதனை படம் பிடித்து, ‘ஆயிரம்தான் சொல்லு மாட்டுக்கறி மாட்டுக்கறி தான்யா’ என்று தனது முகநூலில் நேற்று (ஜூலை 11) பதிவிட்டுள்ளார். இதனை கண்ட இந்து அமைப்பைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர், நேற்று இரவு முகமது பைசான் வீட்டிற்கு சென்று கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த முகமதை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த தாக்குதல் தொடர்பாக முகமது பைசான் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் விசாரணை , இந்த தாக்குதலை நடத்தியது இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர்களில் திணேஷ் குமார், கணேஷ் குமார், அகஸ்தியன், மோகன் குமார் ஆகியோர் மீது கீழ்வேளூர் காவல்துறை 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை கைது செய்த போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட மற்றவர்களையும் தேடி வருகின்றனர்.

முஸ்லீம் இளைஞர் மீதான தாக்குதலைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா அறிக்கை ஒன்றை இன்று (ஜூலை 12) வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “நாட்டில் பாஜக இரண்டாவது முறை அதிகாரத்தை கைப்பற்றியதில் இருந்து சங்கி கும்பல் அராஜகமும் அதிகரித்துள்ளது. கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியின் போதே மாட்டுக்கறி சாப்பிட்டதற்காகவும், மாடுகளை வாகனங்களில் ஏற்றிச் சென்றதற்காகவும், உ.பி, ஜார்க்கண்ட் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் அப்பாவி மக்களை அடித்து துன்புறுத்தினார்கள். அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழகத்திலும் அரங்கேறியுள்ளது. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மற்றும் சமூக அமைதியைச் சீர்குலைக்கத் திட்டமிட்டு சில வன்முறை கும்பல்களால் இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் நடத்தப்படுகிறது. எனவே தமிழக காவல்துறை இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களையும் அவர்களை ஏவியவர்களையும் கண்டுபிடித்து அவர்கள்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடு முழுவதும் கல்வி உரிமை, கலாச்சார உரிமை, உணவு உரிமை, சிவில் உரிமை ஆகியவற்றை முடக்கி ஒற்றை கலாச்சாரத்தைத் திணிக்க நினைக்கிற இந்துத்துவா அமைப்புகள் கொடூரமான வன்முறை தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. தேசத்தின் பன்முக கலாச்சாரத்தைப் பாதுகாத்திட அரசு உறுதியுடன் செயல்பட வேண்டும். பாரம்பரியமிக்க தமிழக மண்ணில் சிறுபான்மை மக்களின் உரிமையும், தலித் மக்கள் உரிமையும், ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது. தமிழகத்தில் முதல்முறையாக இந்துத்துவா அமைப்புகள் இத்தகைய கொடூரமான தாக்குதலை நிகழ்த்தி இருக்கிறது. இது முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்” என கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க

மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?

நாங்கள் 150 பேர் எழுந்து நின்றால்: ஜெகன் ஆவேசம்!

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடிக்கு டெல்லி போட்டுத் தந்த ப்ளான்!

ஏ.எல்.விஜய் திருமணக் கொண்டாட்டம்!!

அத்திவரதரை தரிசித்த விஜயகாந்த்


வெள்ளி, 12 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon